PUBLISHED ON : ஜூலை 12, 2025

முன்கதை: துணிவு மிக்க சிறுமி மிஷ்காவின் தந்தை துருவ். இமயமலையில் ஏறியபோது விபத்தில் இறந்ததாக அரசு கூறியதை ஏற்காமல் லக்பா என்ற பெண் துணையுடன் தந்தையை மீட்க சென்ற போது, தவறி பனிக்குகையில் விழுந்தாள் மிஷ்கா. அங்கு பனி மனுஷ சிறுமி சூச்சு துணையுடன் தந்தையை தேடி பனிச்சிறுத்தையில் பயணம் செய்த மிஷ்கா, ஒரிடத்தில் பனிக்குள் சிக்கியிருந்த மனித உடலை கண்டாள். இனி -
அது மிஷ்காவின் அப்பா இல்லை.
அந்த பிரதேசத்தில் தன் அப்பா இல்லை என்பதால் நிம்மதி மிஷ்காவுக்குள் பூத்தது.
அதே நேரம், நெருங்கிய உறவினர் மரணம், அந்நியர் மரணம் என பேதப்படுத்தி பார்க்கும், தன் மனப்போக்கு வெறுப்பை ஏற்படுத்தியது.
'மிஷ்கா... இமயமலையின், 14 சிகரங்களிலும் இறந்து போன மலையேறும் வீரர்களின் பிரேதங்களை பார்த்து விட்டாய். உன் தந்தையுடன் மலையேறியோரில் மூவர் சடலங்களையும் பார்த்து விட்டாய். எங்குமே, உன் தந்தை கிடைக்கவில்லை... ஒருவேளை, உன் தந்தையின் உடலை, பனி மிருகம் தின்று விட்டதோ...'
கேட்டாள் சூச்சூ.
''உன் வாயை கழுவு சூச்சூ... மிருகங்களுக்கு இரையாக மாட்டார் என் தந்தை...''
'பின்னே எங்கே தான் போனார் உன் அப்பா...'
கேள்வியுடன் புறப்பட்டு பனிக்கோட்டைக்கு வந்தனர். அங்கு முழுவரும் மிருக கொழுப்பால் ஆன விளக்குகள் எரிந்தன.
அரை கிலோ எடையுள்ள பாலாடைக்கட்டியை தின்று கொண்டிருந்த தலைவர், 'என்ன குழந்தைகளா... அந்த மனுஷ பையனை தேடுனீர்களா...' என்றார்.
'தேடினோம்...'
'கிடைத்தானா...'
'இல்லை...'
'எங்கெங்கு தேடுனீர்கள்...'
விலாவாரியாக கூறினாள் சூச்சூ.
'ஈவு இரக்கமே இல்லாத பனி மனிதர்கள் நாம். எனக்கே இந்த சிறுமி அழுகையை பார்க்கப் பொறுக்கவில்லை...'
'எதாவது செய்யுங்கள் தலைவரே...'
'என்ன செய்ய...'
'எட்டு பனி மான்கள் பூட்டிய ரத வண்டியில் சென்று, இமயமலை பகுதியை அலசி ஆராயுங்கள். பக்கத்து பனி மனிதர் குடியிருப்பு பகுதியில் விசாரியுங்கள். அவர்களுக்கு மிஷ்காவின் தந்தை பற்றி ஏதாவது தெரிந்திருக்க கூடும்...'
மென்மையாக கூறினார் தலைவர்.
'விசாரிக்கிறேன்...'
பதில் சொன்னாள் சூச்சூ.
'இருவரும் இரவு உணவு உண்டு ஓய்வெடுங்கள்... நாளை காலை பார்ப்போம்...'
விடை பெற முயன்றார் தலைவர்.
''என் தந்தையை மீட்காமல் துாக்கம் ஒரு கேடா...''
மனம் பொறுக்காமல் கூறினாள் மிஷ்கா.
'பிரபஞ்ச இருட்டில் ஒரு துளி ஒளியைக் காண்பதே நம்பிக்கை. நம்பிக்கை என்ற தேனீ, மலர்கள் இல்லாமலே தேனை உருவாக்கும். தொடர்ச்சியான நன்னம்பிக்கை சக்தியை, 100 மடங்காக்கும்...'
கூறினாள் சூச்சூ.
''நர மாமிச பட்சினி நீ... எனக்கு தன்னம்பிக்கை போதிக்கிறாயா...''
'பொன்மொழி சொன்னா...அனுபவிக்கணும், ஆராய கூடாது...'
ஒரு டம்ளர் பால் குடித்து, உள்ளங்கையில் முகம் புதைத்து அழுதபடியே இருந்தாள் மிஷ்கா.
