
மதுரை மாவட்டம், சோழவந்தான், அரசஞ்சண்முகனார் மேல்நிலைப் பள்ளி, முன்பு டிஸ்ரிக்ட் போர்டு பள்ளி என அழைக்கப்பட்டது. அங்கு, 1962ல், 9ம் வகுப்பு படித்த போது, தமிழாசியர் குருநாதன் உரைநடை, செய்யுள், மற்றும் இலக்கண பாடங்கள் நடத்துவார்.
நெற்றியில், திருநீறு துலங்க தேவாரப் பாடல்களை இனிமையாக பாடுவார். ஒழுக்கத்தை கடைபிடித்து நற்பெயர் வாங்க அறிவுறுத்துவார். பிழையின்றி எழுதவும், தடையின்றி பேசவும் பயிற்றுவிப்பார். மேன்மைக்கு வழி காட்டுவார்.
அன்று உரைநடை பகுதியை வாசிக்க சொன்னதும், ஒரு பகுதியில், 'அதனாலேயே' என்று உச்சரிப்பதற்கு மாறாக, 'அதனாலே' என படித்தேன். மிகவும் சாந்தமுடன், 'அந்த சொற்றொடரில் வாக்கியம் அப்படியா உள்ளது... இரண்டு மாத்திரையை விழுங்கி விட்டாயே...' என்றார். அதை கேட்டதும் அனைவரும் சிரித்து விட்டோம்.
பின், தமிழ் மொழியை சரியாக உச்சரிக்கும் இலக்கணத்தில், 'மாத்திரை' குறித்து விளக்கினார். அதை பயன்படுத்தும் முறைகளை தெளிவுபடுத்தி கற்பித்தார்.
என் வயது, 74; தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்து ஓய்வு பெற்றேன்; தமிழ் மொழி மீது மிகுந்த பற்றும், ஈடுபாடும் கொண்டு இயங்கி வருகிறேன். இதற்கு அடிப்படை அமைத்த அந்த தமிழாசிரியரை பெருமையுடன் நினைவில் கொண்டுள்ளேன்.
- கே.சங்கரநாராயணன், மதுரை.