
தஞ்சாவூர் மாவட்டம், கும்பகோணம் நகர உயர்நிலைப் பள்ளியில், 1966-ல், 7ம் வகுப்பு படித்தேன். வகுப்பாசிரியராக இருந்த எஸ்.கிருஷ்ணமாச்சாரியார் கண்டிப்பு மிக்கவர். ஆங்கிலம், தமிழ், சரித்திரம் மற்றும் கணக்கு பாடங்களை கற்பிப்பார். வகுப்பறை மேஜையில் பிரம்பு ஒன்று எப்போதும் இருக்கும். யாரையும் தண்டிக்க அதை பயன்படுத்தியதில்லை.
அன்று, எட்டு வரி செய்யுளை மனப்பாடம் செய்ய புதிய உத்தியை வகுத்தார். அதன்படி, செய்யுளில் வார்த்தைகள் அனைத்தையும் முதலில் வரிசைப்படுத்தி அடி பிறழாமல் கணக்கிட்டோம். முதல் சொல்லை வகுப்பில் முதல் பெஞ்சில் இருந்தவன் சொல்ல வரிசைப்படி அடுத்தடுத்திருந்தோர் ஒவ்வொரு சொல்லையும் தவற விடாமல் உரக்க சொல்லும் வகையில் இருந்தது.
செய்யுளின் முதல் சொல்லை ஒருவன் சொல்லும்போது, அடுத்திருப்பவன் உன்னிப்பாக கவனித்து அடுத்துள்ளதை கூற வேண்டும். இந்த முறைப்படி இரண்டாம் சுற்றில் கவனம் சிதறி தடுமாறினேன். பிரம்பால் இரண்டு உள்ளங்கையிலும், 15 அடிகள் மாற்றி மாற்றி தந்து தண்டித்தார் வகுப்பாசிரியர். வலியால் கண்ணீர் பெருகி வடிந்த போதும், படிப்பில் கவனம் பிசகக்கூடாது என்ற வைராக்கியம் ஏற்பட்டது.
உறுதியுடன் படித்து இறுதி தேர்வில் இரண்டாம் ரேங்க் பெற்றேன். கணக்கில் முதன்மை மதிப்பெண் பெற்று பரிசுக்கு தேர்வானேன். ஆண்டுவிழாவில் சிறப்பு விருந்தினராக பங்கேற்ற அப்போதைய கல்வி அமைச்சர் ரா.நெடுஞ்செழியன் கையால் பரிசு வாங்கினேன். ஆங்கில மனப்பாடம் ஒப்புவித்தல் உட்பட பல்வேறு பரிசுகளுக்கு தகுதி பெற்றேன்.
எனக்கு,72 வயதாகிறது. தபால் துறையில், 41 ஆண்டுகள் பணி செய்து மேற்பார்வையாளராக உயர்ந்து ஓய்வு பெற்றேன். வாழ்வில் கிடைத்துள்ள வளங்களுக்கு, அன்று வகுப்பாசிரியர் கிருஷ்ணமாச்சாரியாரின் கண்டிப்பான கற்பித்தலே அடித்தளம் என நம்புகிறேன். அவரை நாளும் வணங்கி போற்றுகிறேன்.
- வி.எஸ்.ஆர்.கல்யாணராமன், சென்னை-.
தொடர்புக்கு: 98413 45857