PUBLISHED ON : மே 03, 2025

நாடுகளுக்குள் பயணம் செய்ய தேவையான முக்கிய ஆவணம், 'பாஸ்போர்ட்' என்ற கடவுச்சீட்டு. இந்த நடைமுறை துவங்கி, 100 ஆண்டுகளுக்கு மேல் ஆகிறது. ஆனால், உலகில் மூன்று பேருக்கு, எந்த நாட்டுக்கு செல்லவும் பாஸ்போர்ட் தேவையில்லை என்ற சிறப்பு கவுரவம் உள்ளது.
அது பற்றி பார்ப்போம்...
முதல் உலகப்போருக்கு பின், பாஸ்போர்ட் நடைமுறை முக்கியத்துவம் பெற்றது. வெளிநாட்டு பயணத்துக்கு அதிகாரப்பூர்வ ஆவணமாக மாறியுள்ளது. இதை எல்லா நாடுகளும் அமல்படுத்தியுள்ளன. இப்போது மின்னணு பாஸ்போர்ட் நடைமுறை அமலுக்கு வந்துள்ளது. இந்த நிலையில் உலகில் எங்கு செல்லவும் மூன்று பேருக்கு மட்டும் பாஸ்போர்ட் தேவையில்லை.
ஐரோப்பிய நாடான பிரிட்டன் ராணி எலிசபெத்துக்கு இந்த மதிப்பதிகாரம் இருந்தது. அவரது மறைவுக்கு பின், அனைத்து நாடுகளுக்கும் ஒரு செய்தி அனுப்பியது அந்த நாட்டு வெளியுறவுத்துறை.
அதில்...
பிரிட்டன் அரச குடும்ப தலைமை பொறுப்பில் மன்னர் சார்லஸ் இருக்கிறார்; முழு மரியாதையுடன் அவர் எங்கும் செல்ல அனுமதிக்க வேண்டும்; இதில் தடை இருக்கக் கூடாது.
இதுதான் அந்த செய்தி. பிரிட்டன் மன்னருக்கு உள்ள உரிமை, அவரது மனைவிக்கு கிடையாது. அரச குடும்பத்தில் முக்கிய நபர்களுக்கு, ராஜதந்திர பாஸ்போர்ட் வழங்கப்படுகிறது. இதற்கு சிறப்பு கவனம் மற்றும் மரியாதையை வழங்குகின்றன உலக நாடுகள்.
கிழக்காசிய நாடான ஜப்பான் பேரரசர் நருஹிட்டோ, அவரது மனைவி பேரரசி மசாகோ ஓவாடா உலகில் எங்கு செல்லவும், இவர்களுக்கு பாஸ்போர்ட் தேவையில்லை. பயணத்திட்டம் குறித்து உரிய நாடுகளுக்கு முன்கூட்டியே தெரிவித்துவிடும் ஜப்பான் வெளியுறவு துறை.
ஒரு நாட்டின் பிரதமர், ஜனாதிபதி உலகில் மற்றொரு நாட்டுக்கு செல்லும் போது, பாஸ்போர்ட் வைத்திருக்க வேண்டும். அது துாதரக கவுரவம் பெற்றதாக இருக்கும். பாதுகாப்பு சோதனை, பிற நடைமுறைகளில் இருந்து விலக்கு அளிக்கப்படும். இந்தியாவில் ஜனாதிபதி, துணை ஜனாதிபதி மற்றும் பிரதமருக்கு இந்த கவுரவம் உண்டு.
நம்நாடு மூன்று வகை பாஸ்போர்ட்களை வழங்குகிறது. பொதுமக்களுக்கு நீலநிறத்தில் அமைந்துள்ளது. அரசு தொடர்புடைய உயர் அதிகாரிகள் மற்றும் அமைச்சர்களுக்கு உத்தியோகபூர்வ மற்றும் ராஜதந்திர பாஸ்போர்ட், வெண்மை மற்றும் மெரூன் நிறத்தில் அமைந்துள்ளது. உச்ச பட்ச சலுகை உடைய பாஸ்போர்ட், ஜனாதிபதி, துணை ஜனாதிபதி மற்றும் பிரதமருக்கு ஆரஞ்சு வண்ணத்தில் வழங்கப்படுகிறது.
- வி.கவுதம சித்தார்த்