
மதுரை மாவட்டம், டி.வி.எஸ்.சுந்தரம் மேல்நிலைப் பள்ளியில், 2018ல், 9ம் வகுப்பு படித்தேன். தமிழாசிரியர் ஆறு.கதிரவன் எளிமையானவர். வாழ்க்கையில் முன்னேறுவதற்கு உரிய ஆறு.கதிரவன் வழிமுறையை காட்டுவார். அனுபவ பாடங்களை கவனம் செலுத்தி கற்பிப்பார். தோழமை உணர்வுடன் பழகுவார்.
தமிழ் இலக்கணம், செய்யுள்களை சினிமா மெட்டில் பாடி, மனதில் பதிய வைப்பார். பிறந்தநாள் விழா காணும் மாணவ, மாணவியருக்கு வாழ்த்து தெரிவிக்கும் வகையில், இனிமையாக பாடி உற்சாகப்படுத்துவார்.
ஒருமுறை, நன்றியின் மாண்பு பற்றி விளக்கினார். நன்றி தெரிவிப்பதால், உதவுவோர் மனதில் ஏற்படும் மேன்மையான மாற்றத்தை எடுத்துக் கூறினார். அன்று முதல், நன்றி கூறும் பழக்கத்தை கூச்சமின்றி கடைப்பிடிக்கிறேன். அதனால், நிறைய நன்மைகள் விளைந்து வருகின்றன. அவற்றை அறுவடை செய்கிறேன்.
எனக்கு, 20 வயதாகிறது; வணிகவியலில் இளங்கலை பட்டம் பெற்றுள்ளேன். அந்த தமிழாசிரியருடன் இப்போதும் தொலைபேசியில் கலந்துரையாடி வருகிறேன். வணிக நிறுவனப் பெயர் பலகைகளில் உள்ள பிழைகளை நீக்குவதில் அவர் தீவிர ஆர்வமுடன் செயல்பட்டு வருவது கண்டு வியக்கிறேன். வாழ்வதற்கு தக்க வழிகாட்டியவரை நன்றியுடன் மனதில் ஏந்தியுள்ளேன்!
ரெ.ஸ்ரீனிவாசன், மதுரை.
தொடர்புக்கு: 89037 20129