PUBLISHED ON : ஏப் 11, 2026

முன்கதை: ஊர், ஊராக செல்லும் நாடோடிக்கு, 'அழைக்கும் போதெல்லாம், ஒரு தேவதை தோன்றி உதவி செய்யும்' என்ற, வரம் கிடைத்தது. அணிந்தால் மறைய வைக்கும் ஒரு மாய மோதிரமும் கிடைத்தது. மரகத நாட்டை அடைந்த நாடோடி, அந்நாட்டு மன்னர் கடத்தப்பட்டிருப்பதை அறிந்து, அவரை மீட்க சபதமேற்றான். அப்போது, அவனை கொத்துவதற்கு தயாராக இருந்தது, ஒரு நாகப்பாம்பு. இனி -
பாம்பை பார்த்து, பயத்தில் வியர்த்துப் போய், உறைந்து நின்றான், நாடோடி.
அப்போது, எங்கிருந்தோ மின்னல் வேகத்தில் வந்த ஒரு கழுகு, அந்த பாம்பைக் கொத்திப் பறந்தது.
போன உயிர், திரும்பி வந்ததைப் போல உணர்ந்தான், நாடோடி.
நாடோடியால், ஒரு சமயத்தில் சிகிச்சையளித்து காப்பாற்றப்பட்ட கழுகு அது என்பது தெரிந்தது. தன் உயிரைக் காத்த கழுகிற்கு மனதிற்குள் நன்றி சொல்லி, தன் பயணத்தை தொடர்ந்தான், நாடோடி.
தேவதை கூறியது போல, வடகிழக்கு திசை நோக்கி நடக்கத் துவங்கினான்.
நீண்ட பயணத்திற்கு பிறகும், தேவதை சொன்னது போல மலை மீது கோட்டை தெரியவில்லையே என்று நினைத்தபடியே, நடந்து சென்று கொண்டிருந்தான்.
சற்று நேரத்தில், ஒரு மலை தென்பட்டது. அவன் எதிர்பார்த்தது போலவே, மலை மீது ஒரு சிறிய, சிதைந்த கோட்டை இருந்தது. கோட்டையை பார்த்ததும், நாடோடியின் மனதில் நம்பிக்கை பிறந்தது.
அந்த கோட்டைக்குள் சிறை வைக்கப்பட்டுள்ள மன்னரைக் காப்பாற்ற வேண்டும் என்ற எண்ணம் மேலிட, வேகமாக நடந்தான். கோட்டையின் கீழ்ப்பகுதியை அடைந்தான். மெதுவாக கோட்டையை நோக்கி ஏறத் துவங்கினான்.
கோட்டைக்கு செல்ல ஏதுவாக, பாறைகளில் சிறுசிறு படிகள் செதுக்கப்பட்டிருந்தன. படிகள் வழியாக மேலேறி, கோட்டையை நெருங்கினான்.
அப்போது, யாரோ பேசிக் கொள்ளும் சத்தம் கேட்டது.
உடனே, மாயமாக மறைய வைக்கும் மோதிரத்தை, தன் இடுப்பில் இருந்து எடுத்து அணிந்து கொண்டான். பேச்சு சத்தம் வந்த திசை நோக்கி முன்னேறினான்.
கோட்டை வாயிலின் முன், இரண்டு வீரர்கள் கையில் வாளுடன் காவலுக்கு நின்றிருந்தனர். அங்கும், இங்கும் நடந்தபடி பேசிக் கொண்டிருந்தனர்.
'இந்த கோட்டையில் ஒரு அறைக்குள் தான் மன்னர் சிறை வைக்கப்பட்டிருக்க வேண்டும்' என நினைத்துக் கொண்டான், நாடோடி.
வீரர்கள் இருவரும் குறுக்கும், நெடுக்குமாக நடந்து கொண்டிருந்தனர். யார் கண்ணுக்கும் புலப்படாதபடி, நாடோடியை மாய மோதிரம் மறைத்திருந்தது. வீரர்கள் இருவரின் இடைவெளியில் புகுந்து, கோட்டைக்குள் நுழைந்தான், நாடோடி.
