PUBLISHED ON : மார் 22, 2025

முன்கதை: மலையேற்ற வீரர் துருவ் மகள் மிஷ்கா, நம்பிக்கையும், கற்பனை
வளமும், சாகசம் செய்யும் துணிவும் மிக்க சிறுமி. தன் தந்தைக்கு நீண்ட ஆயுள்
கேட்டு தேவதையிடம் வரம் வாங்கினாள். இமயமலை சிகரம் ஏறப்போகும் தந்தையை
பிரிய மனம் இன்றி கண்ணீர் வடித்தாள். அதிகாலையே தந்தையை பின் தொடர்ந்து
சென்று விமானநிலையத்தில் வழியனுப்பினாள் மிஷ்கா. இமயமலை அடிவாரப்பகுதிக்கு
சென்றான் துருவ். இனி -
இந்திய மலையேறும் வீரர்களின் நற்தளத்தின் அலுவலகம் -
இருக்கையில் அமர்ந்து, அன்றைய பணிகளை கவனித்துக் கொண்டிருந்தார் அலுவலக தலைவர்.
கூட்டாளிகளுடன் புயல் போல் அந்த வளாகத்துக்குள் வந்த துருவ், ''தஷி டெலக்! தஷி டெலக்...'' என்றான்.
எதிர்பட்ட அனைவரிடமும் இதை தெரிவித்திருந்தான்.
இந்த வார்த்தையை பொதுவாக, திபெத்தியர்கள் புது ஆண்டில் வாழ்த்தாக கூறுவர்.
பதிலுக்கு அனைவரும், 'தஷி டெலக்...' என்றனர்.
சிலர் வேகமாக ஓடி வந்து, துருவை அணைத்தனர்.
'உன் உடலுக்குள் டென்சிங் நார்கேயின் ஆவி புகுந்துள்ளது. நீ, 31வது முறை மட்டுமல்ல; 50வது முறை, 100 முறை எவரெஸ்ட் ஏறுவாய்...'
இவ்வாறு கூறி வாழ்த்தினர்.
''எவரெஸ்டில்
வயதானோர், மாற்றுத்திறனாளிகள் என பலதரப்பினர் ஏறி உச்சியை தொடுகின்றனர்.
அது பெரிதல்ல. சிகரம் ஏறுபவர் முதலில் மனிதருக்குரிய பண்புகளுடன் இருக்க
வேண்டும்...''
'உண்மை தான் துருவ்...'
அங்கிருந்தோர் ஆமோதித்தனர்.
தலைவரின் அறைக்கதவை தட்டினான் துருவ்.
பத்து நொடிகள் கரைந்திருக்கும்; உள்ளே பிரவேசித்தான்.
''காலை வணக்கம்...''
பதிலுக்கு நிமிர்ந்து பார்த்து, ''காலை வணக்கம்...'' என்றார் தலைவர்.
''நன்றாக இருக்கிறீர்களா தலைவரே...''
''பால்டன் லாமோ என்ற காவல்தெய்வம் துணையால் நன்றாக இருக்கிறேன். நீயும், உன் தமிழகமும் நலமா...''
''சிறப்பாக உள்ளது...''
''என்ன துருவ்... மீண்டும் மலை ஏற வந்து விட்டாய். உனக்கு, 'டென்சிங் நார்கே' விருது வழங்கப்படும் வரை, ஓய மாட்டாய் போல...''
''விருதுகளுக்காக
நான் மலையேறுவதில்லை. சந்தோஷத்துக்காக மலையேறுகிறேன்... யாருடைய
வழியையும் மறித்து நிற்கவில்லை. மலையேறும் புதியவர்களுக்கு அழகிய முன்
மாதிரியாக திகழ விரும்புகிறேன்...''
''இதுவரை எவரெஸ்ட் ஏறுதலில்,
340 பேர் இறந்திருக்கின்றனர். 200 பேரின் சடலங்கள் எவரெஸ்ட் பனியில்
உறைந்து அனாதையாய் கிடக்கின்றன. அதீத நம்பிக்கையுடன் மலையேறும் நீ, 340
பேரில் ஒருவனாக விரும்புகிறாயா...''
சிரித்தான் துருவ்.
''இறைவனிடமிருந்து வந்தேன். இறைவனிடமே திரும்புவேன். திரும்பும் நாள் இறைவனுக்கு மட்டுமே தெரியும்...''
''நீ இந்த முறை எவரெஸ்ட் ஏற வேண்டாம். இது என் உத்தரவு...''
''என்னை யாரும், எந்த அமைப்பும் தடுக்க முடியாது. நான் போவேன்...''
''என்னை எதிர்த்து, மலையேறி விடுவாயா... உனக்கு ெஷர்பாக்கள் துணை வர மாட்டர்...''
