
கன்னியாகுமரி மாவட்டம், இறச்சகுளம் அரசு நடுநிலைப்பள்ளியில், 1961ல், 8ம் வகுப்பு படித்தேன். விவசாய வேலைகளில் அப்பாவுக்கு உதவிய பின், ஒன்றரை கி.மீ., துாரம் நடந்து பள்ளி செல்வேன். என்னைப் போல் வரும் சிலருக்கு மதிய உணவு எடுத்து வர வழி இருக்காது. அதனால், உணவு இடைவேளையில் பள்ளிக்கு அருகே குளத்தில் தண்ணீர் குடித்து பசியை ஆற்றி திரும்புவோம்.
இதை கவனித்த வகுப்பாசிரியர் எங்கோடிச்செட்டியார், 'எவனாது ஒருவன் என்னுடன் சாப்பிட வா...' என கருணை பொங்க அழைத்தார். அதற்கு இணங்கி, ஒவ்வொரு நாள் ஒருவர் என முறை வைத்து, பக்கத்து குளத்தில் தாமரை இலை பறித்து வந்து காத்திருப்போம். எடுத்து வரும் உணவில் ஒரு பங்கை தருவார் வகுப்பாசிரியர். அதை பகிர்ந்து சாப்பிட்டு பசியாறுவோம்.
அன்று பள்ளி வளாகத்தில் மரம் நடும் நிகழ்வு நடந்தது. படிப்பில் முதன்மை பெற்றிருந்த எனக்கு, மருது, அரசு மரக்கன்றுகள் நடும் வாய்ப்பு தந்தார், வகுப்பாசிரியர். அதன்படி நட்டேன். ஆசிரியர் உணவு எடுத்து வரும் துாக்குவாளியை சுத்தம் செய்த பின் அதில் நீர் எடுத்து வந்து மரக்கன்றுகளுக்கு ஊற்றி கவனமுடன் வளர்த்தேன்.
எனக்கு, 78 வயதாகிறது. சிறுகதை, நாவல், கவிதை, கட்டுரை தொகுப்பு என்ற வகைமையில், 60 புத்தகங்கள் எழுதியுள்ளேன். என் படைப்புத் திறனை மெச்சி சாகித்ய அகாடமி, கலைமாமணி விருதுகள், எழுத்தாளர்கள் கண்ணதாசன், பெரியசாமி துாரன், கி.ரா., பெயரில் அமைந்த நினைவு பரிசுகள் மற்றும் கனடா இலக்கியத் தோட்ட இயல் விருது உட்பட கவுரவங்கள் கிடைத்துள்ளன.
சமீபத்தில் சொந்த ஊருக்கு சென்ற போது, அந்த பள்ளியை காண சென்றேன். வளாகத்தில், 60 ஆண்டுகளுக்கு முன் நான் நட்டிருந்த மரங்கள் வளர்ந்து, இரண்டு பேர் கை கோர்த்து அணைத்தாலும் அடங்காத வகையில் கம்பீரமாக வரவேற்றன. அவற்றை அகம் குளிர முத்தமிட்டு மகிழ்ந்தேன். மதிய உணவுடன், மரங்களை நட்டு வளர்க்கும் வாய்ப்பையும் தந்த வகுப்பாசிரியர் எங்கோடிச்செட்டியார் நினைவு, பேரார்வத்துடன் என்னை தழுவிக்கொண்டது.
- நாஞ்சில் நாடன், கோவை. தொடர்புக்கு: 77086 56002