தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/இணைப்பு மலர்/சிறுவர் மலர்/நாடோடியின் சாகசங்கள்! (17)

நாடோடியின் சாகசங்கள்! (17)

நாடோடியின் சாகசங்கள்! (17)


PUBLISHED ON : ஜூன் 13, 2026

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : ஜூன் 13, 2026


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

முன்கதை: ஊர், ஊராக செல்லும் நாடோடிக்கு, அழைக்கும் போதெல்லாம் வந்து உதவுவதாக ஒரு தேவதை வரம் கொடுத்தது. அணிந்தவுடன் பிறர் பார்வையில் இருந்து மறைய வைக்கும் மாய மோதிரம் ஒன்றும் கிடைத்தது. இவற்றை பயன்படுத்தி மக்களுக்கு உதவி ஊர் ஊராக சென்றான் நாடோடி. அவன் தங்கியிருந்த நகரத்தில் ஒரு வீட்டில் திருட்டு நடந்ததை அறிந்தான். அங்கு திருடியோரை கண்டறிந்ததுடன் ஊருக்கு வெளியில் பழைய பங்களாவில் மறைத்து வைக்கப்பட்டிருந்த நகைகளையும் மீட்டு கொடுத்தான் நாடோடி. இனி -

வழக்கம்போல நாடோடியின் பயணம் தொடர்ந்தது. முன்பை விட உற்சாகமாய் பயணம் செய்தான். காரணம், அவன் பெற்றிருந்த பலவித அனுபவங்கள் உதவின. புதிய இடங்களை தேடி, அவன் கால்கள் நடந்தன.

வழியில் ஒரு காட்டைக் கடந்து சென்றான். அங்கு பலவிதமான மிருகங்களையும், பறவைகளையும் கண்டான் நாடோடி. இரவில் காட்டில் தங்கிச் செல்ல வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டது. பெரிதாக வளர்ந்திருந்த ஒரு மரத்தைத் தேர்வு செய்து, அதன் மீது படுக்கை போன்ற அமைப்பை ஏற்படுத்தி, துாங்கினான். இதற்கு முன் தங்கியிருந்த ஊரில், கடும் பணிகள் காரணமாக நாடோடி உடல் மிகவும் களைப்படைந்திருந்தது. பலவிதமாக செயலாற்றியதால், சோர்வு ஏற்பட்டது. அதனால் படுத்த உடன் ஆழ்ந்து துாங்கிப் போனான் நாடோடி.

எதையும் அறியாதவாறு ஆழ்ந்த துாக்கத்தில் இருந்தான். நள்ளிரவு நேரத்தில், ஒரு பெரிய மலைப்பாம்பு, அந்த மரத்தின் மேற்புறத்திலிருந்து இறங்கி வந்தது. சற்று நேரத்தில் அது நாடோடியின் அருகில் வரவிருந்தது. பாம்பு அவனை விழுங்கி விடும் போல இருந்தது.

அந்த நேரம், 'ஜோ...'வென மழைக் கொட்டத் துவங்கியது. மழைத் துளிகள் பட்டதும் கண் விழித்தான், நாடோடி. எழுந்து உட்கார்ந்த பின் தான் மழை துாறியதை புரிந்து கொண்டான்.

அன்று பவுர்ணமி நாள் என்பதால், நிலவொளி பளிச்சென்று பிரகாசமாக இருந்தது. அருகில் வந்து கொண்டிருந்த மலைப்பாம்பு கண்களில் பட்டு விட்டது.

நாடோடி சட்டென எழுந்தான். அருகில் இருந்த மற்றொரு பெரிய கிளைக்குத் தாவி, அதன் மீது அமர்ந்து கொண்டான். அந்த மலைப்பாம்பு, எந்த சலனமும் இன்றி மெல்ல ஊர்ந்தபடி மரத்திலிருந்து இறங்கியது. சற்று நேரத்தில் காட்டின் தரைப்பகுதியை அடைந்தது. பின் காட்டின் ஊடே ஊர்ந்து மறைந்து விட்டது.

