
அன்பு ஆன்டிக்கு...
என் வயது, 13; தனியார் பள்ளியில், 8ம் வகுப்பு படிக்கும் சிறுவன். சமீபத்தில், என் தந்தைக்கு சிறுநீரகத்தில் கல் இருப்பதாக, மருத்துவ பரிசோதனையில் கண்டறியப்பட்டது. அதை சரி செய்வதற்கு, ஹோமியோபதி மருத்துவத்தில் சிகிச்சை பெற்று மருந்துகள் சாப்பிட்டுக் கொண்டிருக்கிறார்.
எங்கள் வீட்டுக்கு, வாரத்துக்கு ஒருமுறை வரும் சித்தப்பா இதை கேள்விபட்டு, என் தந்தையை கடிந்து கொண்டார். 'ஹோமியோபதி மருந்து, மாத்திரைகள் எல்லாமே, 'பிளாசிபோ எபக்ட்ஸ்' உள்ளவை. ஆங்கில மருத்துவரை பார்த்து மருத்துவ சிகிச்சை செய்யவும்' என்று சொல்லி சென்றார். அதென்ன, பிளாசிபோ எபக்ட்... எனக்கு ஒன்றும் புரியவில்லை. அது குறித்து விளக்குங்க ஆன்டி.
இப்படிக்கு,
ஆ.அருள்வலன்.
அன்பு செல்லத்துக்கு...
'பிளாசிபோ எபக்ட்' என்றால், தமிழில், 'மருந்து போலி விளைவு' என அர்த்தம். ஆறுதல் மருந்து அல்லது வெற்று மருந்து எனவும் கூறுவர்.
எவ்வித மருத்துவ பண்புகளும் இல்லாத, குறிப்பிட்ட நோயை குணபடுத்தக்கூடிய மருத்துவக் கூறுகள் உறுதி செய்யப்படாத ஒரு பொருளை, மிகுந்த நம்பிக்கையுடன் உட்கொள்கிறார் ஒரு நோயாளி.
அதை சாப்பிட்டதால் உடல் குணமாகிறது என, உளமாற நம்பினால், அவருக்கு உளவியல் உடல் மாற்றங்கள் நடக்கின்றன. இதுவே, மருந்தின் போலி தாக்கம். ஒரு நோய் குணமாவதில் மனித உடலுக்கும், மனதுக்கும் நெருங்கிய தொடர்பு இருக்கிறது.
நோய் நிச்சயமாக குணமாகும் என, மனம் நம்பினால் சர்வநிச்சயமாக நடந்து விடும்.
குணமாகாது என மனம் நம்பினால் ராஜ வைத்தியம் மேற்கொண்டாலும் நடக்காது.
ஒரு மருத்துவரின் நற்பெயர், நோயாளியிடம் அவர் நடந்து கொள்ளும் விதம், தோரணை போன்றவையே ஒரு நோய் குணமாவதற்கான பாதி மாத்திரையாக உள்ளது.
மந்திரிப்பது, குறி கேட்பது, தாயத்து கட்டிக் கொள்வது, வேப்பிலை அடிப்பது, நாடி ஜோதிடம் பார்ப்பது, தோஷங்களுக்கு பரிகாரம் செய்வது அனைத்துமே மருந்து போலி விளைவுகள் என்று தான் எடுத்துக் கொள்ள வேண்டும்.
சில நோய்கள், சில நாட்களுக்கு பின், தானாகவே சரியாகி விடும். அவற்றுக்கு, இவ்வகை வெற்று மருந்து சிறப்பாக வேலை செய்யும்.
பிளாசிபோ எபக்ட் என்பதற்கு எதிர்பதமாய், 'நோசிபோ எபக்ட்' என ஒரு மருத்துவ நிலை இருக்கிறது.
மருத்துவர்கள் என்ன தான் உயர்தர வீரிய மருத்துவம் செய்தாலும், இது போன்றோருக்கு குணமாகாது.
எடுத்துக் கொள்ளும் மருந்தின் பக்கவிளைவு, மருத்துவர் மீதான அவநம்பிக்கை, மருத்துவத்திற்கான செலவு, குறிப்பிட்ட மருத்துவரின் கடந்த கால செயல்பாடுகள், உட்கொள்ளும் மருந்தில் எதிர்மறை விளைவுகளை ஏற்படுத்துகின்றன.
நேர்மறை அல்லது எதிர்மறை எண்ணங்களே மருத்துவத்தின் இறுதி இலக்கை தீர்மானிக்கின்றன.
டாக்டர் சாமுவேல் ஹனிமேன் என்பவரால் தோற்றுவிக்கப்பட்ட மாற்று மருத்துவம், ஹோமியோபதி. இவர், 1755 முதல், 1843 வரை வாழ்ந்தார். உலகில், 20 கோடி பேர் ஹோமியோபதி மருத்துவத்தை தொழிலாக மேற்கொள்கின்றனர்.
வெறும் சர்க்கரை உருண்டைகளும், ரசாயன நீரும் தான் ஹோமியோபதி மருத்துவம் என்பது அறியாமை.
நீண்ட காலம் நீடிக்கும் நோய்களுக்கு, பக்கவிளைவுகள் இல்லாத சிறந்த மருத்துவமாக புகழ் பெற்றுள்ளது, ஹோமியோபதி.
இந்தியாவில், ஆண்டிற்கு, 600 கோடி ரூபாய் பெறுமானமுள்ள ஹோமியோபதி மருந்துகள் விற்பனை ஆகின்றன.
உன் தந்தை ஹோமியோபதி மருத்துவம் மேற்கொண்ட பின், சிறுநீரக கல் கரைந்திருக்கிறதா என்பதை பரிசோதித்து தெரிந்து கொள்ளவும். எவ்வித முன்னேற்றமும் இல்லை என தெரிந்தால், ஆங்கில மருத்துவமான அலோபதியில் சிகிச்சை பெறலாம்!
- அள்ளக்குறையா அன்புடன், பிளாரன்ஸ்.