
வேலுார் மாவட்டம், காட்பாடி, செங்கோட்டை எபினேசர் நடுநிலை பள்ளியில், 1948ல், 6ம் வகுப்பில் விருதம்பட்டியை சேர்ந்த தேவதத்தன், உடன் படித்தான். அவன் பெற்றோரும், சகோதரியரும் ஆசிரியர் பணியில் இருந்தனர். பள்ளிக்கு, 'ஓம் பஸ் சர்வீஸ்' என்ற தனியார் பேருந்தில் வந்து செல்வான். இலவச பயண சலுகை சீட்டு பெற்றிருந்ததாக கூறினான். செலவுக்கு வைத்திருக்கும் காசில் வறுத்த பட்டாணி வாங்கி தின்பான். உடனிருந்தால் எங்களுக்கும் தருவான்.
பள்ளியில் இரண்டே ஆசிரியர்கள் மட்டும் இருந்தனர். அதில் ஒருவர் பள்ளி தாளாளரின் மகள் லைசா எபினேசர். தமிழ், கணக்கு பாடங்கள் நடத்துவார். மாதம் ஒருநாள், கட்டுரை எழுத பயிற்சி தருவார். அன்று, 'நான் அமைச்சரானால்!' என்ற தலைப்பில் எழுதியதை ஆய்வு செய்தார். தேவதத்தன் எழுதியிருந்ததை மட்டும் எடுத்து உரக்க படித்தார்.
அதில், 'நான் அமைச்சரானால் காட்பாடி - வேலுார் இடையே ஓம் பஸ் சர்வீஸ் பேருந்துகளை மட்டுமே இயக்குவேன். மாணவர்கள், கட்டணமின்றி பயணிக்க உத்தரவு பிறப்பிப்பேன்; சாப்பிட, பட்டாணி இலவசமாக தருவேன்...' என எழுதியிருந்தான். அனைவரும் சிரித்தோம். எங்களை அடக்கிய ஆசிரியை, எழுதியவனை பாராட்டினார். அவனது உயர்ந்த எண்ணத்தை மெச்சி புகழ்ந்தார். அது மனதில் பதிந்தது.
எனக்கு, 88 வயதாகிறது; தமிழக மின்வாரியத்தில் பணியாற்றி ஓய்வு பெற்றேன். பள்ளியில் அனைத்து மாணவர்களுக்கும் சலுகை கிடைக்க வேண்டும் என்ற மேன்மை சிந்தனையை வெளிப்படுத்திய அந்த பிஞ்சு முகம், மனதை விட்டு மறைய மறுக்கிறது!
- டி.சம்பத், சென்னை.
தொடர்புக்கு: 80154 15177