அதைக் கண்டதும், 'அப்பாடா... மழை பெய்ததாலும், நிலவின் ஒளியாலும், பெரும் ஆபத்தில் இருந்து தப்பித்து விட்டோம்' என, எண்ணியபடி பெருமூச்சு விட்டான், நாடோடி. மீண்டும் மரக்கிளைக்கு வந்தான். ஈரத்தை துடைத்து விட்டு அதே இடத்தில் படுத்துக் கொண்டான். சற்று நேரத்தில் உறங்கியும் போனான்.

மறுநாள் காலை கண்விழித்து எழுந்தான் நாடோடி. எங்கிருக்கிறோம் என யோசித்துப் பார்த்தான். சற்று நேரத்துக்கு பின் தான், காட்டில் தங்கியிருப்பது புரிந்தது. நிதானமாக மரத்திலிருந்து இறங்கினான். சற்று தொலைவு நடந்ததும், ஒரு அழகான அருவி தென்பட்டது. காலைக் கடன்களை முடித்து, அருவியில் களைப்பு தீர குளித்தான். உடைகளைத் துவைத்துக் காயப் போட்டான். அவை நன்றாக உலரும் வரை காத்திருந்தான்.

இந்த இடைப்பட்ட நேரத்தில், காட்டில் கிடைத்த பழங்களை எடுத்து வந்து சாப்பிட்டு பசி ஆற்றிக் கொண்டான்.

சூரியனின் கதிர்கள் காட்டில் மரம், செடி, கொடிகளுக்கிடையில் நுழைந்து தரைப் பகுதியைத் தொட்டது.

அடுத்த ஊரைத் தேடி நடக்கத் துவங்கினான், நாடோடி.

இரண்டு நாட்கள் தொடர்ந்து நடந்த பின் ஒரு நகரம் தென்பட்டது.

'ஆஹா... இங்கு சில நாட்கள் தங்கி சுற்றிப்பார்த்து விட்டு மீண்டும் பயணத்தைத் தொடரலாம்' என, எண்ணியபடி வேகமாக நடந்தான், நாடோடி.

அந்த நகரத்தில் மிகப்பெரிய வேலைகள் காத்துக் கொண்டிருப்பதை, அப்போது அவன் அறிந்திருக்கவில்லை.

நண்பகல் நேரத்தில் அந்த பகுதியை நெருங்கி விட்டான் நாடோடி. அது ஒரு சிறிய நகரமாக இருந்தது.

அதன் பெயர் சந்திரபுரி.

வழக்கமாக ஒரு ஊருக்கு போனால், வேலையாக இங்கும் அங்குமாக நடந்து கொண்டிருப்பர் மக்கள். ஆனால், இந்த ஊரில் யாருமே தென்படவில்லை.

நாடோடிக்கு இது ஆச்சரியத்தை ஏற்படுத்தியது. ஊரே காலியாக இருந்தது.

இன்னும் சிறிது துாரம் நடந்து ஊருக்குள் சென்று பார்க்கலாம் என எண்ணினான். மெல்ல ஊருக்குள் நுழைந்தான். அங்கு எல்லாமே வினோதமாக இருந்தன. வீடுகள் அனைத்தும், அளவில் மிகச்சிறியதாக, பொம்மை போல தெரிந்தன. இந்த பொம்மை வீட்டில் மக்கள் எப்படி வசிப்பர் என்ற எண்ணம் நாடோடிக்கு ஏற்பட்டது.

அப்போது தான் அவன் கண்களுக்கு ஒரு விஷயம் புலப்பட்டது. நகரத்தில் வசித்த அனைவரின் உருவமும் மிகச்சிறிய அளவில் காணப்பட்டது. சித்திரக் குள்ள மனிதர்கள் என்று சொல்வார்களே... அதுபோன்ற உருவில் நடமாடிக் கொண்டிருந்தனர், மக்கள்.



- தொடரும்...

- ஆர்.வி.பதி


தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us