
உலகின் முதல் பயணியர் 'லிப்ட்' எலிஷா ஓடிஸ் என்பவரால், அமெரிக்கா, நியூயார்க் நகரில் அமைக்கப்பட்டது. அங்குள்ள கிரிஸ்டல் பேலஸ் பகுதியில், கயிறு அறுந்தாலும் விழாத வகையில் பாதுகாப்புடன், கி.பி., 1853ல் இயக்கப்பட்டது. இதுவே, ஓடிஸ் என்ற லிப்ட் நிறுவன துவக்கமாக அமைந்தது.
லிப்ட் வரலாறு மிகப் பழமையானது. கி.மு., 3ம் நுாற்றாண்டில், கிரேக்க கணிதவியலாளர் ஆர்க்கிமிடிஸ், கயிறு மற்றும் விலங்குகளைப் பயன்படுத்தி, உயர்த்தும் சாதனம் ஒன்றை உருவாக்கியருந்ததாக வரலாற்றில் தகவல் உள்ளது.
ஐரோப்பிய நாடுகளான இங்கிலாந்து, பிரான்ஸ் அரண்மனைகளில், இதுபோன்ற உயர்த்தி இறக்கும் அமைப்பு, 17ம் நுாற்றாண்டில் புழக்கத்தில் வந்தது.
பிரான்ஸ் நாட்டில் வெர்செய்ல்ஸ் அரண்மனையில், பறக்கும் நாற்காலி என்ற பெயரில், கி.பி., 1743ல் அமைக்கப்பட்டது. ரஷ்யா நாட்டை சேர்ந்த இவான் குலிபின் என்பவர் புதிய தொழில்நுட்பத்தில் லிப்ட் ஒன்றை கி.பி., 1793ல் வடிவமைத்தார். தொடர்ந்து நீராவியால் இயங்கும் லிப்ட், 19ம் நுாற்றாண்டில் தோன்றியது.
இங்கிலாந்து, லண்டனில், 'உயரும் அறை' என்ற பெயரில் லிப்ட், சுற்றுலாப் பயணிகளை, 1823ல் ஈர்த்தது. இதில் கயிறு சுழற்சி அமைப்பை ஹென்றி வாட்டர்மேன் என்பவர், 1840ல் உருவாக்கினார். தொடர்ந்து தானியங்கிக் கதவு முறை அறிமுகமானது.
முழுமையான தானியங்கி லிப்ட், 1900ல் செயல்பாட்டுக்கு வந்தது. தொடர்ந்து அவசர சுவிட்ச், தொலைபேசி போன்ற பாதுகாப்பு அம்சங்கள் இதில் சேர்க்கப்பட்டன. இப்போது, மின்சக்தியில் இயங்கும் லிப்ட் பயன்பாட்டில் உள்ளது. உயரமான கட்டடங்களில், மின்காந்த விசையால் வேகமாக நகரும் லிப்ட் பயன்பாட்டுக்கு வந்துள்ளது.
- வி.கவுதம சித்தார்த்