தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/இணைப்பு மலர்/சிறுவர் மலர்/நாடோடியின் சாகசங்கள்! (4)

நாடோடியின் சாகசங்கள்! (4)

நாடோடியின் சாகசங்கள்! (4)


PUBLISHED ON : மார் 14, 2026

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : மார் 14, 2026


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

முன்கதை: ஊர், ஊராக செல்லும் நாடோடிக்கு, 'அழைக்கும் போதெல்லாம், ஒரு தேவதை தோன்றி உதவி செய்யும்' என்ற, வரம் கிடைத்தது. தேவதை அளித்த பறக்கும் கம்பளத்தை, அந்நாட்டின் மன்னருக்கு வழங்க சென்றான், நாடோடி. கம்பளத்தில் ஏறி அமர்ந்து மன்னர் சோதித்தார். அவர் கட்டளையிட்டும், கம்பளம் பறக்கவில்லை. இனி -

நா டோடி இதை எதிர்பார்க்கவே இல்லை.

'நாடோடி, நீ ஒரு ஏமாற்றுக்காரன்; சித்து வேலை செய்பவன் போல இருக்கிறது. உன்னை இனி நம்பமுடியாது...' என்றார், மன்னர்.

'ஏற்கனவே மன்னரின் கோபத்திற்கு ஆளாகி உள்ளேன். இப்போது மீண்டும் அவர் கோபப்படாமல் இருக்க ஏதாவது செய்தாக வேண்டும்...' என்று நினைத்தான், நாடோடி.

அவனுக்கு, பறக்கும் கம்பளத்தை அளித்த போது, தேவதை கூறியது நினைவிற்கு வந்தது.

'மன்னரே, எனக்கு ஒரே ஒரு சந்தர்ப்பம் கொடுங்கள். இதை நான் சரி செய்கிறேன்...' என்றான், நாடோடி.

'என்ன செய்யப் போகிறாய்... பறக்கும் கம்பளத்தில் ஏறி, தப்பித்துப் போகப் பார்க்கிறாயா...'

கோபம் தணியாமல் கூறினார், மன்னர்.

'இல்லை மன்னரே... நான் ஒருக்காலும் அப்படிச் செய்யவே மாட்டேன். என்னை நம்புங்கள். ஒரே ஒரு சந்தர்ப்பம் கொடுங்கள்...' என்று மன்றாடினான், நாடோடி.

சற்று யோசித்த மன்னர், 'சரி. இந்த வாய்ப்பில் உன்னை நிரூபிக்க வேண்டும்...' என்றார்.

'இந்த கம்பளத்தில் இருக்கும் தவறை சரி செய்ய, எனக்கு ஒரு தனி அறை வேண்டும்...' என்று கேட்டான், நாடோடி.

மன்னர், காவலாளியை அழைத்தார். நாடோடியை அறைக்கு உள்ளே விட்டு, வெளியே காவலுக்கு நிற்குமாறு உத்தரவிட்டார்.

அறைக்குள் சென்ற நாடோடி, 'தேவதையே வா...' என்றான்.

தேவதை அவன் முன் தோன்றியது.

'நீ எனக்கு கொடுத்த கம்பளம், நான் ஏறி அமர்ந்தால் மட்டுமே பறக்கிறது. இந்த நாட்டு மன்னருக்காக நான் கேட்ட கம்பளம் அது. அவர் ஏறி அமர்ந்தால், பறக்கவில்லை. ஏன்...' என்றான், நாடோடி.

“ஓ... அப்படியா... உனக்காகத்தான் பறக்கும் கம்பளத்தை கேட்டாய் என்று கருதினேன். மன்னர் பயன்படுத்தும் வகையில் மாற்றிவிடலாம். அந்த கம்பளத்தைக் கொடு...' என்றது, தேவதை.

கம்பளத்தை வாங்கிய தேவதை, அதை கையில் பிடித்தபடி, ஏதோ முணுமுணுத்தது. பின், அதை நாடோடியிடம் கொடுத்தது.

'இப்போது, இந்த கம்பளத்தை மன்னரும் பயன்படுத்த முடியும். கொண்டு போய்க் கொடு...' என்றது, தேவதை.

'இதை எல்லாரும் பயன்படுத்த முடியுமா...' என்று, சந்தேகம் கேட்டான் நாடோடி.

'இல்லை. மன்னர் மட்டுமே பயன்படுத்தலாம். அவரைத் தவிர, வேறு யார் அமர்ந்து கட்டளையிட்டாலும் பறக்காது...' என்றது, தேவதை.

