PUBLISHED ON : ஏப் 18, 2026

முன்கதை : ஊர், ஊராக செல்லும் நாடோடிக்கு, 'அழைக்கும் போதெல்லாம், ஒரு தேவதை தோன்றி உதவி செய்யும்' என்ற, வரம் கிடைத்தது. அணிந்தால் மறைய வைக்கும் ஒரு மாய மோதிரமும் கிடைத்தது. சிதிலமடைந்த மலைக்கோட்டையில் சிறை வைக்கப்பட்டு இருந்த மரகத நாட்டு மன்னருக்கு மாயமோதிரத்தை கொடுத்து, அங்கிருந்து விடுவித்தான். பின், அங்கிருந்து நாடோடி வெளியேற முயன்ற போது, காவல் வீரன் விழித்துக் கொண்டான். இனி -
காவல் வீரன் பார்வையிலிருந்து தப்ப வேண்டும்; இல்லையென்றால் ஆபத்து என்பதை உணர்ந்த நாடோடி, அங்கிருந்த வளைவான சுவரின் அருகில் மறைந்து கொண்டான்.
கண்விழித்த அந்த வீரன் சோம்பல் முறித்து, மீண்டும் துாங்கத் துவங்கினான். சுவர் மறைவில் இருந்து மெல்ல வெளியே வந்த நாடோடி, மலையிலிருந்து இறங்கினான்.
இரண்டு மாதங்களாக தனிமை சிறையில், போதுமான உணவும் இல்லாமல் அடைக்கப்பட்டிருந்த மன்னர் ராஜசிம்மவர்மன், தளர்ந்த நிலையில் இருந்தார். மெதுவாக அரண்மனை நோக்கி சென்றார். கையில் மாயமோதிரத்தை அணிந்திருந்ததால், யார் கண்ணுக்கும் அவர் தெரியவில்லை.
அரண்மனை வாயிலை அடைந்ததும், விரலில் இருந்த மோதிரத்தை கழற்றினார். அந்த கோலத்தில், அடையாளம் தெரியாத அளவுக்கு மாறியிருந்தார், மன்னர். அங்கிருந்த காவலன், சற்று நிதானித்து மன்னரை அடையாளம் கண்டு கொண்டான். திடீரென மன்னரை பார்த்ததும் அதிர்ச்சியடைந்தான்.
'வாருங்கள் மன்னா... தங்களை காணாமல் நாட்டு மக்கள் அனைவரும் கவலையில் ஆழ்ந்துள்ளனர்...' என்று கூறியபடி, அரண்மனைக்குள் அழைத்து சென்றான். உள்ளே இருந்த வீரர்கள், மன்னரை தலைவணங்கி வரவேற்றனர்.
விஷயம் அறிந்ததும், மகாராணி கண்ணீருடன் ஓடோடி வந்து, மன்னரை வரவேற்றார்.
மன்னர், அரண்மனை திரும்பிய விபரம், நாடு முழுவதும் பரவியது.
மன்னர் நீராடி, உடைகளை மாற்றி உணவருந்தினார்.
படை வீரர்களை அழைத்த மன்னர், சிதிலமடைந்த மலைக்கோட்டைக்கு சென்று, அங்கிருப்போரை கைது செய்து அழைத்து வர உத்தரவிட்டார்.
பின், பிரதான மந்திரியை அழைத்து, 'நாடோடி ஒருவன் வருவான். வாயில் காப்பாளர்களிடம் சொல்லி, அவனை மரியாதையோடு என்னிடம் அழைத்து வாருங்கள்...' என்று கட்டளையிட்டார்.
நாடோடியும் நீண்ட நடை பயணத்துக்கு பின், அரண்மனையை வந்தடைந்தான்.
அரண்மனை வாயில் காப்போனிடம், தன்னை நாடோடி என்று அறிமுகப்படுத்தி, மன்னரை சந்திக்க வந்திருப்பதாக கூறினான். அவனை வெகுவாக உபசரித்து, அரசவைக்கு அழைத்துச் சென்றனர், வாயில் காப்பாளர்கள்.
