
சேலம், கோட்டை அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளியில், 2008ல், 8ம் வகுப்பு படித்தேன். மறுநாள் தீபாவளி விடுமுறை. அதற்கு ஏற்ப கரும்பலகையில் ஓவியங்கள் வரைந்து தோழியருடன் விவாதித்தபடி இருந்தோம்.
அப்போது, வகுப்புக்குள் நுழைந்த ஆங்கில ஆசிரியை சாவித்திரியிடம் 'இன்று பாடம் நடத்த வேண்டாம் டீச்சர்... தீபாவளியை கொண்டாடும் மகிழ்ச்சியில் இருக்கிறோம்...' என உரக்கக் கூறினோம். சிரித்தபடி, 'பாடம் தவிர்த்து, பொதுவான கதை ஒன்று சொல்கிறேன்...' என அனைவரையும் அருகில் அமரச் சொன்னார்.
முதல் வரிசையில் ஆர்வமுடன் காதை தீட்டியபடி இருந்தேன். சுவாரசியம் மிக்க ஒரு கதை கூறினார். வகுப்பு நேரம் முடிந்த போது, 'நான் கூறியது பொழுது போக்க அல்ல; துணைப்பாட புத்தகத்தில் உள்ளதை தான் சுவையாக தந்தேன். எதையும் விரும்பி படித்தால் கடினமாக இருக்காது...' என்றார். அவரது இயல்பான செயல் எளிமையாக கற்கும் வழியை காட்டியது.
என் வயது, 28; வங்கியில் பணி செய்து வருகிறேன். அந்த ஆங்கில ஆசிரியை கற்றுத்தந்த வழிமுறையை பயன்படுத்தி தான் போட்டித் தேர்வில் வெற்றி பெற்றேன். அவர் கூறிய ஒவ்வொரு வார்த்தையும் மனதில் பதிந்துள்ளது. நல்வழி காட்டியவரை நன்றியுடன் வணங்கி வாழ்கிறேன்!
- ரேவதி பாலாஜி, சேலம்.