
பூமியின் ஒரே துணைக்கோள் நிலவு. வட்ட வடிவில் வெண்ணிற ஒளியை வீசி மனதை கவர்கிறது முழுநிலவு. கரைந்தும், வளர்ந்தும் கற்பனையை தருகிறது. 
பூமியில் இருந்து, 3.82 லட்சம் கி.மீ., தொலைவில் உள்ள அதன் தரைப்பரப்பில், 1969ல் கால் பதித்து விட்டனர் விண்வெளி வீரர்கள். 
நிலவுக்கு விண்கலம் அனுப்பும் முயற்சியை முதலில் 1959ல் துவங்கியது ரஷ்யா. ஆசிய, ஐரோப்பிய கண்டங்களை உள்ளடக்கிய இந்த நாடு அனுப்பிய  லுானா 2 என்ற விண்கலம் செப்டம்பர் 12, 1959ல் நிலவை வெற்றிகரமாக அடைந்தது. 
தொடர்ந்து, அமெரிக்கா, புளோரிடா கென்னடி விண்வெளி ஆய்வு நிலையம் இந்த பணியில் ஈடுபட்டது. நிலவுக்கு ஜூலை 16, 1969ல் அப்பலோ 11 என்ற விண்கலத்தை அனுப்பியது. இதில் விண்வெளி வீரர்கள் நீல் ஆம்ஸ்ட்ராங், மைக்கேல் காலின்ஸ், எட்வின் ஆல்ட்ரின் பயணித்தனர். 
இந்த விண்கலம், ஜூலை 19ல் நிலவின் சுற்றுப்பாதையை அடைந்தது. ஆம்ஸ்ட்ராங், எட்வின் ஆல்ட்ரின் ஆகியோர், விண்வெளி ஓடத்தில் பயணித்து நிலவின் மேற்பரப்பை ஜூலை 20ல் அடைந்தனர். இறங்க திட்டமிட்டிருந்த பகுதியில் பாறைகள் அதிகம் இருந்தன. இதனால், மேலும் சில அடி துாரம் பயணித்து, நிலவில் முதன் முதலில் கால் பதித்தார் ஆம்ஸ்ட்ராங். 
அப்போது, 'தட்ஸ் ஒன் ஸ்மால் ஸ்டெப் பார் மேன்... ஒன் ஜெயன்ட் லீப் பார் மேன்கைண்ட்...' என, ஆங்கிலத்தில் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார். அதாவது, 'நிலவில் மனிதன் பதித்த காலடி தடம் மிகவும் சிறியது; ஆனால் மனித இனத்திற்கு இது ஒரு மைல்கல்...' என, உழைப்பின் சிறப்பை எடுத்துக் கூறினார். இந்த நிகழ்வை உலகமே வியந்து பாராட்டியது. 
நிலவில் கால் பதித்த போது, மெல்லிய துணிக்கையாக அந்த மண் இருப்பதை உணர்ந்தனர் விண்வெளி வீரர்கள். அங்கு பரிசோதனை கருவிகளை பொருத்தினர். இவற்றின் உதவியால் தான், பூமியை விட்டு, நிலவு விலகிப் போவதை இப்போது உறுதி செய்ய முடிகிறது. 
நிலவில், 21 மணி 38 நிமிடங்கள் தங்கியிருந்தனர் விண்வெளி வீரர்கள். பின், நிலவை சுற்றிக்கொண்டிருந்த விண்கலத்திற்கு வந்தனர். அடுத்து, பூமியை நோக்கி பயணம் துவங்கியது. வட அட்லாண்டிக் கடலில் ஹவாய் தீவு அருகே ஜூலை 24, 1969ல் இறங்கியது அந்த விண்கலம். கப்பலில் சென்ற மீட்புப் படை, வீரர்களை அழைத்து வந்தது. உலக அளவில் மாபெரும் வரலாற்று நிகழ்வாக இது பதிவு செய்யப்பட்டுள்ளது. 
ரஷ்யா, அமெரிக்கா, சீனாவை தொடர்ந்து நம் நாடும் நிலவை ஆய்வு செய்வதில் பெரும் வெற்றிகள் பெற்று வருகிறது. நம் விஞ்ஞானிகள் உருவாக்கிய சந்திரயான் விண்கலம் நிலவை ஆராய்ந்து, முற்றிலும் புதிய செய்திகளை உலகுக்கு அளித்து வருகிறது. 
முதன் முதலில் மனிதன் நிலவில் கால்பதித்த தினமான ஜூலை 20ம் தேதியை, சர்வதேச நிலவு தினமாக ஐக்கிய நாடுகள் சபை அறிவித்துள்ளது. 
- நிகி
வளர்பிறை!  
நிலவை அம்புலி, திங்கள், மதி, சந்திரன் என்றும் தமிழில் அழைப்பர். இது புவியை நீள் வட்டப்பாதையில் சுற்றி வர, 29 நாட்கள் எடுக்கிறது. ஈர்ப்பு விசையால் புவியை நோக்கி எப்போதும் ஒரு பக்கத்தையே காட்டுகிறது நிலவு. 
பூமியில் ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு அளவில் தெரிகிறது. இதை பிறை என்பர். புதுநிலவு எனப்படும் அமாவாசையன்று நிலவு தென்படாது. மிக இருட்டாக இருக்கும். பின் ஒவ்வொரு நாளும் நிலவின் உருவம் சிறிதாக தெரியும். அது படிப்படியாக பெரிதாகி, 14 நாட்களுக்கு பின் முழுநிலவாகும். அன்று வட்ட வடிவில் தெரியும். இதை பவுர்ணமி என்பர். 
அடுத்து தேய்ந்து, மீண்டும் புதுநிலவு நிலைக்கு திரும்பும். புதுநிலவு துவங்கி முழுநிலவு வரை வளர்பிறை என்றும், அடுத்து வருவதை தேய்பிறை என்றும் அழைப்பர். 