நாடோடியை கட்டித்தழுவி வரவேற்றார் மன்னர்.
'மன்னரே... தங்களை மீண்டும் உற்சாகத்துடன் பார்ப்பதில் மிக்க மகிழ்ச்சி. என் மோதிரத்தைத் திரும்பப் பெற்றுச் செல்ல வந்திருக்கிறேன்...' என்றான், நாடோடி.
'அதற்குள் என்ன அவசரம். என் உயிரையே நீ காப்பாற்றி இருக்கிறாய். சில நாட்கள் அரண்மனையில் என் விருந்தினராகத் தங்கி, விருந்து உண்டு செல்லலாம்...' என்றார், மன்னர்.
'இல்லை மன்னா... நான் ஒரு சாதாரண நாடோடி. எனக்கு எதற்கு அரண்மனை உபச்சாரம். நான் புறப்பட விரும்புகிறேன்...'
'சரி. உன்னை தடுக்க விரும்பவில்லை. என் நாட்டின் சார்பில் உனக்கு நன்றி தெரிவிக்கிறேன். அந்த மாயமோதிரத்தை, உன் பரிசாக நானே வைத்துக் கொள்ளலாமா...'
மன்னரிடம் மறுப்பு தெரிவிக்க தயங்கினான், நாடோடி.
'அந்த மோதிரம் என்னுடையதாக இருந்தால், உங்களுக்கே சொந்தமாக்கி இருப்பேன். ஆனால், அது என்னுடையது அல்ல; வேறு யாரோ ஒருவருக்குச் சொந்தமான பொருளை, உங்களுக்கு எப்படி பரிசளிக்க முடியும்...'
நாடோடியின் மனதை புரிந்து கொண்ட மன்னர், புன்னகைத்தார்.
'பரவாயில்லை... உன்னிடமே மோதிரம் இருக்கட்டும்...' எனக்கூறி, மகாராணியை பார்த்தார் மன்னர்.
மன்னரின் மனதறிந்த மகாராணி, உள்ளே பத்திரப்படுத்தி வைத்திருந்த மோதிரத்தை எடுத்து வந்தாள்.
மாய மோதிரத்தை மீண்டும் நாடோடியிடமே ஒப்படைத்தார், மன்னர் ராஜசிம்மவர்மன்.
மன்னருடன் அமர்ந்து விருந்து சாப்பிட்டான், நாடோடி. பின், மன்னரிடம் நன்றி கூறி, விடைபெற்று, அரண்மனையை விட்டு வெளியே வந்தான்.
மன்னரை காப்பாற்ற தான் எடுத்த முயற்சியை நினைத்து, அதை அசை போட்டபடியே கால் போன போக்கில் நடந்தான்.
நீண்ட துாரம் வந்ததில், நாட்டின் எல்லையை கடந்து விட்டதை அறிந்தான், நாடோடி. அங்கிருந்த நீர்நிலையில் முகம், கை, கால்களைக் கழுவினான். தாகத்தைத் தணித்துக் கொள்ள நீரை அருந்தினான்.
அவனுக்கு உடல் அசதியாக இருந்தது. அங்கே இருந்த ஒரு மரத்தின் கீழ், படுத்து ஓய்வெடுத்தான். அப்படியே ஆழ்ந்து துாங்கிவிட்டான்.
துாக்கம் கலைந்து எழுந்த நாடோடி, அங்கிருந்து புறப்பட ஆயத்தமானான்.
அப்போது நாடோடியின் மனதில் ஒரு சந்தேகம் எழுந்தது.
'உண்மையான மாய மோதிரத்தை, மன்னர் திருப்பிக் கொடுத்தாரா அல்லது அதே போல வேறொரு மோதிரத்தை மாற்றிக் கொடுத்து விட்டாரா' என்ற சந்தேகம் எழுந்தது. உடனே மோதிரத்தை சோதித்துப் பார்க்க விரும்பினான்.
நாடோடிக்கு அதிர்ச்சி காத்திருந்தது.
- தொடரும்...
- ஆர்.வி.பதி
