PUBLISHED ON : ஏப் 11, 2026

புதுக்கோட்டை மாவட்டம், மணமேல்குடி, அரசு மேல்நிலைப் பள்ளியில், 1983ல், 10ம் வகுப்பு படித்தேன். ஒருநாள், ஆசிரியர் கலந்தர் நைனா முகமது, தலைமை ஆசிரியர் நரசிம்மனிடம் என்னை அழைத்து சென்றார். நான் பயந்தபடி சென்றேன்.
'தினமலர்' நாளிதழை என்னிடம் கொடுத்த தலைமை ஆசிரியர், 'இதில் உள்ள தலைப்பு செய்திகளை ஒரு வெள்ளை காகிதத்தில் எழுது...' என்றார். நானும் எழுதிக் கொடுக்க, 'இதை நீயே வைத்துக் கொள். இன்று ப்ரேயரின் போது இதை வாசித்து காட்டு...' என்றார்.
எனக்கு கை, கால் உதறல் எடுத்தது. ப்ரேயரில் படபடப்புடன் வாசித்து முடித்தேன். இடை இடையே ஏற்பட்ட தவறான உச்சரிப்புகளை, ஆசிரியர் சரி செய்து கொடுத்தார். அடுத்தடுத்த நாட்களில், செய்திகளை சரளமாக வாசித்து காட்டினேன். அன்று முதல் செய்தி வாசிப்பது தொடர்ந்தது.
அப்போது அகன்ற என் கூச்ச சுபாவம், பட்டுக்கோட்டையார் கலை விழாவில், 15 நிமிடங்கள் இடைவிடாமல் கவிதை பாடி, கைத்தட்டலை பெற்று தந்தது. பின், திருச்சி வானொலியில், 'மகரந்தப்பூக்கள்' கவிதை தொகுப்பில், 10 நிமிடம், 'டேக்' இல்லாமல் கவிதை வாசித்து, பாராட்டும் பெற்றேன்.
தற்போது என் வயது, 58. பானிபூரி கடை நடத்துகிறேன். பல்வேறு பத்திரிகைகளில் என் படைப்புகள் வெளி வந்தாலும், முதன் முதலில், 1983ல், 'நிலைமை!' என்ற தலைப்பில் எழுதிய கவிதை, என் புகைப்படத்துடன், 'தினமலர் -- வாரமலர்' இதழில் வெளியானதை, மறக்க முடியாது. இதற்கெல்லாம் வித்திட்டு, என்னை சரியான பாதையில் வழி நடத்திய ஆசிரியர் கலந்தர் நைனா முகமதுவிற்கு, என் படைப்புகளை காணிக்கையாக்கி, வணங்குகிறேன்.
- கே.எஸ்.ரவிச்சந்திரன், புதுக்கோட்டை. தொடர்புக்கு: 70107 46996
