
அமைதிக்கும், மென்மைக்கும் இலக்கணமாக திகழ்கிறது புறா இனம். இதில் நாட்டிய புறா, ஹோமர், உருளி, கன்னியாஸ்திரி, படாங்கு, மோர்னிங் என்ற தவிட்டு புறா, கிங், நுசக்கி, ரோலர், சிராஸ், விக்டோரியா, கிரவுண்ட், கிரீன், சார்டின், பிரில், ஜிப்ரா புறா, ஊது புறா உட்பட, 344 வகைகள் உலகில் உள்ளன.
பயணிப் புறா இனத்துக்கு தனி இடமுண்டு. அதன் அழகும், வண்ணமும் காண்போரைக் கவரும். பறக்கும் போது, இறகுகளோடு வாலையும் விரித்துக் கொள்வதால், கண்கொள்ளாக் காட்சியாக இருக்கும். பயணிப் புறா, கூட்டமாக வாழும். அடிக்கடி இடம் பெயரும் வழக்கம் உண்டு. அப்போது வானத்தில் பெரும் ஊர்வலம் போல் இருக்கும்.
முதல் மற்றும் இரண்டாம் உலகப் போர்களில், தகவல் பரிமாறுவதில் புறாக்கள் முக்கிய பங்கு வகித்தன. ஐரோப்பிய நாடான ஜெர்மனி, புறாக்களையே துாது அனுப்ப பயன்படுத்தியது.
வட அமெரிக்க மலைப் பகுதியில் இந்த இன பறவைகள் இருந்தன. கூட்டமாக வானில் பறந்தால் ஒரு பகுதியை கடக்க பல மணி நேரம் ஆகும். அமெரிக்கா, மிக்சிகன் நகரில் ஏப்ரல் 8, 1873ல் வான்வெளியில், காலை 7:30 மணிக்கு துவங்கிய பயணிப் புறாக்களின் ஊர்வலம், முடிவதற்கு மாலை 4:30 மணி ஆனது. இப்படி நிறைந்திருந்த பயணிப் புறாக்கள், ரயில் போக்குவரத்து துவங்கிய பின் அழிவை நோக்கின.
வட அமெரிக்காவில், ஐரோப்பியர் குடியேறிய போது, இதை வேட்டையாடத் துவங்கினர். வெறுமனே வலை விரித்தால் போதும்... கொத்துக் கொத்தாக புறாக்கள் சிக்கும். துப்பாக்கியால் சுடும் சத்தத்தால் இதய இயக்கம் நின்று இறந்து விழுந்து விடும். கூட்டமாக பறக்கும் போது, சிறு கட்டையை வீசி பல புறாக்களை கொன்றுள்ளனர்.
கொன்று குவித்து, ரயிலில் நியூயார்க் போன்ற நகரங்களுக்கு அனுப்பினர். புறா மாமிச வர்த்தகம் லாபகரமாக நடைபெற்றது. புறாக்கறி மலிவாக கிடைத்ததால், அமெரிக்கர்களிடம் அதற்கு கிராக்கி ஏற்பட்டது. இதனால் இந்த புறா இனம் அருகியது.
பயணி பெண் புறா, ஆண்டுக்கு 1 முட்டை தான் இடும். எனவே, அழிந்த வேகத்திற்கு ஈடு கொடுத்து, இனப்பெருக்கம் நடக்கவில்லை. இதனால், முற்றிலும் அழியும் நிலைக்கு தள்ளப்பட்டது. மீண்டும், அவற்றைப் பெருக்க மேற்கொண்ட திட்டங்கள் தோல்வி அடைந்தன.
உலகின் கடைசி பயணிப் புறாவின் பெயர் மார்த்தா. அமெரிக்கா ஓகியோ அருகே உள்ள சின்சினாட்டி உயிரியல் பூங்காவில், செப்டம்பர் 1, 1914 மதியம் 1:00 மணிக்கு இறந்தது.
மனிதன் மட்டுமே மேலான உயிரினம் என்ற தவறான எண்ணத்தால் பல அரிய உயிரினங்கள் உலகில் இல்லாமலாகிவிட்டன.
- மு.நாவம்மா