
நீலகிரி மாவட்டம், கோத்தகிரி, சோலுார் மட்டம், ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில், 1994ல், 4ம் வகுப்பு படித்த போது, வகுப்பாசிரியராக இருந்தார் சந்திரன்.
ஒருநாள், 'கைக்கடிகாரத்தில் நேரம் பார்க்க தெரியுமா...' என்று கேட்டார். எல்லாரும் அமைதியாக இருந்தோம். தெரியவில்லை என்றால் அடிப்பாரோ என அச்சம்.
அப்போது, வியக்கும் வகையில், தன் கைக்கடிகாரத்தை கழட்டி, அதில் முட்களை வெவ்வேறு கோணங்களில் மாற்றி, நேரம் பார்க்க கனிவுடன் கற்றுக் கொடுத்தார். மறுநாள் ஒவ்வொருவராக அழைத்து, நேரத்தை மாற்றி, 'இப்போது எத்தனை மணி...' என்று கேட்க, நானும், தோழி ராதாவும் மட்டும் சரியாகச் சொல்லி பாராட்டு பெற்றோம்.
அத்துடன், அவரது கைக்கடிகாரத்தை எனக்கு அணிவித்தார். பக்கத்து வகுப்பில் பாடம் நடத்திய ஆசிரியையின் கைக்கடிகாரத்தை இரவல் வாங்கி, தோழிக்கு அணிவித்தார். அன்று மாலை வரை அணிந்திருந்தோம். அந்த வாய்ப்பு பெரும் மகிழ்வை தந்தது.
தற்போது, என் வயது, 38; கல்லுாரியில் உதவிபேராசிரியராக பணிபுரிகிறேன். பள்ளி நாட்களில் அந்த ஆசிரியர் அணிந்திருந்தது போலவே, வனப்பு மிக்க சங்கிலியுடன் கூடிய கைக்கடிகாரம் அணிவதை வழக்கமாக கொண்டுள்ளேன். வகுப்பறையில் நடந்த நிகழ்வின் நினைவை மனதில் ஏந்தியுள்ளேன்.
- த.சத்தியசீலன், கோவை.
தொடர்புக்கு: 96009 00950