
தர்மம் மற்றும் இரக்க குணம் உடையவர் மகாராஜா பிரித்திவிராஜ்.
பண்டிதர்களுக்கும், புத்திசாலிகளுக்கும் அவரது சபையில் எப்போதும் தனி மரியாதை உண்டு.
ஒரு நாள் -
முதிய பிச்சைக்காரர் அரசவையை நாடி வந்தார்.
'எங்கே போகிறாய்... நில்...'
சிப்பாய்கள் தடுத்தனர்.
'என்னை தடுக்காதீர்... நான் மகாராஜாவின் சகோதரன்...' என்றார் பிச்சைக்காரர்.
'மகாராஜாவிற்கு சகோதரர் யாருமில்லை. கோட்டைக்குள் பிச்சை எடுக்க அனுமதி கிடையாது...'
'பொய் சொல்லவில்லை... மகாராஜாவிடம் நான் வந்திருப்பதாக கூறுங்கள்...'
ஒரு சிப்பாய் ஓடி சென்று, 'மகாராஜா... பிச்சைக்காரர் ஒருவர் தகராறு செய்கிறார். உங்கள் சகோதரர் என்று கூறுகிறார்...' என்று கூறினார்.
இது கேட்டதும், 'சரி... அவரை வரச் சொல்...' என்றார் மகாராஜா.
அதன்படி, முதியவரை அனுமதித்தனர்.
வந்தவரிடம், 'வணக்கம்... சகோதரரே... எப்படி இருக்கிறீர்...' என நலம் விசாரித்தார் மகாராஜா.
'நல்ல செய்தியுடன் வரவில்லை. என்னிடம் பணியாற்றிய, 32 வேலைக்காரர்கள் சென்று விட்டனர். வயதாகி விட்டதால் என் ஐந்து மகாராணியரும் பிரிந்து விட்டனர்...' என்றார் பிச்சைக்காரர்.
'இவருக்கு, 50 பொற்காசுகளை கொடுத்து அனுப்புங்கள்...'
'எனக்கு, 50 தானா... பத்தாது...'
'சகோதரரே... ராஜ்ஜியத்தில் போதுமான செல்வம் இல்லை. வேண்டுமென்றால், இந்த, 50 பொற்காசுகளை எடுத்துச் செல்லுங்கள்...' என்றார் மகாராஜா.
சற்று யோசித்த பிச்சைக்காரர், 'நாட்டில் செல்வம் பெருக வேண்டும் என்றால், நீங்கள் என்னோடு வரலாம். ஏழு கடல் தாண்டினால், தங்க மணல் கொட்டிக் கிடக்கிற பகுதி உள்ளது. அதை உங்கள் சொத்தாக்கிக் கொள்ளலாம்...'
'ஆனால், ஏழு கடல் தாண்டி எப்படி வருவது...'
'என் மாயாஜாலத்தை பாருங்க... நான் எங்கே கால் பதித்தாலும், அது கடலாக இருந்தாலும் கூட வற்றிப் போய் விடும்...'
இதை கேட்டதும், மந்திரியை அழைத்தார் மகாராஜா. பிச்சைக்காரருக்கு, 500 பொற்காசுகள் வழங்க உத்தரவிட்டார்.
நிதானமான மந்திரி, 'மகாராஜா... உங்க உத்தரவு புரியவில்லை. எதற்காக, 500 பொற்காசுகள் பிச்சைக்காரருக்கு கொடுக்க சொன்னீர்...' என்று கேட்டார்.
புன்னகைத்தபடி, 'இந்த பிச்சைக்காரர் மிகவும் புத்திசாலி. ஆனால், துரதிஷ்டசாலி. பொற்காசுக்கு, இரண்டு பக்கங்கள் உள்ளதை குறிப்பிடுகிறார். மகாராஜாவாக இருப்பவர், ஒருநாள் பிச்சைக்காரராக மாறி விடக் கூடும் என்பதை உணர்த்துகிறார்....' என்றார் மகாராஜா.
'சிந்தித்து தான் முடிவு எடுத்தீர்களா...'
கேட்டார் மந்திரி.
'பிச்சைக்காரரின் நிலைமை நன்கு புரிகிறது. அவர் குறிப்பிடும், 32 வேலைக்காரரர்கள் என்பது, அவரது பற்களை குறிப்பிடுகிறது. ஐந்து மனைவியர் என்பது ஐந்து புலன் உணர்வுகள் மறைந்ததை குறிப்பிடுகிறார்... அதை புரிந்து தான் செயல்படுகிறேன்...'
மகாராஜாவின் பதிலை கேட்டு ஆச்சரியத்தில் மூழ்கினார் மந்திரி.
குட்டீஸ்... வாழ்நாளில் அனுபவமாக கற்றுக்கொள்வது எப்போதும் பயன் தரும்.
லோ.ஜீவபாரதி