PUBLISHED ON : ஜூன் 07, 2025

கோவை, நஞ்சுண்டாபுரம் நாடார் உயர்நிலைப் பள்ளியில், 1965ல், 9ம் வகுப்பு படித்தபோது ஹிந்தி மொழி ஆசிரியையாக இருந்தார் ஜெயலட்சுமி. ஹிந்தி பாடம் நடத்தும் போது, வகுப்பை கவனிக்காமல் எதையாவது பேசி பொழுது போக்குவர் சிலர். அதில் நானும் ஒருவனாக இருந்தேன். இதனால் படிப்போருக்கு சிரமம் ஏற்பட்டது.
அன்று ஹிந்தி வகுப்பு துவங்கியதும், 'கூடுதலாக மொழி படிக்க விரும்பம் உள்ளோர் மட்டும் வகுப்பில் இருந்து கவனியுங்கள். விரும்பாதோர் வெளியே செல்லலாம்...' என்று கூறினார் ஆசிரியை.
அந்த சாக்கில் நானும் வெளியேறினேன். வகுப்பு முடிந்ததும் தனியாக என்னை அழைத்து, 'கூடுதல் மொழியை கற்றால் வாழ்வுக்கு உதவும்...' என கனிவுடன் அறிவுரைத்தார் ஆசிரியை. பின், எழுதவும், படிக்கவும் கற்றுக் கொண்டேன். பள்ளிப் படிப்பை முடித்ததும், அந்த மொழித்திறனால் வேலை வாய்ப்பு கிடைத்தது.
இப்போது என் வயது, 75; தனியார் நுாற்பு ஆலையில் பணிபுரிந்து ஓய்வு பெற்றுள்ளேன். கூடுதலாக ஒரு மொழியைக் கற்பித்து உயர்வுக்கு உதவிய ஆசிரியை ஜெயலட்சுமியின் கனிவாக முகம் நெஞ்சில் நிலைத்துள்ளது.
- ஏ.வேலுசாமி, கோவை.
தொடர்புக்கு: 88708 51368