
செப் 07 விநாயகர் சதுர்த்தி
விநாயகரை வழிபட்டு நிகழ்வுகளை துவங்குவது, ஹிந்து மதத்தில் வழக்கம். அவரை வழிபடுவது எளிது. கைப்பிடி அளவு சாணத்தை பிடித்து, இரண்டு அருகம்புல்லை துாவி விட்டால் போதும். அழகிய பிள்ளையார் வணக்கத்துக்கு தயாராகி விடுவார்.
விநாயகரை முதல் தெய்வமாக போற்றுவது பற்றி தெரிந்து கொள்வோம்...
இலங்கையில் ராவணனை வென்று, சீதையை மீட்டார் ராமன். அயோத்தி சென்று, ராஜாவாகப் பொறுப்பேற்றார். போரில் உதவிய எல்லாருக்கும் பரிசுகள் வழங்கினார்.
ராவணனின் தம்பி விபீஷணன், சயனத்தில் இருக்கும் பெருமாள் சிலை ஒன்றைக் கண்டான். அவனுக்கு மிகவும் பிடித்து விட்டது. இந்த சிலை இலங்கையில் இருந்தால் எவ்வளவு நன்றாக இருக்கும் என கணக்குப் போட்டான்.
உடனே, ராமனிடம் அதைக் கேட்டான். ஒரு விமானத்தின் கீழே இருந்த அந்த சிலையை கொடுத்த ராமன், 'விபீஷணா! ஒரு நிபந்தனை. இலங்கை செல்லும் வரை இந்த சிலையை நீ தரையில் வைக்க கூடாது. மீறினால், திரும்ப எடுக்க முடியாது. கவனம்...' என்றார்.
விபீஷணனும், தலையாட்டியபடி கிளம்பினான்.
வான்வழியே பறந்த போது, காவிரி பெருக்கெடுத்து ஓடுவதைக் கவனித்தான். அந்த புண்ணிய நதியில் நீராடும் ஆசை வந்தது.
அப்போது தான், விநாயகர் லீலையை ஆரம்பித்தார். சிறுவனாக மாறி, காவிரிக்கரைக்கு வந்தார்.
குளிக்க ஆசைப்பட்ட விபீஷணன், 'தம்பி... சிறிது நேரம் இந்த சிலையை வைத்திரு... இதை தரையில் வைத்து விடாதே... நான் குளித்து முடித்த பின் வாங்கிக் கொள்கிறேன்...' என அந்த சிறுவனிடம் சொன்னான். வாங்கிய சிறுவன் அதை தரையில் வைத்து விட்டான்.
குளித்து முடித்து வந்த விபீஷணன், தரையில் இருந்த சிலையை எடுக்க முயன்றான்; முடியவில்லை. கோபத்தில் சிறுவன் தலையில் ஒரு குட்டு வைத்தான். பயப்படுவது போல் நடித்த சிறுவன், ஒரு மலை உச்சியில் ஏறி நின்றான். அந்த சிலை இருந்த பகுதி, அரங்கம் என புகழ் பெற்றது. பிற்காலத்தில், ஸ்ரீரங்கம் என ஆன்மிகத் தலமாகி விட்டது.
பெருமாளை மட்டுமல்ல தந்தை சிவனின் அம்சமான ஆத்மலிங்கத்தையும் ஒருமுறை காப்பாற்றினார் விநாயகர்.
விபீஷணனின் அண்ணன் ராவணன். இவன் ஆத்மலிங்கம் ஒன்றை சிவனிடம் பெற்று, இலங்கைக்கு எடுத்துச் செல்ல முயன்றான். தரையில் வைத்தால் எடுக்க முடியாது என்ற அதே நிபந்தனையை இதற்கும் விதித்தார் சிவன்.
அப்போதும், விநாயகரே சிறுவன் ரூபத்தில் வந்து சிலையை தரையில் வைத்தார். ஆத்மலிங்கம் இலங்கை செல்ல விடாமல் தடுத்தார்.
அதுவே, கர்நாடக மாநிலம், திருக்கோகர்ணத்தில் புகழ்பெற்ற மகாபலேஸ்வரர் கோவிலாய் திகழ்கிறது.
ஆக, சிவன், விஷ்ணு இருவரையும் இங்கிருந்து நகர விடாமல் செய்தவர் விநாயகர். அதனால் தான் அவர் முழு முதல் கடவுள் ஆகிறார். ஆன்மிகத்தின் ஆணிவேராக உள்ள நம் தேசத்தில், பக்தி என்ற தண்ணீர் ஊற்றினால், வேர்கள் பலம் பெற்று, கிளைகள் பசுமையாக விளங்கும். இதனாலே, விநாயகர் இத்தகைய ஏற்பாட்டை செய்தார் என்பர் மகான்கள்.
லீலைகளை நிகழ்த்திய முதல்வன் விநாயகரை, சதுர்த்தியன்று வணங்கி அருள் பெறுவோம்!
- தி.செல்லப்பா