PUBLISHED ON : ஏப் 18, 2026

தி ண்டுக்கல், நேரு நினைவு நகராட்சி உயர்நிலைப் பள்ளியில், 1970ல், 8ம் வகுப்பு படித்தேன். அப்போது வரலாறு ஆசிரியர் வெங்கட்ராமன், வகுப்பு நேரத்தில் பாடத்தை கடந்து, பொது அறிவு கேள்விகளையும் கேட்பார்.
ஒருநாள், அப்போதைய அமெரிக்க அதிபர் பெயரை கேட்க, யாரும் பதிலளிக்காத நிலையில், 'ரிச்சர்ட்டு நிக்சன்' என, நான் கூறினேன். ஆனால், அவரோ, 'நிக்சன் என்பதே சரியான பதில்' என்றார்.
நாளிதழை தவறாமல் படித்து வந்ததால், நான் கூறியது தான் சரியான பதில் என, அவரிடம் வாதாடினேன். கோபமடைந்த ஆசிரியர், சக மாணவனை என் தலையில் குட்டு வைக்க சொல்ல, அவனும் பலமாக குட்டினான். அவமானத்தில் கண்ணீர் பெருக்கெடுக்க, அமைதியாக அமர்ந்து விட்டேன்.
மறுநாள் வகுப்புக்குள் நுழைந்த ஆசிரியர், சரியான விடையை நிராகரித்ததற்காக அனைத்து மாணவர்கள் முன், என்னிடம் மன்னிப்பு கேட்டார். முந்தைய நாள் வாங்கிய குட்டுக்காக அவமானப்பட்டு கலங்கிய என் கண்கள், ஆசிரியரின் பெருந்தன்மையை எண்ணி மீண்டும் கலங்கின.
தற்போது என் வயது, 69. வழக்கறிஞர் அலுவலகத்தில் கிளார்க்காக பணிபுரிந்து வருகிறேன். தவறு செய்வது இயல்பு; அதை உணர்ந்து மன்னிப்பு கேட்பது மகத்துவமானது என்பதை, இளமையிலேயே புரிய வைத்த வகுப்பு ஆசிரியர் வெங்கட்ராமன், என் மனதில் இமயம் போல வீற்றிருக்கிறார்.
- வி.சுந்தரராஜ், கோவை. தொடர்புக்கு: 87540 88108
