PUBLISHED ON : பிப் 22, 2025

முன்கதை: மலையேற்ற வீரர் துருவ் மகள் மிஷ்கா; கற்பனை வளமும் நம்பிக்கையும் நிறைந்த சிறுமி, தந்தைக்கு நீண்ட ஆயுள் கேட்டு தேவதையிடம் வரம் வாங்கினாள். மலை ஏற ஆர்வமிருப்பதாகக் கூறினாள். அப்போது, தொழிலதிபர் ஒருவர் வந்தார். தந்தையின் அஸ்தியை இமயமலை சிகரத்தில் துாவ கேட்டுக்கொண்டார். அவருடன் வந்த உதவியாளர் வலிப்பு நோய் பாதிப்பால் சாய்ந்தார். இனி --
கீழே விழுந்திருந்த உதவியாளரின் தலையில் அடிபட்டிருக்கிறதா என, நிதானமாக ஆராய்ந்தான் துருவ்.
பின், அந்த அஸ்தி கலசத்தை எடுத்து பத்திரப்படுத்தினான்.
உதவியாளர் தலைக்கு அடியில் மென்மையான துணி ஒன்றை வைத்தான்.
கழுத்தை இறுக்கிக் கொண்டிருந்த சட்டை பொத்தான்களை விடுவித்தான்.
உதவியாளரை குப்புறப் படுக்க வைத்து சுவாசப் பாதையை சீராக்கினான்.
பின், மெதுவாக பேச்சு கொடுத்தான்.
உடனிருந்த தொழிலதிபர் பதறினார்.
''அவருக்கு தண்ணீர் ஏதாவது கொடுங்கள்...''
''காக்காய் வலிப்பால் பாதிக்கப்பட்டோருக்கு உண்ணவோ, பருகவோ எதுவும் கொடுக்கக் கூடாது. ஐந்து நிமிடங்களில் சுயமாக எழுந்து விடுவார்...''
''சரி...''
''உலகில் பத்தில் ஒருவரை இந்த வலிப்பு நோய் தாக்குகிறது...''
கைக்கடிகாரத்தை பார்த்து, உதவி எண்: 108க்கு அலைபேசியில் பேசி மருத்துவ உதவி கோரினான் துருவ்.
தொழிலதிபர் தயங்கியபடியே, ''என் வேண்டுகோளை ஏற்றுக்கொண்டீரா, இல்லையா...'' என்று கேட்டார்.
''சரி...நான் எவரெஸ்ட்டை வெற்றி கொண்டால் உங்கள் தந்தையின் அஸ்தியை சிகரத்தின் உச்சியில் துாவி விடுகிறேன்...''
அஸ்தி கலசத்தை பெற்றுக் கொண்டான் துருவ். அதை ஒளிப்படமாய் எடுத்தாள் மிஷ்கா.
''பணம்...''
''மேஜையில் வைத்து விடுங்கள்...''
ஆம்புலன்ஸ் வந்து சேர்ந்தது.
மருத்துவ பணியாளர்கள் உதவியாளரை துாக்கிச் சென்றனர்.
தொழிலதிபர் விடைபெற்று ஆம்புலன்சை பின் தொடர்ந்தார்.
கும்பகோணம் நோக்கி காரை செலுத்தினான் துருவ்.
ஐராவதீஸ்வரர் கோவில் அருகில் அந்த இடம் அமைந்திருந்தது. சிலைகள் செய்யும் இடமும், வீடும் இணைந்திருந்தது. கடையில் ஒரு ஸ்தபதி அமர்ந்திருந்தார்.
''நமஸ்காரம் வாங்க...''
''நமஸ்காரம்...''
''இப்படி உட்காருங்கள்... உங்களுக்கு என்ன வேணும். ஐம்பொன் சாமி சிலையா...''
''இல்லை ஸ்தபதி... எட்டு ஆண்டுகளுக்கு முன், என் மனைவி இறந்து விட்டார். அவரது உருவச்சிலை ஒன்று வேண்டும். செய்து தர முடியுமா...''
''தாராளமாக செய்து தருகிறேன். எத்தனை அடியில்...''
''என் மகள் எளிதில் கையாள வசதியாக 1 அடியில் சிலை போதும்...''
''ஐம்பொன் சிலை தானே...''
மிஷ்கா குறுக்கிட்டு, ''ஐம்பொன் என்றால் என்ன...'' எனக் கேட்டாள்.
''செம்பு, வெள்ளி, தங்கம், துத்தநாகம், ஈயம் என, ஐவகை உலோகங்களின் கலவையே ஐம்பொன் எனப்படும். தங்கம், குருசக்தி தரும். வெள்ளி, சுக்கிரன் சக்தி தரும். செம்பு, சூரிய சக்தி தரும். துத்தம், சனி சக்தி தரும். ஈயம், கேது சக்தி தரும். மொத்தத்தில் ஒரு வீட்டில் ஐம்பொன் சிலை இருந்தால், அது வீட்டோருக்கு பிராண சக்தியும், பிரபஞ்ச சக்தியும் பெற்றுத் தரும்...''
