
புலியின் காதின் பின்புறம் ஒருவித வெள்ளை நிற புள்ளிகள் காணப்படுகின்றன. இதை, பொட்டுக்கண் என்பர். ஆங்கிலத்தில், 'ஓசெல்லி' எனப்படுகிறது. இதன் பயன்பாடு பற்றி சரியான விளக்கம் அறியப்படவில்லை. ஆனால், பல ஊகங்களை முன்வைத்துள்ளனர், காட்டுயிரின ஆய்வாளர்கள்.
அதன்படி...
* புலியின் எதிரி, அதன் பின்புறமாக வந்தால் பொட்டுக்கண்களை கண்டதும் பயந்து ஓட வாய்ப்பிருக்கிறது
* புலியின் தலை திரும்பியிருக்கும் நிலையிலும் கூட, தன்னைப் பார்ப்பதாக எதிரி விலங்கு எண்ணி பயந்து ஓட வாய்ப்புண்டு.
பின்புறத்தில் வந்து எதிரி தாக்கினால் சமாளித்து ஏய்க்க வசதியாக பொட்டுக்கண் பயன்படலாம் என்ற கருத்தும் உள்ளது.
இது தவிர...
அடர்ந்த காட்டுப்பகுதியில் தாய் செல்லும் போது, குட்டிப்புலிகள் பின்தொடர வேண்டியிருக்கும். அப்போது, புலியின் காதுகளின் பின்புறம் அமைந்துள்ள பொட்டுக்கண் வழிகாட்டியாக உதவலாம் என்ற கருத்தும் உள்ளது. காட்டில் புலிகள் இடையே தொடர்புக்கு இது பயன்படலாம். உருமறைப்பு, பாதுகாப்பு போன்றவற்றுக்கும் பொட்டுக்கண் உதவலாம் என்ற கருத்தும் ஆய்வாளர்களிடம் உள்ளது.

