
மயிலாடுதுறை, டி.பி.டி.ஆர்., தேசிய உயர்நிலைப் பள்ளியில், 1978ல், 8ம் வகுப்பு படித்த போது நடந்த சம்பவம்...
வகுப்பாசிரியையாக இருந்தார் ராஜலட்சுமி. அப்போது, வகுப்பில் கைவினை பயிற்சியும் உண்டு. மாணவியருக்கு கைத்தையல் கற்றுக் கொடுப்பர்.
அன்று, அந்த பயிற்சியில் கலந்து கொண்ட தோழி ஜானகி, தையல் ஊசியை பெட்டியில் வைத்திருந்தாள். அதை சரியாக மூடாமல் புத்தகப்பைக்குள் வைத்ததால் ஊசி வெளியே நீட்டியபடி இருந்தது.
அதை அறியாமல் அமர்ந்தவளின், உட்காரும் பகுதியில் குத்தி விட்டது. வலி தாங்காமல் துடித்தது கண்டு வகுப்பாசிரியை உதவிக்கு ஓடி வந்தார். தனியே அழைத்து சென்று ஊசியை லாவகமாக எடுத்தார். தாயை போல் பரிவுடன் முதலுதவி செய்தார்.
பின், 'ஊசியை உறையில் போட்டு சரியாக மூடிய பின் தான் பெட்டியில் வைக்க வேண்டும்; இல்லையேல் அசம்பாவிதம் ஏற்பட வாய்ப்பு உண்டு...' என்று கனிவாக அறிவுரைத்தார். தகுந்த துணையுடன் தோழியை வீட்டிற்கு அனுப்பி வைத்தார்.
என் வயது, 59; இல்லத்தரசியாக இருக்கிறேன். பள்ளியில் நடந்த அந்த சம்பவம் இன்றும் என் மனதில் தங்கியுள்ளது. தாயன்புடன் உதவிய வகுப்பாசிரியையின் கருணை முகம் நினைவில் நிற்கிறது.
- ஜெயந்தி சந்திரசேகரன், சென்னை.