
திருவண்ணாமலை மாவட்டம், தெள்ளாறு உயர்நிலைப் பள்ளியில், 1968ல், எஸ்.எஸ்.எல். சி., படித்தேன். ஆங்கில பாட கேள்வி - பதில் குறிப்பு நோட்டுகளுக்கு, காக்கி வண்ண அட்டை போட்டு, சுவாமி விவேகானந்தர், காந்திஜி படங்களை ஒட்டி வைத்திருந்தேன்.
அதைப் பார்த்தவுடன், 'புகழ்பெற்ற தலைவர்களின் படங்களை ஒட்டி வைத்துள்ளாயே... நீயும், அவர்களைப் போல சாதனை படைக்க வேண்டும்... அதற்கு முயற்சி செய்...' என்றார் ஆங்கில ஆசிரியர் டி.ஏ.ராமநாதன். அந்த அறிவுரையை அப்போது பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை.பள்ளி படிப்புக்கு பின், ஆசிரியர் பயிற்சி முடித்து பணியில் சேர்ந்தேன்; கடமையில் கண்ணாக இருந்தேன். கற்பிக்கும் செயலில் கூர்மையுடன் செயல்பட்டதால், 2003ல், சிறந்த ஆசிரியருக்கான, டாக்டர் ராதாகிருஷ்ணன் விருது கிடைத்தது.
இதுபற்றி அறிவிப்பு வந்ததும் அந்த ஆசிரியரை பார்க்க இனிப்புடன் சென்றேன்.படித்துக் கொண்டிருந்த நாளிதழில், என் புகைப்படம் பிரசுரமாகியிருந்ததை சுட்டிக் காட்டி மகிழ்ந்தார்; வகுப்பில் அவர் கூறியதை நினைவு படுத்தியதும் வியந்து அரவணைத்து நெகிழ்ந்தார்.
எனக்கு, 73 வயதாகிறது; தமிழக கல்வித்துறையில் உதவிக்கல்வி அலுவலராக உயர்ந்து ஓய்வு பெற்றேன். என்னை ஊக்குவித்த ஆசிரியரை மனக்கோவிலில் அமர்த்தி நினைவால் நிதமும் வழிபட்டு வாழ்கிறேன்.
- ந.பானு, திருவண்ணாமலை.
தொடர்புக்கு: 94426 95471