
கன்னியாகுமாரி மாவட்டம், கருங்கல் அரசு மேல்நிலைப் பள்ளியில், 1979ல், 9ம் வகுப்பு படித்த போது நடந்த சம்பவம்!
அரையாண்டு தேர்வு முடிந்திருந்தது. கணித பாடத்தில், 98 மதிப்பெண்கள் எடுத்திருந்தேன். விடுமுறை முடிந்து, வகுப்பு துவங்கியதும் அழைத்து பாராட்டினார் கணித ஆசிரியர் ஜான்சன். பின், விடைத்தாளை தந்து, பக்கத்தில் பாடம் நடத்திக் கொண்டிருந்த வகுப்பாசிரியர் ஜெயசீலனிடம் காண்பித்து வர சொன்னார்.
மிகுந்த பெருமிதத்துடன், 'பாராட்டு கிடைக்கும்' என்ற எதிர்பார்ப்பில் ஆர்வம் பொங்க சென்று காட்டினேன். வாங்கி புரட்டியவர், கையை நீட்ட சொல்லி, பிரம்பால் இரண்டு அடி தந்தார். அதிர்ச்சியில் காரணம் புரியாமல் உறைந்து நின்ற போது, 'எப்போதும் முழுமையாக வெற்றி அடைவதையே லட்சியமாக கொள்ள வேண்டும். அஜாக்கிரதையால், இரண்டு மதிப்பெண் குறைந்துள்ளன. நீ, 100 மதிப்பெண் எடுக்காததால் தான் தண்டித்தேன்...' என்று விளக்கம் தந்தார்.
பின், 'தசம பின்னம் எழுதும் போது முறையாக புள்ளி வைக்காதது கவனக்குறைவு. அதனால் தான், இரண்டு மதிப்பெண்கள் குறைந்துள்ளன...' என சுட்டிக்காட்டினார். அன்று முதல், எந்த செயலையும் கவனமுடன் அணுகி, நிதானமாக நிறைவேற்றுவதை வழக்கமாக்கி கொண்டேன்.
என் வயது, 61; தனியார் நிறுவனத்தில் பணியாற்றி ஓய்வு பெற்றேன். கவனம் பிசகாமல், எந்த பணியையும் செய்ய அறிவுரைத்த வகுப்பாசிரியரின் நினைவு மனதில் நிறைந்துள்ளது. பேரன், பேத்தியரிடம் அந்த சம்பவத்தை நினைவு கூர்ந்து அறிவூட்டி வருகிறேன்.
- எஸ்.செல்வ சுப்பிரமணியன், கோவை.
தொடர்புக்கு: 63813 54923