
தேர்வுக்கு படித்துக் கொண்டிருந்தான் சுமன். படிக்க விடாமல் கடித்து தொந்தரவு தந்த கொசுவை விரட்டினான்.
மீண்டும் கடிக்க வந்தபோது அடிக்க முயன்றவனிடம், 'என்னைக் கொல்லாதே...' என்றது கொசு.
''படிக்க விடாமல் தொந்தரவு செய்கிறாயே...''
'நானாக இங்கு வரவில்லையே... நீங்க தான் வரவழைத்துள்ளீர். என்னை குற்றம் சொல்லாதீர்...'
''நாங்களா அழைத்தோம்...''
வியப்பு மேலிட கேட்டான் சுமன்.
'ஆமாம்... சுற்றிலும் பாரு... ஈரமான உடைகள் கிடக்கின்றன... வீட்டை சுத்தமாக பராமரிக்கவில்லை. அறைகளை சூரிய வெளிச்சம், காற்று வரும்படி திறந்து வைத்திருக்க வில்லை. சுற்றி, கழிவுநீர் தேங்கியுள்ளது...
'தோட்டத்தில் செடிகளை பராமரிக்கவில்லை. தேங்காய் மூடி, தேவையில்லாத பிளாஸ்டிக் பொருட்கள் குப்பையாக தேங்கி உள்ளது. இவற்றை நீக்கினால், நாங்கள் வரமாட்டோம்... நோய்கள் பரவாது... இப்போ புரிந்ததா...'
இறக்கையை ஆட்டி பறந்தது கொசு.
வீட்டின் சுற்றுப்புறத்தை சுத்தமாகவும், காற்றோட்டமாகவும் வைத்தால் மகிழ்ச்சியுடனும் வாழலாம் என்பது சுமனுக்கு புரிந்தது.
கொசு கற்றுக் கொடுத்த பாடத்தை மனதில் பதிய வைத்தான். நண்பர்களுக்கும், தெரிந்தவர்களுக்கும் புரிய வைக்க திட்டமிட்டான்.
பட்டூஸ்... வாழும் இடத்தை சுத்தமாக பராமரிக்க கற்றுக் கொள்ளுங்கள்.
டி.நரசிம்மராஜ்