
பயப்படாதே! சி வகாசி, எஸ்.எப்.ஆர்., மகளிர் கல்லுாரியில், 1988ல், இளங்கலை முதல் ஆண்டு படித்த போது நடந்த சம்பவம்...
அன்று விருதுநகரில் பேருந்துக்காக காத்திருந்தேன். தவறான நடத்தையுள்ள ஒருவன் பின்தொடர்வதை கண்டு, செய்வதறியாது தவித்தேன். அப்போது, என் பெயர் சொல்லி அழைக்கும் குரல் கேட்டு திரும்பினேன். மலர்ச்சியுடன் ஆசிரியைகள் நாகலட்சுமியும், சரஸ்வதியும் என்னருகே வருவது கண்டு வியப்படைந்து திடம் பெற்றேன்.
இருவரும் வத்திராயிருப்பு இந்து மேல்நிலைப் பள்ளியில், 7ம் வகுப்பு படித்தபோது, எனக்கு வரலாறு மற்றும் அறிவியல் பாடங்கள் நடத்தியவர்கள். என் பதற்றம் கண்டு, 'பயப்படாதே...' என தேற்றி, பின்தொடர்ந்தவனை கண்டபடி திட்டி விரட்டியடித்தனர். பின், பேருந்தில் அமர வைத்து பத்திரமாக வீடு திரும்ப வழி செய்து உதவினர்.
எனக்கு, 55 வயதாகிறது. இல்லத்தரசியாக இருக்கிறேன். இக்கட்டான வேளையில் எதிர்பாராத நேரத்தில் வந்து உதவிய ஆசிரியைகள் நாகலட்சுமி, சரஸ்வதியை வணங்கி வாழ்கிறேன்.
- ஆர்.சுப்புலட்சுமி, சென்னை.