
கடலுார் மாவட்டம், குறிஞ்சிப்பாடி அரசு உயர்நிலைப்பள்ளியில், 1962ல், 6ம் வகுப்பு படித்தபோது நடந்த நிகழ்வு...
தலைமையாசிரியராக இருந்த சடகோபன், பள்ளி வளாகத்தில் மாதம் ஒருமுறை இலக்கிய மன்றம் நடத்துவார். அதில் குன்றக்குடி ஆதின மடத்தின் தலைவராக இருந்த குன்றக்குடி அடிகளார் என்ற அரங்கநாதன், 'ஜாதி பேதம் கூடாது' என்ற தலைப்பில் அன்று உரை நிகழ்த்தினார்.
நிகழ்ச்சி முடிந்தவுடன் அவரை சந்தித்து ஆசி பெற்றோம். அவ்வையார் இயற்றிய நல்வழியில், 'சாதி இரண்டுயொழிய வேறில்லை...' என்ற பாடலை ஒப்பிக்க சொன்னார். யாருக்கும் முழுமையாக தெரியவில்லை. ஒரு வரி விடாமல் இனிமை குன்றாது நான் ஒப்பித்தேன்.
மிகவும் மகிழ்ந்து, 'பாடல் கருத்துப்படி நீ என்ன சாதி...' என கேட்டார். அறியாமையால், சார்ந்திருந்த ஜாதி பெயரை கூறினேன். என்னை பரிவுடன் அருகே அழைத்து திருநீறு அணிவித்து, 'எல்லாருக்கும் உதவியாக இருப்பவர் உயர் சாதி... உதவாதவர் கீழ் சாதி...' என திருத்தி அருளாசி வழங்கினார்.
இப்போது என் வயது, 75; சொந்தமாக ஸ்டேஷனரி வியாபாரம் செய்து வருகிறேன். பள்ளியில் நடந்த அந்த நிகழ்வு, பசு மரத்தாணி போல மனதில் பதிந்து உள்ளது. அதை போற்றும் வகையில் ஜாதி உணர்வுக்கு முக்கியத்துவம் தராமல் வாழ்ந்து வருகிறேன்.
- எஸ்.செல்வம், புதுச்சேரி.
தொடர்புக்கு: 80565 81367