
ராமநாதபுரம் மாவட்டம், கமுதி வட்டம், கரிசல்புலி கிராம ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில், 1987ல், 5ம் வகுப்பு படித்த போது வகுப்பாசிரியராக இருந்தார் மாணிக்கவாசகம். அன்பும், கருணையும் நிறைந்தவர். பொதுஅறிவை ஊட்டும் வகையில் தகவல்கள் தருவார்.
மாணவர் தலைவனாக இருந்த நான் அன்று வகுப்பறையை திறந்தேன். அங்கு, அன்று உரித்த பாம்பு சட்டை ஒன்று கிடந்தது.
யாருக்கும் தெரிவிக்காமல் வெளியே எடுத்து போட்டு, விபரத்தை ஆசிரியரிடம் கூறினேன்.
மிக நிதானமாக, 'விபரத்தை யாருக்கும் சொல்லாதே... தெரிந்தால் பசங்க பயப்படுவாங்க...' என முன் எச்சரிக்கை செய்தார். பின், தீவிரமாக யோசித்து விரைந்து செயல்பட்டார். பள்ளியை சுற்றிலும் இருந்த முட்புதர்களை அகற்றி, வளாகத்தை சுத்தப்படுத்த உத்தரவிட்டார். அழகிய பூச்செடிகளும், மரக்கன்றுகளும் நடுவதற்கு ஏற்பாடு செய்தார்.
அத்துடன், 'வீட்டை சுற்றிலும் முட்புதர்கள் இருந்தால் அகற்றி, பூச்செடிகளும், மரங்களும் நட்டு பராமரித்தால் பாம்பு போன்ற உயிரினங்கள் வராது...' என அன்புடன் அறிவுரை தந்தார்.
இப்போது, என் வயது, 47; கிராம நிர்வாக அலுவலராக பணியாற்றி வருகிறேன். என் அலுவலகத்தை சுற்றி, மரங்களும், பூச்செடிகளும் நட்டு பராமரிக்கிறேன். இந்த செயலுக்கு காரணமான ஆசிரியரை மனதில் எண்ணி பெருமிதம் கொள்கிறேன்.
- எம்.கல்லுாரிராமன், ராமநாதபுரம்