''மகிழ்ச்சி...''
''உங்கள் மனைவியின் நேர்முகத் தோற்றம், பக்கவாட்டுத் தோற்றம், முகத்தை மட்டும் முழுமையாகக் காட்டும், 'க்ளோசப்' ஒளிப்படங்களை கொண்டு வந்திருக்கிறீர்களா...''
மொபைல் போனில் பதிவாகி இருந்த மனைவியின் புகைப்படங்களை நீட்டினான் துருவ்.
வாங்கிப் பார்த்த ஸ்தபதி, ''தெய்வாம்சம் கொண்ட பெண் உங்கள் மனைவி... முகத்தில், சரஸ்வதி தாண்டவமாடுகிறாள்...''
''நன்றி...''
''உங்கள் மனைவியின் உயரம் என்ன...''
''152 செ.மீ., உயரம்...''
''ஒளிப்படத்தில் தெரிந்தாலும் கேட்கிறேன். உங்கள் மனைவியின் நிறம் என்ன...''
''ரோஜா நிறம்...''
''அவரது தலைகேசம்...''
''கேரளப்பெண்கள் போல நீண்டிருக்கும்...''
''வீடியோ கிளிப்பிங் எதாவது வைத்திருக்கிறீர்களா...''
காட்டினான் துருவ்.
''அவரது குரல் பதிவு எதாவது இருக்கிறதா...''
போட்டுக் காட்டினான் துருவ்.
''உங்களிடம் பெற்ற அனைத்து விஷயங்களையும், எனக்குள் போட்டு வைக்கிறேன். சிலை செய்யும் போது உதவும்...''
''ஐயா...''
குறுக்கிட்டாள் மிஷ்கா.
''எங்கம்மா சிலையை எப்படி செய்வீங்க...''
மிஷ்காவை ஆழமாக பார்த்தார் ஸ்தபதி.
''உன் அம்மாவை அச்சு அசலாக சிலையில் வடித்து தருவேன். சிலையை காணும்போதெல்லாம், அம்மாவின் அருகாமையை நீ உணரலாம். சிலைக்கு முத்தம் தந்து, மானசீகமாக முத்தம் பெறலாம். சிலை செய்யும் விதத்தைக் கூறுகிறேன் கேள்...''
''சொல்லுங்கள் ஐயா...''
''முதலில் எந்த சிலையை செய்ய நினைக்கிறேனோ, அதுபோல, மெழுகில் ஒரு கரு உருவாக்குவேன். காவிரி ஆற்றில் கிடைக்கும் வண்டல் மண்ணை அள்ளி வந்து, அந்த மெழுகு சிலை மீது பூசி, வார்ப்பு செய்வேன். வார்ப்பின் கீழ்ப்பகுதியில் ஒரு சிறிய துளை வைப்பேன்...
''மண் காய்ந்தபின், அதை அடுப்பில் ஏற்றி சூடாக்கி, மெழுகை வெளியேற்றி விடுவேன். இந்த உள்ளீடற்ற வார்ப்பில் உள்ள துளையில் நன்கு உருக்கிய ஐம்பொன் கலவையை ஊற்றுவேன். சிறிது நேரத்திற்குப் பின், மண்ணைத் தட்டி உடைத்து, உள்ளே இருக்கும் உலோக சிலையை வெளி எடுப்பேன்...
''அடுத்தகட்ட பணியாக, சிலையை அரம் கொண்டு தோய்த்து சீவுவேன். பின், இறுதி வேலை செய்வேன். இறுதியாக முகம் சம்பந்தப்பட்ட பணிகளை முடித்து, சிலையை முழுமையடைய செய்வேன்...''
குறுக்கிட்ட துருவ், ''எவ்வளவு பணம் தேவை...'' என்றான்.
''பதினைந்தாயிரம் கொடுங்கள்...''
''சிலை செய்ய எத்தனை நாட்களாகும்...''
''இரண்டு வாரம்...''
''இரண்டே நாட்களில் செய்து தர முடியுமா... நான் எவரெஸ்ட் புறப்பட சில நாட்களே அவகாசம் உள்ளது. அதற்குள் மகளிடம் அம்மா சிலையை பரிசளித்து போக விரும்புகிறேன்...''
இறைஞ்சிய துருவ்வை உன்னிப்பாக பார்த்தார் ஸ்தபதி.
''நாளை மறுநாள் காலை சூரியோதயத்தின் போது, ஐராவதீஸ்வரர் சன்னிதி முன், சிலையை பெற்றுக் கொள்ளலாம்...''
ஸ்தபதி அறிவித்த பின், ''குட்டிப் பெண்ணே... உனக்கு சந்தோஷம் வரும் போது, அம்மா சிலை சிரிக்கும். உனக்கு துாக்கம் வரும்போது, உன் அம்மா சிலை அழும்...'' என்று கூறினார்.
அதை வியப்புடன் கேட்டு நின்றாள் மிஷ்கா.
- தொடரும்...
- மீயாழ் சிற்பிகா