PUBLISHED ON : மார் 07, 2026

சென்னை, திருவல்லிக்கேணி, தயானந்த சரஸ்வதி பாடசாலையில், 1965ல், 5ம் வகுப்பு படித்தேன்.
ஒருநாள், 'ஒரு புத்தக பதிப்பகம், நம் பள்ளியில் புத்தக கண்காட்சி நடத்த வந்துள்ளது. மாணவ -- மாணவியர், புத்தகங்களை பார்வையிட்டு, தேவையானதை வாங்கி கொள்ளலாம்...' என அறிவித்தார், பள்ளியின் தலைமை ஆசிரியர் கண்ணியப்ப நாயக்கர்.
'புத்தகம் வாங்க என்னிடம் இப்போது பணமில்லை...' என்றேன், நான். அதற்கு, 'நீ விரும்பும் புத்தகத்தை தேர்ந்தெடு. அதற்கான பணத்தை நான் தருகிறேன்...' என்றார்.
என்னை மிகவும் கவர்ந்த, 'குப்பையில் மாணிக்கம்' என்ற தலைப்பிலான புத்தகத்தை தேர்வு செய்தேன். தலைமை ஆசிரியரே பணம் கொடுத்தார்.
அது கற்பனை கதையாக இருக்கும் என கருதினேன். அன்று மாலை, வீட்டுக்கு சென்றதும், புத்தகத்தை படிக்க ஆரம்பித்தேன். அந்த புத்தகத்தில், நாம் தினமும் வேண்டாமென்று வெளியே கொட்டும் குப்பையை, எப்படியெல்லாம் உரமாக்கி விவசாயத்திற்கு உபயோகிப்பது என்றும், அதன் வாயிலாக எப்படி வருமானம் ஈட்டலாம் என்றும் வழிகாட்டி இருந்தது. குப்பை ஒரு மாணிக்கம் தான் என, உணர வைத்தது. அதைத் தொடர்ந்து, பயனுள்ள புத்தகங்களை படிப்பதை வழக்கமாக்கிக் கொண்டேன்.
தற்போது என் வயது, 71. ஒவ்வொரு முறையும், நல்ல புத்தகங்களை தேடி வாங்கும் போது, என் தலைமை ஆசிரியர் கண்ணியப்ப நாயக்கர் நினைவில் வருகிறார்.
- மு.சு.நாகராசன், சென்னை. தொடர்புக்கு: 98840 98884
