
திண்டுக்கல் மாவட்டம், நெய்க்காரபட்டி, ஸ்ரீரேணுகாதேவி மேல்நிலைப் பள்ளியில், 2018ல், 10ம் வகுப்பு படித்த போது, டெங்கு காய்ச்சலால் கடுமையாக பாதிக்கப்பட்டேன். சோர்வு, பலவீனத்தால் வகுப்புக்கு சரியாக செல்ல இயலவில்லை. அரசுப் பொதுத்தேர்வு நெருங்கியதால் எதிர்கொள்ள முடியுமா என்ற சந்தேகம் ஏற்பட்டது. திணறி செய்வதறியாது திகைத்திருந்தேன். பயத்தால் கவலை அதிகரித்தது.
தமிழாசிரியர் சந்திரசேகர் என் குழப்பம் போக்கி தேற்றினார். நம்பிக்கை ஊட்டி, ஊற்சாகம் கொடுத்தார். விடாமுயற்சியுடன் பாடங்களை மனங்கொண்டு படித்தேன்.
அதன் விளைவாக பொதுத்தேர்வில், 450 மதிப்பெண்கள் பெற்றேன். பெற்றோர் மிகவும் மகிழ்ந்தனர். மனம் கனிந்து தமிழாசிரியருக்கு நன்றி சொன்னேன். நம்பிக்கை, விடாமுயற்சியுடன் செயல்பட்டால், எதையும் சாதிக்க முடியும் என்ற பாடத்தை கற்றுக் கொண்டேன்.
தற்போது, என் வயது, 22; பழனி, அருள்மிகு பழனி ஆண்டவர் மகளிர் கலைக்கல்லுாரியில் முதுகலை பொருளாதாரம் படித்து வருகிறேன். தமிழக அரசின், 'நான் முதல்வன்' திட்டத்தில், மாநில அளவில் முதன்மை மதிப்பெண்ணுடன், 75 ஆயிரம் ரூபாய் ஊக்கத்தொகை பெற்றுள்ளேன்.
சிவில் சர்வீஸ் தேர்வுக்காக பயிற்சியும் எடுத்து வருகிறேன். இந்த வெற்றிகள் சாத்தியமாக உதவிய அந்த தமிழாசிரியரை போற்றி வணங்குகிறேன்!
- மு.மாளவிகா, பழனி.