
சதுரங்க ஆட்டத்தை மிகவும் திறமையாக விளையாடுவாள் ரமா. போட்டிகளில் பங்கேற்று, பரிசுகளை குவிப்பவள். எப்போதும் முதல் பரிசு என்று சொல்லும் அளவு பிரபலமாக இருந்தாள்.
மிகப்பெரிய சதுரங்க போட்டி நடைபெற்றது. அதில் பங்கேற்று, கடைசி சுற்றில் எதிர்பாராத விதமாக தோல்வி அடைந்தாள்.
பரிசு கிடைக்கவில்லை. வருத்தத்தோடு, உடனே வீடு திரும்பி விட்டாள்.
மறுநாள் -
போட்டியில் பங்கேற்றது தொடர்பான விபரங்களை கேட்டறிந்தார் சதுரங்கம் ஆட பயிற்சி தரும் மாஸ்டர். பின், பரிசளிப்பு விழாவில் தலைமை தாங்கியவர் போன்ற விபரங்களை விசாரித்தார். மிகுந்த அலட்சியமாக, ''பரிசு கிடைக்காததால் நிகழ்ச்சி முடியும் வரை காத்திராமல் வீட்டுக்கு சென்று விட்டேன். அதனால், எந்த விபரமும் தெரியாது...'' என்றாள் ரமா.
மிகவும் மென்மையாக, ''நீ செய்தது தவறு... ஒரு சினிமாவை தியேட்டரில் பார்க்கிறாய் என்று வைத்துக்கொள். அதன் முடிவு வரை இருப்பாய் அல்லவா... போட்டி என்றால் இறுதிக்கட்டமான பரிசளிப்பு நிகழ்வில் தான் முடியும். அதிலும், கண்டிப்பாக பங்கேற்றிருக்க வேண்டும். எப்போதும் பந்தயத்தில் பங்கேற்கும் முன், நன்கு உழைத்து, முன் தயாரிப்புடன் செல்ல வேண்டும். முழு கவனத்துடன் திறமையை வெளிப்படுத்த வேண்டும்...
''சதுரங்கத்தில் உள்ள, வெள்ளை, கறுப்பு நிறம் போல தான், போட்டிகளில் வெற்றியும், தோல்வியும் ஏற்படுகிறது. இரண்டையும் சமமாக பாவிக்க வேண்டும். தோல்வி கண்டாலும், அதை எதிர்கொண்டு பரந்த மனதோடு வெற்றி பெற்றவரை பாராட்டணும். பரிசளிப்பின் போதும், உடனிருந்து உற்சாகப்படுத்தணும். அவ்வாறு செய்யும் போது, அடுத்த முறை பரிசு பெறும் ஊக்கம் உன்னை அறியாமலே அடிமனதில் தோன்றி விடும்...
''எத்தனையோ பேருக்கு திறமை இருந்தும் போட்டிகளில் பங்கேற்க வாய்ப்பு கிடைப்பதில்லை. வாய்ப்பு கிடைக்கும் போது, உற்சாகமாக பங்கேற்று தோல்வியடைந்தாலும் மனம் தளரக்கூடாது. தோல்விக்கான காரணத்தை ஆராய்ந்து திருத்திக்கொள்ளணும்...''
இந்த அறிவுரையால், வாழ்வின் பொருள், ரமாவுக்கு புரிந்தது. தவறை திருத்தும் முயற்சியில் ஈடுபட்டாள்.
பட்டூஸ்... வெற்றி கண்டு பெருமிதம் கூடாது; தோல்வி கண்டு துவண்டு விடக் கூடாது.
- ந.விசாலாட்சி!