PUBLISHED ON : மார் 28, 2026

முன்கதை: ஊர், ஊராக செல்லும் நாடோடிக்கு, 'அழைக்கும் போதெல்லாம், ஒரு தேவதை தோன்றி உதவி செய்யும்' என்ற, வரம் கிடைத்தது. தேவதை அளித்த பறக்கும் கம்பளத்தை, மன்னருக்கு வழங்கிய நாடோடி, அவரிடம் விடை பெற்று புறப்பட்டான். வழியில், அணிந்தால் மறைய வைக்கும் ஒரு மாய மோதிரம் கிடைத்தது. இனி -
'இதை உறுதி செய்ய வேண்டும்' என்று நினைத்து, மாய மோதிரத்தை மீண்டும் எடுத்து வலது கை மோதிரவிரலில் அணிந்து கொண்டான்.
அங்கே வந்த ஒருவரிடம், 'ஐயா, இந்த பாதை எந்த ஊருக்குச் செல்கிறது...' என்று கேட்டான்.
அந்த மனிதர், 'இங்கே ஆள் யாரும் இல்லையே... ஆனால் குரல் மட்டும் கேட்கிறதே...' என்று, தனக்குத் தானே சொல்லிக் கொண்டே, அங்கிருந்து அகன்றார்.
'இது ஒரு மாயமோதிரம். இதை விரலில் அணிந்து கொண்டால், யார் கண்ணுக்கும் தெரியாமல் உருவம் மறைந்து போகிறது; கழற்றினால் மீண்டும் உருவம் அனைவருக்கும் தெரிகிறது' என்பதை, நாடோடி புரிந்து கொண்டான்.
மாயமோதிரத்தைக் கழற்றி, தன் இடுப்பில் பத்திரப்படுத்தி வைத்துக் கொண்டான். தன் பயணத்தை தொடர்ந்தான், நாடோடி.
வழியில் இருந்த ஒரு மரத்தின் கீழ் சற்று இளைப்பாறினான். அப்போது அந்த மரத்தின் பின்பக்கத்தில், சிலர் பேசும் குரல் கேட்டது.
அவர்கள் பேச்சிலிருந்து, இரவில் ஒரு கோவிலுக்குள் புகுந்து அங்குள்ள நகைகளைக் கொள்ளையடிக்கத் திட்டம் தீட்டுவது புரிந்தது.
தன் இடுப்பிலிருந்து மாய மோதிரத்தை எடுத்து அணிந்து, அவர்களின் அருகில் போய் நின்று கொண்டான், நாடோடி.
'டேய் மாயன்... நீ, நான், இவன் மூணு பேரும், இன்னைக்கு சாயங்காலம் இந்த ஊர் கோவிலுக்குள்ளே போயிடுவோம். கோவிலுக்குள், பெரிய அரசமரம் ஒண்ணு இருக்கு. நாம மூணு பேரும் அந்த அரசமரக்கிளையில் ஏறி பதுங்கி இருப்போம்...
'பூஜையை முடிச்சிட்டு, கோவிலைப் பூட்டிகிட்டு பூசாரி கிளம்பிடுவாரு. அவர் போனதும், கோவில் கருவறைக்கதவை கள்ளச்சாவி போட்டுத் திறந்து, உள்ளே இருக்கிற நகைகளை திருடி, பின் அந்த கதவை முன்பிருந்த மாதிரியே பூட்டிட்டு, திரும்பவும் அரசமரத்து மேலே ஏறி ஒளிஞ்சுக்குவோம்...'
திட்டத்தை விவரித்துக் கொண்டிருந்த முனியன், சுற்றும் முற்றும் பார்த்தவனாக, தன் பேச்சை நிறுத்தினான்.
'டேய், இங்கே யாரோ நம்ம பேச்சைக் கேட்டுக்கிட்டிருக்கிற மாதிரி இருக்குடா...' என்று, சந்தேகத்தை வெளிப்படுத்தினான்.
