
ரம்மியமான சூழலில் அமைந்திருந்தது தேனருவி அரசு பள்ளி.
பாலனும், பாபுவும் அங்கு, 9ம் வகுப்பு படித்தனர்.
படிப்பில் தீவிர கவனம் செலுத்தினான் பாலன். எப்போதும் வகுப்பில் முதன்மையாக திகழ்ந்தான்.
ஆனால், பாபுவுக்கு சற்று கவனக்குறைவு. தேர்ச்சி பெறவே சிரமப்படுவான்.
படிப்பில் வேறுபாடு இருந்தாலும் இருவரும் நட்புடன் பழகினர்.
புதிதாக வகுப்பில் சேர்ந்திருந்தாள் கோமதி.
நன்றாக படிக்கும் அவளுடன் பாலனும், பாபுவும் நட்புடன் பழகினர். இனிமையாக கலந்துரையாடினர்.
அன்று காலாண்டு தேர்வு முடிந்து, திருத்திய விடைத்தாளை மாணவர்களிடம் கொடுத்தார் ஆசிரியை.
இரண்டாம் ரேங்க் பெற்றிருந்தான் பாலன். ரேங்க் கார்டை பெற்றதும் குழப்பமடைந்தான். முதலிடம் யார் என யோசித்தபடியே இருந்தான்.
''முதல் ரேங்க் கோமதி...''
அறிவித்து வெகுவாக பாராட்டினார் ஆசிரியை.
பின், தேர்ச்சி பெறாதோரை தேற்றி, ''பாடங்களை கவனமாக படிக்க வேண்டும்...'' என அறிவுறுத்தினார்.
கோமதி, முதலாவதாக வந்து பாராட்டு பெற்றதை கண்டு எரிச்சல் அடைந்தான் பாலன். அது, மனதில் பொறாமையாக மாறியது.
இனி கோமதியிடம், நட்பு பாராட்டப் போவதில்லை என முடிவு செய்தான்.
பாபுவையும் நட்பை முறிக்க சொல்லி விட்டான்.
கோமதியை இருவரும் தவிர்த்தனர்.
அவளும் காரணம் புரியாமல் விட்டுவிட்டாள்.
சி ல மாதங்களுக்கு பின் -
அரையாண்டு தேர்வு வந்தது.
முதல் ரேங்க் பெறும் எண்ணத்துடன் படித்தான் பாலன்.
பாடங்கள் நினைவில் பதியவில்லை.
மனதில், 'கோமதி முதல் ரேங்க் பெற்று விடுவாளோ' என்ற எண்ணம் வந்தபடியே இருந்தது. அவளை தோற்கடிக்கும் வன்மம் மனதில் நிலவியது.
தேர்வுக்கு முன் பாபுவுடன் சேர்ந்து ஒரு திட்டம் போட்டான் பாலன்.
''கோமதியின் பரீட்சை அட்டையின் கீழே பிட்டு பேப்பரை வெச்சுடுவேன். மிஸ் பாத்தால், அவளைத் திட்டுவாங்க. காபி அடிச்சு அதிக மார்க் வாங்கினதாக சொல்வாங்க; எப்படி என் யோசனை...''
செய்யப்போவதை குரூரமாக விளக்கினான்.
''நல்ல யோசனை...''
ஏற்றி விட்டான் பாபு.
தேர்வு துவங்கவிருந்தது.
புத்தகப்பைகளை வகுப்பறைக்கு வெளியே வைக்க உத்தரவிட்டார் ஆசிரியை.
அப்போது, கோமதியின் பரீட்சை அட்டையின் கீழ், பிட்டுதாளை நைசாக வைத்து விலகினான் பாலன்.
தேர்வறையில் அமர்ந்தனர் மாணவ, மாணவியர்.
அனைவரையும் சோதித்தார் ஆசிரியை.
கோமதியையும் முழுமையாக சோதித்தார். எதுவும் சிக்கவில்லை.
பாலனும், பாபுவும் ஒன்றும் புரியாமல் விழித்தனர்.
தேர்வு முடித்து வெளியே வந்த கோமதி, ''இந்தா உன் பிட்டு பேப்பர்...'' என பாலனிடம் கொடுத்தாள்.
''இல்ல... என்னோட பிட்டு பேப்பர் இல்ல இது...''
''என் பரீட்சை அட்டையில் நீ பிட்டு வெச்சத பார்த்தேன். உடனே வந்து எடுத்துட்டேன். எதுக்காக இப்படி செய்யுற...''
''ஆமாம்... நான் தான் வெச்சேன். நீ முதல் ரேங்க் எடுத்தது பிடிக்கல. நான் தான் எப்பவும் முதல் ரேங்க் வருவேன், உன்னால எல்லாம் போச்சு. அதான் உனக்கு கெட்ட பேரு வர்ற மாதிரி செஞ்சேன்...''
திமிராக கூறினான் பாலன்.
''நீயும் முதலிடத்திற்கு வர முயற்சி செய்... அதை விடுத்து எனக்கு கெட்ட பேரு வரணும்னு ஏன் நினைக்கிற... அதுனால உனக்கு என்ன பயன். நான் நெனைச்சிருந்தா, அப்பவே, மிஸ்கிட்ட உன்னை காட்டிக் கொடுத்திருப்பேன். பிட்டுல இருக்கிறது உன் கையெழுத்து தான்னு நல்லாவே தெரியும். அப்பறம் உன்னோட நிலைமை என்னாகும்... சொல்லு... இனிமேலாவது முயற்சி செய்து முன்னேறு...''
பாலனும், பாபுவும் தலைகுனிந்தனர். தவறை எண்ணி வருந்தி மன்னிப்பு கேட்டான் பாலன்.
''சரி... நல்லா படிச்சு உயர்ந்த நிலையை அடையணும்...''
அமைதியாக கூறினாள் கோமதி.
மனம் கனிந்து உருகி மூவரும் நட்பை புதுப்பித்தனர்.
சுட்டீஸ்... படிப்பில் போட்டி போடலாம்; பொறாமை கூடாது.
- ஆர்.லட்சுமி

