
மதுரை மாவட்டம், சோழவந்தான், மேலக்கால் அரசு கள்ளர் மேல்நிலைப் பள்ளியில், 2005ல், 9ம் வகுப்பு படித்த போது தமிழாசிரியையாக இருந்தார் மு.சொர்ணலதா. என் கையெழுத்து வடிவாக இருப்பது கண்டு பாராட்டினார். கூடுதலாக பயிற்சி தந்து மேலும் வடிவமாக எழுத ஊக்குவித்தார்.
என் கையெழுத்து, 'நன்று' என்ற நிலையில் இருந்து, 'மிக நன்று' என தகுதி நிலைக்கு உயர்ந்தது.
அதைக் கண்டு, 'உன் அண்ணன் திரவியம் போல், நீயும் நன்றாக எழுதுகிறாய். இந்த கையெழுத்து ஒருநாள் உன் தலையெழுத்தை மாற்றும்...' என்று புகழ்ந்துரைத்தார் தமிழாசிரியை. அது நம்பிக்கை ஏற்படுத்தியது.
பள்ளிப் படிப்பு முடிந்ததும், மதுரை தியாகராசர் கல்லுாரியில் சேர்ந்தேன். தமிழ் மொழியில் இளங்கலை, முதுகலை பயின்றேன். என் கையெழுத்தை கண்ட பேராசிரியர் கு.ஞானசம்பந்தன், 'தேர்வு தாளில் வடிவமாக எழுதி மதிப்பெண் பெறுவதோடு நிறுத்தி விடாதே... கவிதை, கட்டுரைப் போட்டிகளில் கலந்து கொள்... வெற்றி கிடைக்கும்.
எதிர்காலத்தில் தமிழாசிரியராக வருவாய்...' என வாழ்த்தினார். அந்த வாக்கு பலித்தது. கல்லுாரி அளவில் கட்டுரைப் போட்டிகளில் பலமுறை முதல் பரிசு பெற்றுள்ளேன்.
தற்போது, என் வயது, 32; மதுரை தாகூர் வித்யாலயம் பள்ளியில் தமிழாசிரியராக பணி செய்கிறேன். வடிவான கையெழுத்து என் தலையெழுத்தையே மாற்றியமைத்துள்ளது. அதற்கு உத்வேகம் ஊட்டிய ஆசிரியர்களை போற்றி வாழ்கிறேன்.
- ம.கண்ணன், மதுரை.
தொடர்புக்கு: 8072952210