PUBLISHED ON : டிச 28, 2024

முன்கதை: ஆர்வத்தால், காவல்துறை புலனாய்வு பிரிவில் பணியாற்றி ஓய்வு பெற்ற மோப்பநாய் செங்கிஸ்கானை, தத்தெடுத்தான் சிறுவன் மகிழ். அதன் பயிற்சியாளராக இருந்த காண்டீபன், பிரிய மனமின்றி அதைக் கடத்தி சென்றான். அவனுடன் ஒத்துழைக்க மறுத்ததால் திறந்து விட்டான். மீண்டும் மகிழ் குடியிருப்புக்கு வந்தது செங்கிஸ்கான். முன் விரோதத்தால் போதைப் பொருள் கடத்தல் கும்பல் அதை தீர்த்துக்கட்ட திட்டம் தீட்டியிருந்தது. இனி -
மனநல ஆலோசனை மையம்.
நாற்காலியில் அமர்ந்திருந்தார் மருத்துவர் மாடல் ரிவால்விங்.
அவர் எதிரே அமர்ந்திருந்தான் காண்டீபன்.
''வணக்கம் டாக்டர்...''
''வணக்கம் காண்டீபன்...''
''நான் செய்த குற்றங்களை கூறி அமைதி பெற வந்திருக்கிறேன் டாக்டர்...''
''கவலைப்படாதீர் காண்டீபன். மனதில் உள்ளதை எல்லாம் கூறுங்கள்...''
செங்கிஸ்கானுடன் எட்டு ஆண்டு பணி அனுபவம், -அது பணி ஓய்வு பெற்றது, சிறுவன் மகிழ் தத்து எடுத்து சென்றது, அவன் குடும்பத்தினரிடம் சென்று மடிப்பிச்சை கேட்டு, மறுத்ததால் கடத்திச் சென்று, சுட்டுக் கொல்ல முயன்றது வரை நிகழ்வுகளை விவரித்தான். பின்,- மனம் திருந்தி வந்து பணியில் சேர்ந்திருப்பதை கண்ணீருடன் விவரித்தான் காண்டீபன்.
''ஒரு வளர்ப்பு மிருகத்தின் மீது அவ்வளவு பாசமா... அதை கைப்பற்ற இத்தனை குற்றங்களை புரிந்தீரா...''
''செங்கிஸ்கானை உயிருக்கு மேலாக நேசிக்கிறேன் டாக்டர்...''
''நீங்கள் மயக்க மருந்து கொடுத்த நபர்களுக்கு ஒன்றும் ஆகவில்லை. செங்கிஸ்கானையும் சுடவில்லை; மூட்டை மூட்டையாய் குற்றங்களை சம்பாதிக்காமல் தப்பித்து இருக்கிறீர்; உங்களை பாவங்களில் இருந்து மீட்டுள்ளது செங்கிஸ்கான்...''
''ஆம் டாக்டர்...''
''நீங்கள் அதிர்ஷ்டசாலி...''
''நன்றி டாக்டர்...''
''மருத்துவ விடுப்பை ரத்து செய்து மீண்டும், பணியில் சேர்ந்ததில் எதுவும் பிரச்னை இல்லையே...''
''இல்லை டாக்டர்...''
''நீங்கள் செங்கிஸ்கானை கடத்தி சென்றது துறை சார்ந்த நபர்கள் யாருக்காவது தெரியுமா...''
''தெரியாது டாக்டர்...''
''மீண்டும் செங்கிஸ்கானை தத்தெடுத்த வீட்டுக்கு பிரச்னைகளை பரிசளிக்காதீர். அந்த நாய்க்காகவும், அதை தத்தெடுத்தோர் நலனுக்காகவும் இறைவனிடம் வேண்டுங்கள்...''
''வேண்டுகிறேன் டாக்டர்...''
அப்போது -
பேசிக் கொண்டிருந்த காண்டீபனின் மனக்கண்ணில் ஒரு காட்சி தோன்றியது.
