PUBLISHED ON : மார் 07, 2026

முன்கதை: ஊர், ஊராக செல்லும் நாடோடிக்கு, 'அழைக்கும் போதெல்லாம், ஒரு தேவதை தோன்றி உதவி செய்யும்' என்ற, வரம் கிடைத்தது. தேவதை அளித்த, பறக்கும் கம்பளத்தை மன்னருக்கு வழங்க சென்றான் நாடோடி. அதில் ஏறி, அரண்மனைக்குள் பறந்து சென்ற போது, அவனை காவலர்கள் கைது செய்து, மன்னர் முன் நிறுத்தினர். இனி -
நாடோடிக்கு உடல் வியர்த்தது.
'யோசிக்காமல் எவ்வளவு பெரிய தவறைச் செய்து விட்டோம்...' என்று நினைத்தபோது, இதயம் சற்று வேகமாகத் துடிக்க ஆரம்பித்தது.
'வீரர்களின் கட்டளையையும் மீறி, ஒரு சாதாரண மனிதன், சுலபமாக அரண்மனைக்குள் நுழைந்து விட்டானே... ஒருவேளை இவன் அண்டை நாட்டு ஒற்றனாக இருந்தால் நாட்டிற்கு பெரும் ஆபத்து அல்லவா விளையும்...'
பலவாறு யோசித்த மன்னரின் முகத்தில், கோபம் தாண்டவமாடியது.
'என்ன தைரியம் இருந்தால், வீரர்கள் தடுத்தும் நீ அரண்மனைக்குள் நுழைந்திருப்பாய்... நீ செய்தது எவ்வளவு பெரிய குற்றம் என்று உனக்குத் தெரியுமா... இதற்கு என்ன தண்டனை தெரியுமா...'
மன்னர் கோபத்துடன் நடத்திய விசாரணையில், நாடோடிக்கு சப்தநாடியும் ஒடுங்கியது. பயத்தில் அவனுக்கு பேச்சே வரவில்லை.
'ஒருவேளை மரணதண்டனை விதிப்பாரோ...' என்று நினைத்தான்.
பதில் சொன்னால் தான் உயிர் பிழைக்க முடியும் என்பதை உணர்ந்து, தைரியத்தை வரவழைத்து பேசத் துவங்கினான் நாடோடி...
'மன்னா, என்னை மன்னிக்க வேண்டும். ஊர், ஊராக சுற்றி வருவதால், என்னை எல்லாரும் நாடோடி என்றே அழைப்பர். நேற்று உங்கள் நகரத்திற்குள் நுழைந்தேன். நீங்கள் மிகவும் நல்லவர் என்பதை, உங்கள் நாட்டு மக்கள் மூலமாக அறிந்தேன்...
'தங்களுக்கு பறப்பதற்கு கருவி தேவை என்று, தண்டோரா மூலம் செய்த அறிவிப்பைக் கேட்டேன். தங்களுக்கு உதவுவது என் கடமை எனத் தோன்றியது. அதனால், உங்களுக்கு தருவதற்காக பறக்கும் கம்பளத்தை எடுத்து வந்தேன். ஆனால், காவலர்கள் அனுமதிக்க மறுத்ததால், பறக்கும் கம்பளத்தில் வந்து அரண்மனைக்குள் இறங்கி விட்டேன்...'
நடந்ததை விளக்கினான், நாடோடி.
'நீ செய்தது தவறுதான். ஆனாலும், எனக்காக பறக்கும் கம்பளத்தை கொண்டு வந்ததால், உன்னை மன்னிக்கிறேன். நீ கொண்டு வந்ததை எனக்கு இயக்கி காட்டு...' என்றார், மன்னர்.
மன்னரின் மனமாற்றத்தால், நாடோடிக்கு நிம்மதி ஏற்பட்டது.
தான் கொண்டு வந்த பறக்கும் கம்பளத்தை, மன்னரின் முன்னால் தரையில் விரித்தான். அதன் மீது ஏறி அமர்ந்து, 'பற...' என்றான்.
பறக்கும் கம்பளம், மேலே எழும்பி பறக்கத் துவங்கியது.
பறக்கும் கம்பளத்தில் அமர்ந்தபடியே, அரண்மனையின் தர்பார் மண்டபத்தைச் சுற்றி வந்தான், நாடோடி. சற்று நேரம் கழித்து, 'இறங்கு...' என்று கட்டளையிட, பறக்கும் கம்பளம் தரையில் இறங்கியது.
இதைப் பார்த்த மன்னர், பெரும் வியப்பில் ஆழ்ந்தார். அவரால், அதை நம்பவே முடியவில்லை.
'பேஷ்... உன்னை எப்படி பாராட்டுவது என்றே தெரியவில்லை. எப்படி இது இயங்குகிறது...' என்றார், மன்னர்.
'கம்பளத்தின் மீது ஏறி அமர்ந்து, 'பற...' என்றால் பறக்கும்; 'இறங்கு...' என்றால் இறங்கும். அவ்வளவுதான்...'
பறக்கும் கம்பளத்தின் ரகசியத்தை விளக்கினான், நாடோடி.
மகிழ்ச்சியடைந்த மன்னர், தண்டோரா அறிவிப்பின் படி, நாடோடிக்கு பரிசு வழங்க முடிவு செய்தார்.
'உடனே, ஒரு லட்சம் வராகன்களை கொண்டு வாருங்கள்...' என்று, அமைச்சருக்கு கட்டளையிட்டார், மன்னர்.
சற்று நேரத்தில் ஒரு அழகான பெட்டியில், ஒரு லட்சம் வராகன்களை வைத்து, அதை கஜானா அதிகாரி எடுத்து வந்தார்.
திடீரென, மன்னர் மனதில் குழப்பம் ஏற்பட்டது. 'இதில், யார் ஏறி அமர்ந்தாலும் பறக்குமா...' என்ற சந்தேகம் எழுந்தது.
நாடோடியை பார்த்து, 'இதில், நான் பறந்து பார்க்க வேண்டும்...' என்றார், மன்னர்.
'தாராளமாக...' என்றான், நாடோடி.
பறக்கும் கம்பளத்தில் ஆவலுடன் ஏறி அமர்ந்தார் மன்னர்.
'பற...' என, கட்டளையிட்டார்.
ஆனால், கம்பளம் பறக்கவில்லை.
நாடோடி உள்பட, சபையில் இருந்த அனைவரும் அதிர்ச்சியடைந்தனர்.
- தொடரும்...
ஆர்.வி.பதி