ெஷர்பா
என்போர் நேபாள், திபெத்தில் வசிப்போர். மலையேறுவதில் நிபுணத்துவம்
பெற்றவர்கள். அவர்கள் மலையாடுகள் போன்றோர். தங்கள் எடையளவில், 125
சதவீதம் எடை வரை முதுகில் சுமந்து மலையேறும் திறன் உடையோர் என்பது
குறிப்பிடத்தக்கது.
''யார் துணைக்கு வந்தாலும், வராவிட்டாலும் இந்த முறை நான் கட்டாயம் எவரெஸ்ட் ஏறுவேன்...''
''நான் சொல்வதை நன்கு கவனி...''
''சொல்லுங்கள்...''
''கடந்த எட்டு மாதங்களாக எங்கிருந்தாய்...''
''சென்னையில், என் மகளுடன்...''
''நம் அமைப்பின் விதி என்ன சொல்கிறது தெரியுமா...''
''என்ன சொல்கிறது...''
''புதிதாக
மலையேறுவதற்கு முன், ஒவ்வொருவரும், 9 முதல், 12 மாதங்கள் கடும்
பயிற்சியில் ஈடுபட வேண்டும். எவரெஸ்ட் ஏறும் போது, என்னென்ன பிரச்னைகளை
சந்திக்க வேண்டி வருமோ, அந்த சூழலை செயற்கையாக ஏற்படுத்தி சமாளிக்க
கற்றிருக்க வேண்டும். தினமும் குறைந்தது, 10 மணி நேரம் பயிற்சி செய்திருக்க
வேண்டும்...''
''இது அத்தனையையும், என் சென்னை வீட்டில் செய்தேன். ஒவ்வொரு நாளும், 12 மணிநேரம் உடற்பயிற்சி...''
''யாருக்கு தெரியும்...''
''வீடியோ எடுத்து வைத்திருக்கிறேன்...''
''பழைய வீடியோவை புதிய தேதியில் காட்டுவாய்...''
''நான் பொய் பேசுவதில்லை எந்த சூழலிலும்...''
''இரண்டாவது விஷயம். உன் எடை என்ன...''
''எண்பது கிலோ...''
''பொதுவாக,
மலையேறும் ஆணுக்கு, 10 சதவீதம் உடல் கொழுப்பும், மலையேறும் பெண்களுக்கு,
20 சதவீதம் உடல் கொழுப்பும் இருக்க வேண்டும். உனக்கு, 9 சதவீதம் தான் உடல்
கொழுப்பு இருக்கிறது...''
''ஒரு வாரத்தில், உடல் கொழுப்பை, 10 சதவீதத்துக்கு உயர்த்தி விடுவேன்...''
''நீ
உயிர்வளிக்கோரும் ஏரோபிக் பயிற்சி எதுவும் செய்யவில்லை. உன் முதுகில், 16
கிலோ சுமையை மலையேறும் போது துாக்கி செல்ல வேண்டும். அந்த திறனை
முற்றிலும் இழந்து விட்டாய். அதுவும், 16 கிலோ சுமையுடன் குறிப்பிட்ட
நேரத்தில், 1,500 உயர அடி ஏற வேண்டும். உன்னால் முடியவே முடியாது...''
''ஒரு வாரம் அவகாசம் கொடுங்கள். என் அனைத்து தகுதிகளையும் உங்கள் முன் நிரூபித்து காட்டுகிறேன்...''
''அனைத்திலும் பரிதாபமாக தோற்று தமிழகம் திரும்ப போகிறாய்...''
''அதையும் பார்ப்போம்...''
தமிழ் சினிமா வில்லன் போல சிரித்தார் தலைவர்.
''இனி எப்போதுமே நீ மலையேற போவதில்லை. உன் பழம்பெருமைகளை தம்பட்டம் அடித்து, மீதி காலத்தை ஓட்ட வேண்டியது தான்...''
''நான்
ஜெயிக்க பிறந்தவன். எவரெஸ்ட் மகாராணிக்கு நான் மிக பிரியமானவன். திபெத்திய
புத்திய மந்திரத்தை கூறுகிறேன். ஓம் மணி பத்மே ஹம்...''
துருவ் சொன்ன மந்திரம் எவரெஸ்ட் சிகரத்தின் அடிவாரத்தின் பல திசைகளில் எதிரொலித்து மெதுவாக அடங்கியது.
மந்திரத்தை காதுற்ற துர்தேவதை உதடு பிதுக்கி, 'பனி சதுரங்க விளையாட்டில் இம்முறை வீழ்த்தப்படுவாய்...' என்றது.
- தொடரும்...- மீயாழ் சிற்பிகா