செங்கிஸ்கான் வசிக்கும் பாற்கடல் அடுக்குமாடி குடியிருப்புக்கு அருகே ஒரு குடியிருப்பில் டெலஸ்கோபிக் துப்பாக்கியை, 'அசெம்பிள்' செய்து பொருத்துகிறான் ஒருவன். அவன் குறி வைத்தது நடைபாதையில் மிடுக்காக நடந்து வரும் செங்கிஸ்கான் மீது நீள்கிறது.
திடுக்கிட்டான் காண்டீபன்.
'டெலஸ்கோப்பிக் துப்பாக்கியை நீட்டும் ஆசாமியை எங்கோ பார்த்துள்ளோம்'
மூளையை கசக்கி, பின் சூரியனாகிவிட்டான் காண்டீபன்.
'இவன் மியான்மர் நாட்டை சேர்ந்த ஹிட்மேன். ஏய்... என் செங்கிஸ்கானையா சுட்டுக் கொல்லப் பார்க்கிறாய்; இதோ வருகிறேன். உன்னை சிறைப்படுத்தி காவல்துறையிடம் ஒப்படைக்கிறேன்' என எண்ணியபடி, ''நன்றி டாக்டர்... நான் புறப்படுகிறேன்...'' என விடை பெற்றான்.
''எல்லாம் நல்லபடியாக நடக்கட்டும்...''
வேகமாக பாற்கடல் அடுக்குமாடி குடியிருப்புக்கு வந்து சேர்ந்தான் காண்டீபன். முகவாயை சொறிந்து நோட்டமிட்டான்; பக்கத்து அடுக்குமாடி குடியிருப்பை வெறித்தான். அங்கு காவலாளியிடம் சென்றான்.
''உங்கள் அடுக்குமாடியில் எத்தனை குடியிருப்புகள் உள்ளன...''
''நான்கு பிளாக்குகள் மொத்தம், 128 பிளாட்டுகள்...''
''ஏதாவது பிளாட் காலியாக கிடக்கிறதா...''
''அதெல்லாம் உங்களுக்கு எதுக்கு...''
அடையாள அட்டையை எடுத்து காட்டினான் காண்டீபன்.
''ஒரு பிளாட்டு காலியாக கிடக்கிறது...''
''எந்த பிளாக்... எண் என்ன...''
''பி பிளாக், 16ம் எண் பிளாட்டு...''
''பிளாட்டின் சாவி யாரிடம் இருக்கிறது...''
''உரிமையாளரிடம் இருக்கிறது; அவர் ஒண்டிப்புதுாரில் இருக்கிறார். அதை விற்க முயற்சி செய்கிறார்...''
''நான் அந்த பிளாட்டை பார்க்க வேண்டுமே...''
''பூட்டிய பிளாட்டை எப்படி பார்ப்பீர்...''
''வெளியே வராண்டாவில் நின்று பார்ப்பேன்...''
''குடியிருப்பின் செயலர் அனுமதி தேவை...''
காவலாளியை நெட்டித் தள்ளி விட்டு வேகமாக ஓடினான்; பிளாட்டு எண், 16 பூட்டிக் கிடந்தது. திரும்ப யத்தனித்தவன் கண்களில் புகையும், ஒரு சிகரெட் துண்டும் பட்டது. காட்டு யானை போல கதவின் மீது மோதி உடைத்து உள்ளே பாய்ந்தான் காண்டீபன்.
ஹிட்மேனின் டெலஸ்கோபிக் துப்பாக்கி டெவாஸ்டேட்டிங் புல்லட்டை துப்ப முயன்றது. அப்போது, காண்டீபன் சுத்தியலுடன் ஹிட்மேன் மீது எகிறினான். தோட்டாவை, 300 மீட்டர் வேகத்தில் செலுத்தியது துப்பாக்கி.
- தொடரும்...
- ஆர்னிகா நாசர்