
கடலின் ஆழத்தில் வாழும் கல் மீன் ஆச்சரியம் தரும். இந்திய பெருங்கடல், மன்னார் வளைகுடாவில் காணப்படுகிறது. இதில், ஐந்து இனங்கள் உள்ளன. பழுப்பு மற்றும் சாம்பல் நிறத்தில், சிவப்பு, மஞ்சள், ஆரஞ்சு நிற கலவையுடன் காணப்படும். கல் போன்று கரடு முரடாக இருப்பதால், இதை கண்டறிவது மிகவும் கடினம். பெரும்பாலும், தனியாகவே வசிக்கும் இயல்புடையது.
இது, 20 அங்குலம் நீளம் வரை வளரும். அதிகபட்சமாக, 3 கிலோ வரை எடை இருக்கும். ஆழ்கடல் பாறை இடுக்கிலும், பவளப்பாறையை தழுவிய படியும் வாழும். ஆறுகளிலும் காணப்படுகிறது. சிறிய மீன், இறாலை உணவாக கொள்ளும். மெதுவாக நீந்தும். நீருக்கு வெளியே, 20 மணி நேரம் உயிரோடு இருக்கும். லட்சக்கணக்கில் முட்டை இடும். இவற்றை மற்ற மீன்கள் சாப்பிடும். மீதமுள்ளவற்றில் குறைந்த எண்ணிக்கையில் தான் குஞ்சுகள் வெளி வரும். இதன் ஆயுட்காலம், 10 ஆண்டுகள் வரையுள்ளது.
இந்த மீனின் முதுகுப்புற துடுப்பு, 13 முட்கள் உடையது. துடுப்பின் கீழ் பகுதியில் விஷத்தன்மை உடைய திரவ பை இருக்கிறது. ஆபத்து நேரங்களில் முதுகுப்புற முட்கள் பெருக்கும். அதை மிதித்தால் விஷம் உடலில் ஏறி ஆபத்தை விளைவிக்கும்.
கல் மீனின் ஒவ்வொரு முட்களுக்கு அடியிலும் சுரப்பி அமைந்திருக்கிறது. சுரப்பிகளின் மீது அழுத்தம் ஏற்படும் போது விஷம் வெளியேறும். அழுத்தத்திற்கு தகுந்தாற் போல் விஷத்தின் அளவு இருக்கும். விஷம் காலியான இரண்டு வாரங்களில் பையில் மீண்டும் நிரம்பி விடும்.
இந்த மீனின் வினோத தோற்றம், பார்வையாளர்களை கவரும். தனி ரசிகர் கூட்டம் உண்டு. ஆசிய நாடுகளான, சீனா, ஜப்பானில் உணவாக பயன்படுகிறது.
- விஜயன் செல்வராஜ்