PUBLISHED ON : ஜூன் 13, 2026

சென்னை, பெசன்ட் நகர், ஊரூர் அறிஞர் அண்ணா அரசு உயர்நிலைப் பள்ளியில், 1975ல், எஸ்.எஸ்.எல்.சி.,படித்த போது நடந்த சம்பவம்...
தமிழாசிரியராக இருந்த மகாவித்வான் டாக்டர் க.பழநி பாலசுந்தரனார், பேரன்புடன் மொழியை கற்பிப்பார்.
மாணவர்களுக்காக இலக்கண புத்தகம் ஒன்றை உருவாக்கித் தந்தார். அதற்காக குறிப்புகள் சொல்வார். நானும், வகுப்பு நண்பன் ரவியும், அடித்தல் திருத்தல் இன்றி, மாற்றி மாற்றி எழுதுவோம். அது, தெளிவாக இருக்கும்.
எழுதியதை அவரது குருநாதர் மகாவித்வான் மே.வீ.வேணுகோபால பிள்ளையிடம் காட்டி ஒப்புதல் பெற்று வருவார், தமிழாசிரியர். அந்த பிரதியில் திருத்தம் ஏதும் செய்யாமல், 'மிக நன்று' என, குறிப்பு எழுதப்பட்டிருக்கும். அது உத்வேகம் தந்தது. அந்த இலக்கணப் புத்தகத்தில், எங்கள் பெயரையும் தமிழாசிரியர் பதிவு செய்திருந்தது நெகிழ்ச்சி தந்தது.
எனக்கு, 66 வயதாகிறது. பிரபல பன்னாட்டு வாகன உற்பத்தி நிறுவனத்தில், மேலாளராக பணியாற்றி ஓய்வு பெற்றேன். தமிழ் மொழியில், 50க்கும் அதிகமாக புத்தகங்கள் எழுதியுள்ளேன்.
தினமலர் - வாரமலர் இதழில், 'ஏழிசை மன்னர் பாகவதர் வாழ்க்கை சரித்திரம்' என்ற தலைப்பில் எழுதிய தொடர், உலக அளவில் என்னை பிரபலப்படுத்தியது. மேடைப் பேச்சாளராகவும் பிரகாசிக்கிறேன். இவை எல்லாம், பள்ளியில் தமிழாசிரியர் க.பழநி பாலசுந்தரனாரிடம் கற்றவையால் கிடைத்த பரிசுகள் என்பதை, நன்றி பெருக்குடன் நினைவில் பதித்து வாழ்கிறேன்.
- கார்முகிலோன், சென்னை. தொடர்புக்கு: 94445 38696
