PUBLISHED ON : ஜூன் 20, 2026

முன்கதை: அழைக்கும் போதெல்லாம் வந்து உதவும் வரத்தை தேவதையிடம் பெற்றிருந்தான், நாடோடி. அணிந்தவுடன் பிறர் பார்வையில் இருந்து மறையும் மாய மோதிரம் ஒன்றும் வைத்திருந்தான். இவற்றை பயன்படுத்தி, மக்களுக்கு உதவியபடி ஊர் ஊராக சென்றான், நாடோடி. புதிதாக வினோத நகரம் ஒன்றுக்கு வந்தான். கூர்ந்து கவனித்த போது, உருவில் மிகவும் சிறிய குள்ள மனுஷர்கள் அங்கு இருப்பதை கண்டு வியப்பில் ஆழ்ந்தான். இனி -
ந கரில் ஓரிடத்தில் குனிந்தபடி அமர்ந்தான், நாடோடி.
அந்த பகுதியில் சென்று கொண்டிருந்த ஒருவரை அழைத்தான்.
'நீங்கள் யார்... ஏன் இந்த ஊரில் எல்லாருமே சித்திரக் குள்ளர் போல் இருக்கின்றனர்...'
நாடோடி கேட்டது அந்த குள்ள மனுஷர் காதுகளில் விழவில்லை.
பேசுவது புரியவில்லை என, சைகை மொழியில் கூறினார், குள்ள மனுஷர்.
உடனே நாடோடியும் ஒரு சித்திரக் குள்ளனாக மாறி அருகில் நின்றான்.
அந்த குள்ள மனுஷர், வியந்து போனார்.
இப்போது, நாடோடி பேசியது அவருக்கு நன்கு கேட்டது.
'ஐயா... நீங்க மந்திரவாதியா... எப்படி நினைத்த உடனே என்னைப் போல சிறிய உருவத்திற்கு மாறினீர்...'
' அதையெல்லாம் அப்புறம் சொல்றேன்... இந்த ஊரில் ஏன் எல்லாரும் குள்ள மனுஷங்களா இருக்கிறீங்க? வீடுகள் அனைத்தும் சிறியனவாக உள்ளனவே...'
நாடோடி கேட்டதும், 'அது ஒரு பெரிய கதை...' என்றார், குள்ள மனுஷர்.
'அப்படியா... அந்த கதையை கொஞ்சம் சொல்லுங்களேன்...'
'ஊருக்கு சில மாதங்களுக்கு முன், ஒரு துறவி வந்திருந்தார். அவர் மிகவும் சக்தி வாய்ந்தவர் என்று பேசிக் கொண்டனர். அந்த துறவி எந்த நாட்டுக்கு சென்றாலும், அந்நாட்டு மன்னர் நேரில் சென்று வரவேற்பார்களாம். இந்த பகுதியை ஆளும் குறுநில மன்னரிடம் இந்த விபரத்தைத் தெரிவித்துள்ளனர். ஆனால் அவரோ, 'நான் நிலத்தை ஆளும் மன்னன். நான் போய் துறவியை வரவேற்பதா...' என்று ஏளனமாக கூறியுள்ளார்...
'மன்னர் வந்து வரவேற்பார் என்று காத்திருந்தார் துறவி, நெடுநேரமாகியும் மன்னர் வரவில்லை. துறவியை வரவேற்க்க விரும்பவில்லை என்ற விஷயம் தெரிவிக்கப் பட்டது. கோபமடைந்த துறவி, 'நாட்டில் அனைவரும் குள்ள மனுஷர்களாக கடவது' என சபித்து சென்று விட்டார்... அப்போதிலிருந்து மன்னர் உட்பட அனைவரும் இப்படியாகி விட்டோம். வசித்த வீடுகளும் உருவத்திற்கேற்ப சிறியதாகி விட்டன. தாங்களைப் பார்த்தால் பெரிய மந்திரவாதியாக தோன்றுகிறது. எங்களை காப்பாற்றி பழைய நிலைக்கு கொண்டு வர வேண்டும்...'
மிகவும் உருக்கமாகக் கேட்டார், குள்ள மனுஷர்.
'நான் மந்திரவாதியெல்லாம் இல்லை. உங்களைப் போல சாதாரண மனிதன் தான். ஆனால், உங்களை பழைய நிலைக்கு மீட்டு வர முயற்சி செய்கிறேன்...'
இதைக் கேட்டதும் குள்ள மனுஷர் மகிழ்ந்தார்.
உடனே மிகவும் நிதானமாக, 'அந்த துறவி இப்போது எங்கே இருக்கிறார் என்று தெரியுமா...' என்றான், நாடோடி.
'இங்கிருந்து கிழக்காக புவனபுரி என்றொரு நகரம் இருக்கிறது. அங்கு சென்றிருப்பதாக பேசிக் கொள்கின்றனர்...'
'சரி... கவலையை விடுங்கள்... நான் பார்த்துக் கொள்கிறேன்...'
நா டோடி தன்னை பழைய உருவத்திற்கு மாற்றிக் கொண்டான். கிழக்கு திசை நோக்கி நடக்கத் துவங்கினான்.
மறுநாள், புவனபுரியை அடைந்தான்.
ஊரில் தென்பட்டவரிடம், 'புதிதாக எவரேனும் துறவி வந்திருக்கிறாரா...' என விசாரித்தான், நாடோடி.
'ஆம் வந்திருக்கிறார்... மிகவும் சக்தி வாய்ந்தவர் என்று பேசிக் கொள்கின்றனர்...'
'எங்கு தங்கியிருக்கிறார் என கூற முடியுமா...'
துறவி தங்கியிருக்கும் இடத்தை கூற, அங்கு சென்று அவரை சந்தித்தான், நாடோடி.
'தங்களை வணங்குகிறேன்... நான் பக்கத்தில் சந்திரபுரி நாட்டிலிருந்து வருகிறேன்...'
'என்ன விஷயம்...'
'சிறிது காலத்திற்கு முன், பக்கத்து நகரத்திற்கு நீங்கள் சென்றிருந்த போது, ஒரு சம்பவம் நடந்ததாக அறிந்தேன். அந்த நகர மன்னர் தங்களை வரவேற்க விரும்பவில்லை என்ற காரணத்தால் கோபமடைந்து அங்குள்ளோரை குள்ள மனுஷங்களாக மாற்றி விட்டதாக அறிந்தேன். அனைவரும் வருந்திக் கொண்டிருக்கின்றனர். தயைகூர்ந்து சாபத்தை விலக்கி அவர்களை முன்பு போலாக்க வேண்டும்...'
துறவியிடம் பணிவாகப் பேசினான், நாடோடி.
இதைக் கேட்டதும் கோபமடைந்து நாடோடியை எரித்து விடுவது போலப் பார்த்தார், துறவி.
சற்றே பயந்து போனான், நாடோடி.
- தொடரும்...
- ஆர்.வி. பதி