அந்த கோட்டை, முற்றிலுமாக சிதைந்து போயிருந்தது.
உள்ளே சென்ற நாடோடி, மன்னரை தேடினான்.
ஒரு இருட்டான அறைக்குள், கைவிலங்கிட்டு மன்னர் ராஜசிம்மவர்மன் சிறை வைக்கப்பட்டிருந்தார். அவரைப் பார்க்கவே, பரிதாபமாக இருந்தது.
அந்த அறை பூட்டின் சாவி, காவல் வீரர்களிடம் தான் இருந்தது. அவர்கள் இருவரும், இரவில் கண்ணயரும் போது, சாவியை எடுத்து மன்னரை விடுவிக்க திட்டம் வகுத்து காத்திருந்தான், நாடோடி.
சூரியன் மறைந்து, இருள் கவிழத் துவங்கியது.
நாடோடி எதிர்பார்த்தது போலவே, வீரர்கள் இருவரும், சுவற்றில் சாய்ந்தபடி, கண்ணயர்ந்தனர்.
இதுதான் சமயமென அவர்களின் அருகில் சென்றான், நாடோடி. வீரர்களில் ஒருவனின் இடுப்பில், சாவி செருகப்பட்டிருந்தது. அவன் துாக்கம் கலையாமல், பூனை போல செயல்பட்டு சாவியை எடுத்தான், நாடோடி. அங்கிருந்து, மன்னர் சிறை வைக்கப்பட்டிருந்த அறைக்கு சென்று, பூட்டை திறந்தான்.
மன்னருக்கு ஆச்சரியமாக இருந்தது. அங்கே யாருமே இல்லை. ஆனால், அறை கதவின் பூட்டு தானாகவே திறக்கிறதே என்று வியப்புடன் பார்த்துக் கொண்டிருந்தார்.
மன்னரின் அருகில் சென்ற நாடோடி, மாயமோதிரத்தை கழற்றினான். அவன் உருவம், மன்னருக்குத் தெரிந்தது. மன்னரின் கைவிலங்கை அப்புறப்படுத்தியபடி, அவரிடம் நடந்ததை விவரித்தான்...
'மன்னரே, கவலை வேண்டாம். இங்கிருந்து தப்ப, நான் உதவுகிறேன். இந்த மாய மோதிரத்தை அணிந்து கொள்ளுங்கள். உடனே, உங்கள் உருவம் யாருக்கும் தெரியாமல், மறைந்து போவீர்...
'மாய மோதிரத்தை அணிந்தபடி, அரண்மனைக்கு செல்லுங்கள். நான், பின் தொடர்ந்து வந்து, அரண்மனையில் சந்திக்கிறேன்...' என்றான், நாடோடி.
மோதிரத்தை பெற்றுக் கொண்ட மன்னர், நாடோடியை கட்டி அணைத்தார்.
'யார் எதிர்பட்டாலும், பயப்பட வேண்டாம், மன்னரே... அந்த மோதிரத்தைக் கழற்றும் வரை யார் கண்களுக்கும் தெரியமாட்டீர்கள்...' என்றான், நாடோடி.
மாய மோதிரத்தை அணிந்ததும், நாடோடி கண்களில் இருந்தும், மன்னர் மறைந்தார்.
அறையில் இருந்து வெளியேறி, கோட்டையின் வாயிலுக்கு வந்தார். வாயிலில் சிறை காவலர்கள் துாங்கியபடி இருந்தனர். அரண்மனையை நோக்கி நடக்கத் துவங்கினார், மன்னர்.
சிறிது நேரத்திற்குப் பின், நாடோடியும் புறப்பட்டான். மெல்ல நடந்து, கோட்டை வாயிலை அடைந்தான். அங்கிருந்து வெளியேற முயன்ற சமயத்தில், ஒரு வீரன் கண்விழித்துக் கொண்டான்.
- தொடரும்...
- ஆர்.வி.பதி
