
கோவை, தியாகி என்.ஜி.ராமசாமி மேல்நிலைப் பள்ளியில், 1982ல், 12ம் வகுப்பு முடித்தேன். பின், சிங்காநல்லுார் பாலகிருஷ்ணா, 'டைப் ரைட்டிங்' பயிற்சி மையத்தில் சேர்ந்தேன். அங்கு, தட்டச்சு, சுருக்கெழுத்து மற்றும் ஹிந்தி மொழியும் கற்றுத்தருவர். ஒவ்வொரு நாளும் காலை, 6:00 மணி துவங்கி, இரவு, 10:00 மணி வரை தொடர்ந்து வகுப்புகள் நடந்து கொண்டேயிருக்கும்.
ஒரு வகுப்பில், 50 பேர் இருந்தோம். அது, 60 நிமிடங்கள் நடக்கும். எங்களுக்கு பயிற்சி தந்த ஆசிரியர் பாலசுப்பிரமணியம் வாரம் ஒருமுறை, '100 அப்ரிவேஷன் டெஸ்ட்' நடத்துவார். மாதம் ஒருமுறை கண்டிப்பாக 'மெக்கானிசம்' வகுப்பு நடத்துவார்.
அரசு நடத்தும் தேர்வில் இவற்றுக்கு, 10 மதிப்பெண்கள் மட்டுமே உண்டு. அதனால், இத்தனை முக்கியத்துவம் கொடுத்து இவற்றை வலியுறுத்துகிறாரே என சோர்வு அடைந்து, அலட்சியமாக கற்றோம். பிற்காலத்தில் அதற்கு உரிய பலன் கிடைப்பது கண்டு மகிழ்கிறேன்.
எனக்கு 60 வயதாகிறது; தனியார் பள்ளி அலுவலக நிர்வாகத்தில் பணிபுரிகிறேன். கணினியில் பழுது ஏற்பட்டால், 'இதனால் தான் இது ஏற்பட்டிருக்கும்' என கணித்து உடனடியாக சரி செய்து விடுகிறேன்.
அரசு அலுவலக செயல்முறைகள் மற்றும் செய்திதாள்களில் வரும் அப்ரிவேஷனை மிகச்சரியாக புரிந்து வேலை செய்ய முடிகிறது. இவை எல்லாம் அப்போது பெற்ற பயிற்சியின் விளைவால் தான் நிறைவேறுகிறது. சலிப்படையாமல் ஒரே வித பயிற்சியை திரும்ப திரும்ப கற்பித்த அந்த ஆசிரியரின் செயல் பிரமிப்பூட்டுகிறது.
- ம.நாகேந்திரன், கோவை.
தொடர்புக்கு: 98940 32937