
புதுடில்லி, தமிழ் கல்விக்கழக பள்ளியில், 1986ல், 9ம் வகுப்பு படித்தபோது நடந்த சம்பவம்...
வகுப்பாசிரியையாக இருந்த லலிதா மாதவன், மிகவும் கண்டிப்பானவர். தவறு செய்தால் தண்டனை நிச்சயம். ஒவ்வொரு நாளும் யாருக்காவது பிரம்படி கிடைக்கும்.
பள்ளியில் கல்விக் கட்டணமாக, 3 ரூபாய் 80 காசு நிர்ணயிக்கப்பட்டிருந்தது. உடன் படித்தவன் அன்று கட்டணம் செலுத்த நான்கு ரூபாயை கொடுத்தான்.
மீதம், 20 காசு திரும்பித்தர கைவசம் சில்லரை இல்லாததால் வகுப்பு முடிந்தபின் வாங்கித் தருவதாக கூறினார் வகுப்பாசிரியை.
சற்றும் தாமதிக்காமல், 'பரவாயில்லை டீச்சர்... சில்லரையை நீங்களே வைத்துக்கொள்ளுங்கள்...' என்றான் அந்த மாணவன். அடுத்த நொடி, அவன் கன்னத்தில் பளாரென ஒன்று கொடுத்து, 'உனக்கு, 20 காசு அவ்வளவு இளக்காரமாய் போய்விட்டதா... எவ்வளவு கஷ்டப்பட்டு உன் பெற்றோர் சம்பாதிக்கின்றனர் என்பதை முதலில் அறிந்து கொள்...' என அறிவுரைத்து புரிய வைத்தார். இது அனைவருக்கும் பாடமாக அமைந்தது.
இப்போது என் வயது 52; தனியார் நிறுவனத்தில் ஒருங்கிணைப்பாளராக பணிபுரிகிறேன். பள்ளியில் நடந்த அந்த நிகழ்வு பசுமரத்தாணி போல் நெஞ்சில் பதிந்துள்ளது. அதன் விளைவாக, எனக்கு வரவேண்டியதை எந்த சூழலிலும் அனாவசியமாக விட்டு தரமாட்டேன். பயணங்களின் போது மாற்று சில்லரையை தவறாமல் கேட்டு வாங்கி கொள்வேன். கொடுப்பதாயிருந்தாலும் தவிர்க்க மாட்டேன். சேமிப்புடன், திட்டமிட்டு செலவிடக் கற்றுத்தந்த வகுப்பாசிரியை லலிதா மாதவனை போற்றுகிறேன்.
- ராஜலக்ஷ்மி, புதுடில்லி.