PUBLISHED ON : நவ 23, 2024

முன்கதை: வளர்ப்பு மிருகம் மீதான ஆர்வத்தால், காவல்துறையில் ஓய்வு பெற்ற மோப்பநாய் செங்கிஸ்கானை, தந்தை உதவியுடன் தத்தெடுத்தான் சிறுவன் மகிழ். குடியிருப்பில் பாதுகாப்பை உறுதி செய்து அன்பை பெற்றது. அதை பிரிய மனமின்றி பயிற்சியாளராக இருந்த காண்டீபன் கடத்தி சென்றான். இனி -
வேனில் கடத்தி சென்ற சிறிது நேரத்தில் காண்டீபனின் உணர்ச்சி வசனங்களில் உருகியது செங்கிஸ்கான்.
மறுகணமே, மகிழின் குடும்பத்தை மயக்கப்படுத்தி தன்னை வன்முறையாய் கடத்திய செயல் அதன் மனக்கண்ணில் ஓடியது.
'எட்டு ஆண்டு பேரன்பை குலைத்து விட்டீர் குருவே. நகரில் நடக்கும் குற்றங்களை மோப்பம் பிடித்து, குற்றவாளிகளை சட்டத்தின் முன் நிறுத்தும் பணிக்கு மாறாக ஒரு குற்றவாளியாய் நிற்கிறீர்; கவுரவமாக பார்த்து வந்த வேலையை விட்டு, பாதுகாப்பு இல்லாத அத்துவான காட்டுக்கு மனைவியை அழைத்து வந்துள்ளீர். உங்களை முட்டாள் என கூறவா...
'மயக்கம் தெளிந்த பின், மகிழின் குடும்பம், காவல்துறையில் புகார் கொடுத்து, கடத்திய உங்களையும், என்னையும் தேடுமே... மூணாறு என்ன அலாஸ்காவிலா உள்ளது. கேரளாவின் ஒரு பகுதி; இங்கு வந்து, காவல்துறை என்னை மீட்க, நீண்ட நாட்கள் ஆகாது...' என எடுத்துரைத்தது செங்கிஸ்கான்.
காண்டீபன் எவ்வளவோ சமாதானம் செய்தும், அது சிறிதும் அசைந்து கொடுக்கவில்லை.
உதடு பிதுக்கினார் காண்டீபனின் மனைவி.
''செங்கிஸ்கானை துளியும் நம்பாமல், இரும்பு சங்கிலியால் பிணைத்துள்ளீர். அதுவே, அதற்கு பிடிக்காது; அன்பை விட சட்டம் தான் உயர்ந்தது என நினைக்கும். சீக்கிரம் இதை, உங்கள் பிடியில் இருந்து விடுவிப்பான் மகிழ்...''
''இதுபோல் பேசாதே... எனக்கு அறிவுரைக்கும் அளவுக்கு, நீ வளரவில்லை. இங்கிருந்து செல்...''
மனைவியை கடிந்து, செங்கிஸ்கான் காலடியில் அமர்ந்தான் காண்டீபன்.
''எனக்கு, குழந்தை இல்லை. நீ தான் என் மகன்; உன் வாழ்நாளில், 80 சதவீதத்தை என்னிடம் தானே கழித்தாய். நீ கற்ற வித்தைகள் அனைத்தும், நான் சொல்லித் தந்தவை தானே... ஒரு வார ஆடம்பரத்திலும், சுக போகத்திலும் என்னை மறந்து இருப்பது நியாயமா...''
காண்டீபனை ஆழமாய் உன்னித்தது செங்கிஸ்கான்.
'நாம் காவல்துறை பணியில் இருந்தோம். நான், ஓய்வு பெற்றேன். என்னை, ஒரு குடும்பம் தத்து எடுத்துள்ளது. நமக்குள் தந்தை, -மகன் உறவு எப்படி வரும்; நடப்பை அறிவால் அணுகுங்கள். உணர்வால் அணுக வேண்டாம்... ஒருவேளை ஒரு மகள் இருந்தால் மணம் முடித்து வைக்க வேண்டும். பிரிவுத் துயர் தாங்காது மருமகனையும், வீட்டாரையும் தாக்கி, மகளை கடத்தி வருவீரா...'
''இப்படி எல்லாம் பேசாதே செங்கிஸ்கான்...''
'நான் விளையாட்டு பொம்மை அல்ல...'
''தற்சமயம் இப்படி தான் பேசுவாய். ஒரு வாரம் கடந்தால், வழிக்கு வருவாய்...''
'எத்தனை ஆண்டுகள் கடந்தாலும், மாற மாட்டேன்...'
செங்கிஸ்கானுக்கு அருகிலே ஒரு கயிற்று கட்டிலை போட்டு படுத்தான் காண்டீபன்.
இரவு, சட்டி நிறைய மலைத்தேன் எடுத்து வந்து செங்கிஸ்கான் முன் வைத்தான்.
''ஆபத்தில்லாத இனிப்பு. உன் முதல் நாள் இருப்பை, தேன் பரிமாறி கொண்டாடுகிறேன்...''
தேனை முகர்ந்து பார்த்து, துளி கூட நக்கவில்லை செங்கிஸ்கான்.
மறுநாள் -
காலையில் எழுந்தவுடன் நெட்டி முறித்தான் காண்டீபன்.
''வணக்கம் செங்கிஸ்கான்...''
'பதிலளிக்க மாட்டேன்' என்ற தோரணையில் நின்றது.
அசைவம் சமைத்து, எடுத்து வந்து வைத்தான் காண்டீபன்.
முகர்ந்து கூட பார்க்கவில்லை.
விதவிதமான நாய் உணவுகளை எடுத்து வந்து குவித்தான். தொட்டுக் கூட பார்க்கவில்லை செங்கிஸ்கான்.
முதல், இரண்டு, மூன்று என கடந்து, நான்காவது நாள் வந்தது.
''உண்ணாவிரதம் இருக்கிறாயா...''
'ஆமாம்...'
''ஒரு மனுஷன் போயும், போயும் நாயிடம் கூனிக் குறுகி நிற்கிறேன். என் அன்பை ஏற்க மறுக்கிறாய்; உனக்கு, சிறிது நேரம் அவகாசம் அளிக்கிறேன். அதற்குள், நீ சாப்பிடவில்லை என்றால், இங்கு நடக்க இருப்பதே வேற...''
காண்டீபனின் செயலை கண்டு இறுகியது செங்கிஸ்கான்.
நேரம் கடந்தது.
''உனக்குள் இருக்கும் திமிருக்கு என்ன செய்கிறேன் பார்...''
வீட்டுக்குள் சென்று, 32 ஏ.சி.பி., கை துப்பாக்கியை எடுத்து வந்தான் காண்டீபன்.
''நான் வெச்சுருப்பதை சாப்பிட்டு, என்னுடன் அனுசரித்து போகணும். இல்லையேல் உன்னை, என் கையாலேயே சுட்டு கொல்வேன். உனக்கான நேரம் துவங்கியது...''
தோட்டாவை துப்ப ஆயத்தமானது துப்பாக்கி.
- தொடரும்...
ஆர்னிகா நாசர்

