
அதிகாலை துவங்கிய மழை இன்னும் ஓய்ந்தபாடில்லை.
திறந்திருந்த ஜன்னல் வழியாக, இதமான காற்று வீட்டிற்குள் நுழைந்தது.
அலைபேசியை தேய்த்தவாறே, ஹாலுக்கு வந்தார் அருண்.
''அந்த, 'டிவி'யில் சத்தத்தை குறைத்து வை...''
மூன்றாம் வகுப்பு படிக்கும் மகள் அனுவுக்கு உணர்த்த முயன்றார்.
அது அவள் காதில் விழுந்ததாக தெரியவில்லை.
'கனமழை காரணமாக, பள்ளி, கல்லுாரிகளுக்கு விடுமுறை. மேலும், இரண்டு தினங்களுக்கு கனமழை தொடரும்...'
செய்தி வாசித்துக் கொண்டிருந்த போதே, 'டிவி' திரை கார்ட்டூன் சேனலுக்கு மாறியது.
''இன்னைக்கி ஸ்கூல் லீவா...''
கேட்டார் அப்பா.
'டிவி'யிலிருந்த கவனத்தை மாற்றாமல் தலையசைத்தாள்.
உடனே, 'டிவி'யை நிறுத்தியபடி சோபாவில் அமர்ந்தார் அப்பா.
''மழை பெய்யும் போது, அதன் அழகை ரசிக்காம, இப்படி, கார்ட்டூன் பார்த்துகிட்டு இருக்கியே...''
மகளை செல்லமாக கடிந்தார்.
''மழை பெய்யும் போது என்னப்பா செய்ய முடியும்...''
சலிப்பாக பதில் கூறினாள் அனு.
''வா மழைத்தண்ணீரில் கப்பல் விட்டு விளையாடலாம்...''
அவளை உற்சாகம் தொற்றியது.
பழைய செய்தித்தாளை எடுத்து வந்து, அப்பாவிடம் கொடுத்தாள்.
சிறிது நேரத்துக்கு பின் -
வீட்டு வாசலில் மழை நீரில் காகித கப்பல் படை ஒன்று அணி வகுத்தது.
நனைந்தவாறே சத்தமிடும் குருவிகள், நீலவானுக்கு வண்ணமடித்த வானவில் என புது அனுபவத்தை பெற்றாள் அனு.
கிராமத்தில் வாழ்ந்த போது பெற்ற மழைக்கால அனுபவத்தை, மகளுடன் பகிர்ந்தார் அருண்.
''விடுமுறையில் ஊருக்கு அழைத்துப் போங்கப்பா. குளத்துல மீன் துள்ளுவதை பார்க்கலாம்...''
வேண்டுகோள் வைத்தாள் அனு.
நம்பிக்கையான பதில் அப்பாவிடம் இருந்து வந்தது.
மழைச்சாரலில் ஆனந்தமாக ஆட்டம் போட்டாள் அனு.
குழந்தைகளே... இயற்கையின் அரிய கொடையான மழையை ரசித்து, தண்ணீரை சேமித்து வளம் காப்போம்!
●●●