
சென்னை, சைதாப்பேட்டை மாநகராட்சி பள்ளியில், 1957ல், 9ம் வகுப்பு படித்த போது நடந்த சம்பவம்!
ஆண்டு இறுதியில் நடந்த கணித பாட தேர்வில் எல்லா கேள்விகளுக்கும் விடையளித்தேன். தேர்வை ஒருமணி நேரம் முன்னதாகவே எழுதி முடித்து விடைத்தாளை, தேர்வறை கண்காணிப்பாளர் ஆசிரியை கவுரியிடம் கொடுத்தேன்.
அதை திருப்பி தந்து, 'இப்போதே சென்று வீட்டில் என்ன செய்ய போகிறாய்... கணக்குகளை மீண்டும் ஒருமுறை சரி பார்...' என்றார். இருக்கையில் அமர்ந்து எழுதியிருந்ததை சரி பார்த்தேன். சிறு பிழைகள் தெரிய வந்தன. எல்லாவற்றையும் நிதானமாக நிவர்த்தி செய்து கொடுத்தேன்.
தேர்வு முடிவு வந்த போது அந்த பாடத்தில், 95 மதிப்பெண் வாங்கியிருந்தேன். பின், கல்லுாரியில் கணிதத்தை முதன்மையாக படித்தேன். நல்ல மதிப்பெண்களுடன் பட்டப்படிப்பை நிறைவு செய்தேன். போட்டித் தேர்வில் பங்கேற்று, மத்திய அரசுப் பணியில் சேர்ந்தேன்.
இப்போது, என் வயது, 82; இந்திய காப்பீட்டு கழகத்தில், உதவி கோட்ட மேலாளராக உயர்ந்து, பணி ஓய்வு பெற்றேன். சிறப்பாக பணியாற்றியதற்கு நிறுவனம் வழங்கும், 'பெல்லோஷிப்' அந்தஸ்தும் பெற்றேன். பணிகளை நிதானமாக பரிசீலனை செய்து முடித்ததால் தான் மேம்பட்ட நிலையை அடைய முடிந்தது. இதற்கு வழிகாட்டிய ஆசிரியையை நன்றியுடன் நாளும் வணங்கி வருகிறேன்.
- மங்களம் சுந்தரேசன், சென்னை