விடிந்தது -
பனிமான்கள் ரதம் சீறி பாய்ந்தது.
தலைவர், 'ம்சக்க...' என குரல் எழுப்பினார்.
பக்கத்து பனி மனுஷ குடியிருப்புக்கு போனதும் அதன் தலைவர், 'எங்களுடன் சண்டை இட வந்தீர்களா...' என்றார்.
'இல்லை... ஒரு உதவி கேட்டு வந்தேன்...'
'எப்போதுமே ஆணவத்துடன் உலவும் உனக்கு உதவியா... பலே... கேள்...'
'ஒரு மலையேறி, 10 நாட்களுக்கு முன் காணாமல் போய் விட்டான். அவனுடன் மலையேறிய அனைவரும் பிணமாக மீட்கப்பட்டுள்ளனர். மலையேறியை தேடி, அவன் மகள் வந்துள்ளாள். அவளை பார்க்க பாவமாய் இருக்கிறது...'
'சரி...'
'காணாமல் போன மலையேறி பற்றி எதாவது தெரிந்தால் சொல்லுங்களேன்...'
பக்கத்து குடியிருப்பு தலைவர் பக பக என சிரித்தார்.
'மனிதர்களை சூப் வெச்சு குடிக்கும் நமக்கு ஈவு இரக்கம் வரலாமா...'
'தந்தையும், தாயும் உலகின் அனைத்து உயிரினங்களிடமும் பொதுவாக காணப்படும் உணர்வு அம்சம். இது பசியை விட மேலானது...'
'சரி... சரி... பாடம் நடத்தாதே...'
'உன் இறுதி பதில்...'
'பகிர்வதற்கு எந்த தகவலும் இல்லை. நீ கிளம்பு...'
அப்போது, பக்கத்து குடியிருப்பு தலைவரின் மனைவி ஓடி வந்தாள்.
'ஒரு நிமிஷம் நில்லுங்க... என் கிட்ட சொல்லுங்க... உதவ முடியுமான்னு பார்க்கிறேன்...'
மீண்டும் மிஷ்காவின் தந்தை பற்றி விவரித்தார் பனி மனுஷ தலைவர்.
'தொலைந்தவரின் படம் வைத்திருக்கிறீர்களா...'
காட்டினார் தலைவர்.
'உதவினால் எங்களுக்கு என்ன தருவீர்...'
'எது வேண்டுமானாலும் கேளுங்கள்... தருகிறேன்...'
'நுாறு சடை காட்டெருமைகள் தர வேண்டும்...'
'பேரம் பேச விரும்பவில்லை... தருகிறேன்...'
'நீங்கள் தேடும் நபரை கண்டுபிடிக்க முடியுமா என்று எனக்கு தெரியவில்லை. நாளை நுாறு சடை காட்டெருமைகளுடன் வாருங்கள்... உங்களுக்கு ஒரு உபயோகரமான தகவலை கொடுக்க முயற்சிக்கிறேன்...'
'சரி...'
'இப்போது நீங்க கிளம்பலாம்...'
தலைவர், பனிமான் ரதத்தில் கிளம்பினார்.
இருப்பிடத்துக்கு வந்து சேர்ந்தார்.
'என்ன ஆச்சு தலைவரே...'
விசாரித்தாள் சூச்சூ.
'நாளை காலை ஒரு முக்கியான இடத்துக்கு போகிறோம். இது தான் கடைசி வாய்ப்பு. இந்த வாய்ப்பும் உதவா விட்டால், மிஷ்கா தன் தேடுதலை நிறுத்திக் கொள்ள வேண்டியது தான்...' என்றார் தலைவர்.
மறுநாள் -
காலை, பனிமான் ரதத்தில் தலைவருக்கு இரு பக்கம், மிஷ்காவும், சூச்சுவும் அமர்ந்தனர்.
ரதத்தின் பின் நுாறு சடை காட்டெருமைகள் கட்டப்பட்டிருந்தன.
மான்கள், 'சகடா சகடா' என ஓடின.
துாரத்தில் ஒரு ஹெலிகாப்டர் பறந்தது.
தலைவர் எட்டி ஹெலிகாப்டரை ஒரு சாத்து சாத்தினார்.
அது ஓமப்பொடியாக நொறுங்கி விழுந்தது.
'மிஷ்காவை தவிர, மனுஷங்க எல்லாரும் பரம விரோதிகள் தான். அவர்களை எங்கு கண்டாலும், அப்பளமாய் அடித்து நொறுக்குவேன்...'
ஆவேசமாய் சிரித்தார் பனி மனுஷ தலைவர்.
- தொடரும்...
- மீயாழ் சிற்பிகா