PUBLISHED ON : அக் 05, 2024

முன்கதை: வளர்ப்பு மிருகங்கள் மீது அன்பு கொண்டு கற்பனையில் சஞ்சரித்து வந்தான் மகிழ். அவன் ஆர்வத்தை அறிந்து, காவல்துறையில் ஓய்வு பெற்ற மோப்பநாய் செங்கிஸ்கானை தத்தெடுத்தார் அவன் தந்தை. அடுக்குமாடி குடியிருப்பில் எதிர்ப்பை மீறி குழந்தைகள், அந்த நாயுடன் நெருக்கம் காட்டினர். அது, குடியிருப்பின் எல்லா பகுதிகளையும் சுற்றிப் பார்த்து, பாதுகாப்பை உறுதி செய்தது. பொதுவெளியில் மலம் கழித்ததாக திடீரென அதன் மீது புகார் வந்ததால் பாய்ந்து ஓடியது. இனி -
செங்கிஸ்கான் ஓடுவது, கை, கால் முளைத்த ஒரு போன்சாய் வெண்பஞ்சு மேகம் உருண்டு, புரண்டோடுவது போல் இருந்தது. காதுகளை சிலுப்பி, வாலை நிமிர்த்தியபடி ஓடியது; அடுக்குமாடி குடியிருப்பு வாசலில் தயங்கி நின்றது.
பின், எதிரில் மெக்கானிக் கடைக்குள் பாய்ந்தது. மெக்கானிக்கை கவ்வி பிடித்தது.
பின்னால் ஓடி வந்த மகிழ், மெக்கானிக்கின் இடது கையை பற்றி முறுக்கினான்.
''சதிகாரனே... வா என்னுடன்...''
அவனின் டவுசரை கடித்து, இழுத்து சென்றது செங்கிஸ்கான்.
செயலருடன் நின்றிருந்தனர் அடுக்குமாடி குடியிருப்பு வாசிகள்.
''மெக்கானிக்கை ஏன் பலவந்தமாக இழுத்து வருகிறீர்...''
மகிழிடம் வினவியது மட்டுமின்றி, உள்ளூக்குள் பதறினார் செயலர்.
''மெக்கானிக்... நீயும், செயலரும் கூட்டுக்கைன்னு எனக்கு தெரியும். அவருடன் சேர்ந்து, சதி திட்டம் ஏன் தீட்டினாய்...''
''அது வந்து...''
''நீ உண்மையை கூறவில்லையேல்... என்ன நடக்கும் தெரியுமா... செங்கிஸ்கான் கோபத்தை கிளறி விடாதே...''
''மகிழ்... அவனை எதுக்கு மிரட்டுகிறாய்...''
''செயலரே... சிறிது நேரம் பேசாமல் இருக்குறீரா...''
''விடியற்காலை, 4:00 மணிக்கு செயலர் என்னை எழுப்பி, அடுக்குமாடி குடியிருப்புக்கு, புது விருந்தாளியாக வந்து இருக்கும் செங்கிஸ்கானை அடித்து விரட்டணும் என்றார். ஒரு பாட்டிலில் பன்றி சிறுநீர் தயார் செய்து, அடுக்குமாடி குடியிருப்பு நடைபாதையில் கொட்டினோம்...
''அத்துடன், பழுப்பு நிற ஐஸ்கிரீமை பிழிந்து விட்டோம். செங்கிஸ்கான் சிறுநீர், மலம் கழித்து அசிங்கம் செய்ததாக பழி சுமத்தினோம். ஆனால், எங்கள் சதி திட்டம் தற்சமயம் வெட்ட வெளிச்சமாகி விட்டது. செங்கிஸ்கான் அனைத்தையும் கண்டுபிடித்து விட்டது...''
செயலரை சூழ்ந்து, முறைத்தனர் குடியிருப்பு வாசிகள்.
'ஒரு மோப்ப நாயுடன் போட்டி போட்டு தரத்தை குறைத்து கொண்டீரே...'
'நீ ஒரு அல்பம்...'
'கடந்த, மூன்று ஆண்டுகளாக செயலராக இருக்கிறாய். இதுபோல், தவறுகளை எத்தனை முறை, எங்களுக்கு தெரியாமல் செய்தீர்...'
''அமைதி அடையுங்கள். வயதில் பெரியவர், ஏதோ எரிச்சலில் இப்படி செய்து விட்டார்...''
சமாதானப்படுத்தினான் மகிழ்.
செங்கிஸ்கானை அழைத்து வீட்டுக்கு நடந்தான்.
'லொள்... லொள்...'
அழகு நிலையம் -
செங்கிஸ்கானும், மகிழும் அழகு நிலையத்திற்குள் சென்றனர்.
''வாருங்கள்... உங்களை எந்த மாதிரி அழகு படுத்த வேண்டும்...''
கேட்டாள் வரவேற்பாளினி.
''என் செங்கிஸ்கானின் பெர்சனாலிட்டியை மகிமைபடுத்தணும்...''
''கட்டாயம் செய்கிறோம்...''
செங்கிஸ்கானை திரவ சோப்பு போட்டு, குளியல் தொட்டியில் விட்டனர். ஆனந்தமாய் குளித்தது.
பின், அதன் மேலுள்ள ரோமங்களை அழகாக கத்தரித்தனர். பல் துலக்கி, இரு காதுகளையும் சுத்தப்படுத்தினர்.
கால் நகங்களை வெட்டி, பளபளப்பு ஏற்றினர்; அழகான சீப்பை வைத்து, செங்கிஸ்கானின் ரோமங்களை வாரினர்.
மசாஜ் செய்தனர். கழுத்தில் இருந்து வாய் வரை நீவி விட்டனர்.
''திருப்தியா செல்லம்...''
பதிலுக்கு தலையாட்டியது செங்கிஸ்கான்.
பணத்தை கொடுத்து, செங்கிஸ்கானுடன் மிடுக்காய் நடந்தான் மகிழ்.
இரவு உணவை சாப்பிட்ட பின், ஒரு மாதிரி முனங்கியது செங்கிஸ்கான்.
''என்ன செங்கிஸ்கான்...''
படுக்கை அறைக்கு வெளியே அடிக்கடி வந்து நின்றது.
''என்னடா வெளியில் போகணுமா...''
'ஆமாம்...'
சமிக்ஞை மொழியில் கூறியது செங்கிஸ்கான்.
''சிறிது நேரம் தானா அல்லது இரவு முழுவதுமா...''
தலையை நீட்டி அசைத்தது.
''இரவு நேரம் என்பதால், கவனமுடன் இருக்க வேண்டும். உன்னை யாராவது காயப்படுத்தி விடுவர்...''
'என்னை காயப்படுத்த யாராவது இனிமே தான் பிறந்து வரணும்...'
''சரி... வெளியில் செல்...''
விடியற்காலை, 6:00 மணி. செங்கிஸ்கான் ஓடி வந்தது.
வாய் முழுதும் ரத்தம்.
''ஐயோ... என்னடா செய்துள்ளாய். செயலரை கடித்து குதறி விட்டாயா...''
செங்கிஸ்கான் வாயில் இருந்து, எதையோ துப்பியது.
ரத்த, குழகுழப்புடன் ஒரு சதை துண்டு வந்து விழுந்தது!
- தொடரும்...
ஆர்னிகா நாசர்