மூன்றாவது திருடன் எழுந்து சென்று, அந்த பகுதியை சுற்றிலும் நோட்டம் விட்டுத் திரும்பினான்.
'யாருமே, இங்க இல்லை. நீ மேலே சொல்லு...' என்றான்.
திட்டத்தைத் தொடர்ந்து விவரித்தான், முனியன்...
'விடியக் காலையில் கோவிலை திறந்து வழக்கம் போல, பூஜை செய்ய பூசாரி உள்ளே போயிடுவாரு. அந்த சமயத்தில், அங்கிருந்து தப்பிச்சு கோவிலை விட்டு வெளியே வந்திடுவோம். யாருக்கும், எந்த சந்தேகமும் வராது...' என்று கூறி முடித்தான்.
'திட்டம், நல்லா இருக்கு முனியா... இதை இன்னைக்கே நாம செஞ்சுடுவோம்...' என்றான், மாயன்.
அருகில் நின்று கேட்டுக் கொண்டிருந்த நாடோடி, மூன்று திருடர்களும் தீட்டிய திட்டத்தைக் கேட்டு திடுக்கிட்டான். 'திருட்டை தடுக்க என்ன செய்யலாம்...' என்று, யோசித்தான்.
அங்கிருந்து புறப்பட்ட நாடோடி, அந்த ஊரில், மன்னரின் படையில் பணியாற்றும் ஒரு படைத்தளபதி இருப்பதாகக் கேள்விப்பட்டான். அவன் எங்கே இருக்கிறான் என்பதைக் கண்டுபிடித்து, அவன் வீட்டிற்கு சென்றான், நாடோடி.
படைத்தளபதி, தன் குத்தீட்டியை துடைத்து, சுத்தம் செய்து கொண்டிருந்தான்.
நாடோடி, மாயமோதிரத்தை அணிந்து, உருவத்தை மறைத்தான். படைத்தளபதியின் பெயரை முரட்டுக் குரலில் சொல்லி அழைத்தான்.
'யாரது, என் பெயரைச் சொல்லி அழைப்பது... இங்கே யாரும் தென்படவில்லையே...'
குழப்பத்துடன் தனக்குள் கூறிய படைத்தளபதி, சுற்றும் முற்றும் பார்த்தான்.
அசரீரி போல பேசினான், நாடோடி...
'நான் இந்த ஊரின் காவல் தெய்வம். இன்னைக்கு ராத்திரி, மூணு திருடர்கள், ஊர் கோவிலுக்குள் புகுந்து, சாமி நகைகளைத் திருட திட்டம் போட்டிருக்காங்க...'
பயபக்தியுடன், அசரீரியை உற்று கவனித்தான், படைத்தளபதி.
திருடர்களின் திட்டத்தை, அப்படியே படைத்தளபதிக்கு விவரித்தான், நாடோடி.
'அவனுங்களை கையும், களவுமா பிடித்து, மன்னர் முன் நிறுத்தி, கடுமையான தண்டனை வாங்கித் தர்றேன்...' என்று, ஆவேசமாக சபதமிட்டான், படைத்தளபதி.
'அப்படியே ஆகட்டும்...' என்று கூறி, நாடோடியும் அங்கிருந்து புறப்பட்டான்.
அன்றிரவு, அந்த மூன்று திருடர்களும் தங்கள் திட்டப்படி கள்ளச்சாவி மற்றும் கோணியுடன் கோவிலுக்குள் நுழைந்து, மரத்தின் மீது ஏறி பதுங்கிக் கொண்டனர்.
நள்ளிரவில் மூன்று திருடர்களும் மரத்தில் இருந்து இறங்கினர். கள்ளச்சாவி போட்டு, கோவில் கருவறைக்குள் நுழைந்து, சாமியின் நகைகளைத் திருடினர். அவர்களில் ஒருவன், கள்ளச்சாவியைப் போட்டு, மீண்டும் கருவறையை பூட்டினான்.
அப்போது அவர்கள் எதிர்பாராத விஷயம் நடந்தது.
- தொடரும்...
ஆர்.வி.பதி