'நன்றி...' எனக்கூறி, தேவதையிடம் விடை பெற்றான், நாடோடி.

அறையை விட்டு கம்பளத்துடன் வெளியே வந்த நாடோடியை, மன்னரிடம் அழைத்துச் சென்றான், காவலாளி.

'மன்னரே, இப்போது இந்த கம்பளத்தை சோதித்து பாருங்கள்...' என்றான், நாடோடி.

மன்னருக்கு நம்பிக்கை ஏற்படவில்லை. இருப்பினும், சந்தேகத்துடன் பறக்கும் கம்பளத்தைப் பெற்றுக் கொண்டார். அரண்மனை தர்பாரில், தரையில் விரித்தார். அதன் மீது ஏறி அமர்ந்து, 'பற...' என்றார்.

மன்னரைச் சுமந்து கொண்டு, கம்பளம் பறக்கத் துவங்கியது. மன்னருக்கு மிகவும் ஆச்சரியமாகவும், மகிழ்ச்சியாகவும் இருந்தது. தர்பாரில் இருந்த அமைச்சர்களும் வியப்புடன் வேடிக்கை பார்த்தனர்.

மன்னர், 'இறங்கு...' என்று கட்டளையிட, தரையில் இறங்கியது பறக்கும் கம்பளம்.

நாடோடியின் தோளை தட்டி பாராட்டினார், மன்னர்.

'மன்னரே, ஒரு முக்கியமான விஷயம். இந்த கம்பளம், தங்களைத் தவிர யார் கட்டளைக்கும் பணியாது. நீங்கள் கட்டளையிட்டால் மட்டுமே பறக்கும்; இறங்கும்...' என்றான், நாடோடி.

'அது நல்லதுதானே. இல்லையென்றால் வேறு யாராவது இதை துஷ்பிரயோகம் செய்துவிடக் கூடும்...'

திருப்தியுடன் கூறிய மன்னர், ஏற்கனவே தயாராக இருந்த ஒரு லட்சம் வராகனை, நாடோடிக்கு வழங்கினார்.

'எனக்கு பறக்கும் கம்பளத்தைப் பரிசளித்தாய். நான் அறிவித்தபடி, ஒரு லட்சம் வராகன்களை உனக்கு பரிசளிக்கிறேன்...' என்றார், மன்னர்.

அதை ஏற்க மறுத்தான் நாடோடி.

'மன்னரே, எனக்கு பரிசுப்பணம் தேவையில்லை. நான் ஒரு நாடோடி. தினமும் ஏதாவது வேலை செய்து, அதில் கிடைக்கும் பணத்தை வைத்து நிம்மதியாக வாழ்ந்து வருபவன். இந்த பெருந்தொகையை பாதுகாப்பதே, எனக்கு பெரிய வேலையாக மாறிவிடும்...' என்றான்.

நாடோடியின் பதிலில் மன்னர் வியப்படைந்தார்.

'உனக்கு வேண்டாம் என்றால், இதை நீ யாருக்கும் தரலாம்...' என்றார், மன்னர்.

ஆனால், பரிசு பணத்தை ஏற்க மறுத்தான் நாடோடி.

“மன்னரே... இதற்கு பதிலாக, நீங்கள் ஒரு காரியம் செய்தால் மகிழ்வேன்...' என்றான், நாடோடி.

'சொல்... பார்க்கலாம்...'

மீண்டும் நாடோடியை சந்தேகத்துடன் பார்த்தார், மன்னர்.

'இந்த நாட்டில் தரிசாகக் கிடக்கும் நிலங்களில், மரக்கன்றுகளை நட்டு வளர்க்க வேண்டும். அதற்கு இந்த பணத்தை பயன்படுத்திக் கொள்ளலாம். பலரும் பயன் பெறுவர். இதைச் செய்தால் அனைவருக்கும் நல்லது...' என்றான், நாடோடி.

இதைக் கேட்ட மன்னர், மகிழ்ச்சி அடைந்தார்.

நாடோடியின் நல்ல மனது, அவரை நெகிழ வைத்தது.

'நிச்சயமாக... அப்படியே செய்கிறேன்...' என, வாக்குறுதி அளித்தார் மன்னர்.

மன்னரிடம் விடைபெற்ற நாடோடி, புதிய இடத்தை தேடி தன் பயணத்தை மீண்டும் துவங்கினான்.

-- தொடரும்...

ஆர்.வி.பதி

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us