PUBLISHED ON : மார் 05, 2026

திண்டுக்கல் மாவட்டம், பழனி தண்டாயுதபாணி தேவஸ்தான உயர்நிலைப் பள்ளியில், 2008-ல், 10ம் வகுப்பு படித்தேன்.
பள்ளிக்கு அவ்வப்போது காலதாமதமாகச் செல்வதை வழக்கமாக கொண்டிருந்தேன். இதை கவனித்த வகுப்பு ஆசிரியை தேன்மொழி, நேரத்தின் மகத்துவம் பற்றி சொன்னார்...
'யாருக்காகவும், எதற்காகவும் காலத்தை நிறுத்தி வைக்க இயலாது. ஓட்டப் பந்தய வீரர்கள், ஒரு நொடி தாமதத்தால், மிகப்பெரும் வெற்றிகளை இழந்திருக்கின்றனர். அந்த ஒரு நொடி மகிமையை தவறவிட்டதால், மறு போட்டிக்கு அடுத்த ஆண்டு வரை, அதாவது, 3 கோடியே, 15 லட்சத்து, 36 ஆயிரம் நொடிகள் காத்திருக்க நேரிடுகிறது...
'அதனால் தான், காலத்தை பொன் போன்றது என்கின்றனர். வகுப்புகள் ஆரம்பிக்கும் போது, அங்கு நாம் இருக்க வேண்டும். நாம் மனது வைத்தால், காலதாமதத்தை நிச்சயம் தவிர்க்க முடியும்...' என, அறிவுரை கூறினார்.
நான் மிக வருத்தமடைந்தேன். 'இனி வகுப்புக்கு தாமதமாக வரவே கூடாது' என, முடிவு செய்தேன். அதன்பின், பள்ளி, கல்லுாரிகளுக்கு ஒருநாளும் நான் தாமதமாக சென்றதே இல்லை.
எனக்கு இப்போது வயது, 33. தனியார் நிறுவனத்தில் மேலாளராக வேலை செய்கிறேன். வேலையில் சேர்ந்தது முதல் இப்போது வரை, ஒருநாள் கூட அலுவலகத்திற்கு தாமதமாக சென்றதில்லை. பள்ளியில் படிக்கும் வயதில், நேர மேலாண்மையை எனக்கு அழுத்தமாய் போதித்த வகுப்பாசிரியை தேன்மொழியை நன்றியோடு நினைவு கூர்கிறேன்.
- எம்.அபிராமி, பழனி. தொடர்புக்கு: 88258 75868
